mumetha கவிஞர் மு. மேத்தா

துடி துடிக்கும்
இதயங்களோடு நீங்கள்
கூடியிருப்பது
நின்று விட்ட
அந்த இதயத்திற்கு
நினைவாஞ்சலி செலுத்தவோ?

வீதியெலாம்
வெடி வெடித்து
வருடந்தோறும் – தன்
வருகையைத்
தெரிவித்துக் கொள்கிற
தீபாவளி

இந்த வருடந்தான்
எங்கள்
இதயத்தில் வெடிவெடித்துத்
தன் வருகையை
எடுத்துரைத்தது!

கவிஞர் கண்ணதாசன் மறைந்த நான்கைந்து நாட்களில் ஏ.எல்.எஸ். நிறுவனத்தின் சார்பில் திரு.கண்ணப்பன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கவியரங்கத்தில் நான் படித்த வரிகள் இவை.

கவிஞர் கண்ணதாசனை முதன்முதலாகச் சந்தித்தபோது அவருடைய தலைமையில் நடந்த கவியரங்கில் கவிதை பாடிக் கொண்டிருந்தேன். நான் படித்த கவிதையின் தலைப்பு: “இளைஞர்களே விழித்தெழுவீர்!”

அவரை நான் கடைசியாகச் சந்தித்ததும் அவருடைய தலைமையில் நடந்த ஒரு கவியரங்கத்தில் கலந்து கொண்ட போதுதான் . அப்போது நான் படித்த கவிதையின் தலைப்பு” “பிரிவு!”

கண்களைப் பிழிந்து கொள்ளும்படி கவிஞரின் பிரிவு நிகழப் போகிறதென்பது அப்போது எனக்குத் தெரியுமா?

1964-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்த் தேசிய கட்சி தொடங்கப்பட்டிருந்த சமயம். ‘தும்பைப் பூப் போன்ற ஆடை; தூய்மையே நிறைந்த நெஞ்சம்; வம்புசெய் கூட்டத்திற்கு வாள் இவன்; நமக்குத் தென்றல்; சம்பத்துத் தலைவன்’ என்று நான் அந்த வயதிலேயே பாடிப் பாராட்டிய சொல்லின் செல்வர் சம்பத் அவர்களும் கவிஞரும் மதுரை வந்திருந்தனர்.

என் அன்பிற்குரிய அண்ணன் ப. நெடுமாறன் அவர்கள் அப்போது கவிஞருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

பதினெட்டு வயதில் அந்தப் பாட்டுச் சிகரத்தின் பக்கத்தில் நின்று ‘இளைஞர்களே விழித்தெழுவீர்’ என்று முழங்கும் இனிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிஞருடைய காதுகளில் என் கவிதையும், கண்களில் நானும் புகுந்துக் கொண்ட பொன்னான பொழுது அது.

மதுரை வரும் போதெல்லாம் மிட்லண்ட் ஹோட்டலில் அவர் தங்குவார்.

தியாகராசர் கல்லூரியில் நான் படித்த நாட்களில் நந்தவன நாட்கள் அவை!

கவிஞரின் வருகையை அறிந்துக் கொண்டு நானும் என் நண்பர்களும் கூட்டமாகச் சென்று அந்தக் குயிலை முற்றுகையிடுவோம். அந்தச் சிவப்புக் குயில் எங்களுடன் சிநேகமாகப் பேசிக் கொண்டிருக்கும்.

வார்த்தைகள் வாயிலிருந்து வருவதில்லை. மனசிலிருந்து வந்துகொண்டிருக்கும்.

கவிஞருடைய கம்பீரமான அந்த அழகிய தோற்றத்தின்மீது எனக்கொரு மயக்கம் இருந்து கொண்டே இருந்தது. எத்தனை பெரிய சபையையும் ஈடு செய்கிற நிறைவான தோற்றம் அது. சின்ன உருவத்துடன் சிரமப்பட்டு – பெரிய பெரிய சபைகளை பிரகாசிக்க வைத்துக்  கொண்டிருப்பவர்களெல்லாம். கவிஞரைப் போன்ற ஆஜானுபாகுவான தோற்றம் தமக்கு அமையவில்லையே என்று வருந்துவது இயல்பானதுதான்!

கவிஞரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், மனநிலை சரியில்லாமல் இருந்தாலும், அண்ணன் இராம. கண்ணப்பன் அவர்கள், “மேத்தா வந்திருக்கிறார்” என்று அவரிடம் சொல்லும்போது, கவிஞருடைய முகத்தில் ஒரு முறுவல் மலரும், அவருடைய பேச்சில் ஒரு பிரகாசம் தெரியும்.

கோவையில் நான் இருந்தபோது சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்தேன். நண்பர் ஒருவருடன் கவிஞருடன் வீட்டுக்குச் சென்றேன். கவிஞர் அப்போது ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.

அற்புதமான காவியம் ஒன்றினை அவர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் – “உண்மைதான் மேத்தா! எனக்கும் அது உறுத்திக்கொண்டே இருக்கிறது. விரைவில் எழுத வேண்டும்” என்று கூறினார்.

ஆனால் – அவருடைய காலத்தின் பெரும்பகுதி அற்ப அரசியலிலும், மது, மாது, என்ற சொற்ப சுகங்களிலும் கரைந்து மறைந்தது.

அவன்
மதுக்குவளைகளில் தன்
முகம் பார்த்துக் கொண்டான்.
நல்ல தமிழ்க் கவிதைகளில் – தன்
நடை பார்த்துக் கொண்டான்.
இளைய மயில்களிடம்
எடை பார்த்துக் கொண்டான்.

என்று அவரைப்பற்றி நான் எண்ணிப் பார்க்குமாறு நேர்ந்தது.

கவிஞரின் பலம் எதுவோ அதைப் பின்பற்றாமல் அவருடைய பலவீனத்தை மட்டும் பின்பற்ற, ஈசல் இறகுகளாய் உதிர்ந்த, உதிர்கிற இளைஞர்களுக்காக நான் இப்போதும் அனுதாபப்படுகிறேன்.

நல்ல மனிதனாக இல்லாதவன் நிச்சயமாக ஒரு நல்ல கவிஞனாக இருக்க முடியாது.

நல்ல மனிதனாக இல்லாத ஒருவன் அருமையான கவிஞன் என்று புகழ் பெறுவானேயானால் – ஒன்று அவனைப் பற்றிய அபிப்பிராயம் பொய்யாக இருக்க வேண்டும்; அல்லது அவனுடைய கவிதை பொய்யாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய சித்தாந்தம்.

ஒரு நதியைப் போல
அடிக்கடி தன் பாதைகளை
மாற்றிக் கொண்டான் – ஆனாலும்
அவனுடைய இதயத்தின் அடித்தளதில்
ஈர நீரோட்டம்
இருந்துக் கொண்டே இருந்தது

என்று நான் எழுதியது கவிஞரைப் பற்றி உணர்ந்து புகழ்ந்த உண்மையாகும்.

கவிஞரின் அடக்கமும், எளிமையும், அகங்காரமற்ற தன்னம்பிக்கையும், யாரையும் நேசிக்கிற இயல்பும் என்னைப் போன்றவர்களைக் கவர்ந்த இனிய பண்புகளாகும்.

திரைத்திறையில் கவிஞருடைய சாதனை அபூர்வமானது. அவரைப் போலவே ஆணவமில்லாத எளிமையான அவருடைய பாடல்கள், தமிழ் மக்களின் மனசுகளில் சிறகடிக்கும் மாடப் புறாக்களாயின.

ஒவ்வொருவனும் தன் உள்ளத்து உணர்வுகளின் எதிரொலியைக் கவிஞருடைய எளிமையான பாட்டு வரிகளில் கேட்டுக் கொண்டான்.

வார்த்தைகளைச் சீவிச் சிங்காரிப்பதிலேயே காலம் கடத்திக் கொண்டிருந்தால், உணர்வுகள் அதுவரைக்கும் உட்கார்ந்திருக்குமா? ஓடிப் போய் விடாதா?

எனவே, கவிஞர், சொற்களுக்குள் மூழ்கி சுகம் காண்பது எக்காலம்? என்று சொக்கிப் போகாமல், மன உணர்வுகளை வார்த்தைகளில் வடித்தெடுத்தார். “எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது. எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது” என்று இதயத்தின் ஏக்கங்களையெல்லாம் மிக எளிமையான சொற்களில் படம் பிடித்தார்.

திரைப்படப் பாடல்களில் கவிஞருக்கு இருக்கும் இடத்தை எளிதாக அடைய எவராலும் இயலாது. கவிஞர் மறைந்த நான்கைந்து நாட்களில் ஏ.எல்.எஸ்.நிறுவனம் நடத்திய இரங்கல் கவியரங்கத்தில், கவிஞர் மறைவிற்குப் பின் என்ன நடக்கும் என்பதை இப்படிப் படம் பிடித்தேன்:

இன்னும்சில கவிவாணர்
இதுநல்ல வாய்ப்பென்று
இடம்பிடிக்க எழுந்துவரலாம்!

இதயத்தில் ஒட்டாமல்
இதழொட்டும் விதங்களிலே
கவிதைகளைக் கொண்டுதரலாம்!

பின்னணியும் விளம்பரமும்
பெருங்கைகள் தூக்கிவிடும்
பின்பலமும் வெற்றி பெறலாம்!

இனியொருவர் தனியாக
நிரப்பிவிட முடியாத
இசைப்பாடல் அரியாசனம்!”

பேதையரின் வீதிகளில்
போதைகளத் தோறுவித்துப்
பெயரோடு புகழும்பெறலாம்!

என்னதான் கவிவாணர்
எழுந்தாலும் நடந்தாலும் – நீ
இருந்த உன்சிம்மாசனம்

– கவிஞர் மு. மேத்தா