Archive for March, 2009

மாநில சுயாட்சி !

குதிரைஒரு முட்டைஇட
…..கோழிஅதை அடைகாக்கக்
……….குட்டியானை பிறக்கும்;
    குரங்குவயிற் றிருந்துவரும்
……….புனுகுஜவ் வாதுஅதில்
……………குங்குமப் பூவிருக்கும்;

மதுரைநகர் ஒருநாளில்
…..வானிலே பறந்தோடி
……….மாமண்டூர் அருகிலிறங்கும்;
……மாங்காயின் உள்வாயில்
……….தேங்காயும் இளநீரும்
……………மாதுளம் பழமுமிருக்கும்!

அதிசயங் காணலாம்
…..மாநிலசு யாட்சியில்
……….அடையவா என்தோழனே!
……ஆற்றறிவில் ஓரறிவு
……….போனவர்கள் அனைவரையும்
……………அழைக்கின்றேன் வருகவென்றே!

– கவிஞர் கண்ணதாசன்

கவிஞரைச் சாடிய வாலி

Kavingar Vali

எம்.ஜி.ஆரின் அன்பு கடாட்சத்திற்குத் தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்ட கவிஞர் வாலி, செப்டம்பர் 1963-ல் வந்த பேசும் படம் இதழில் “கவிதையில் ஒரு கலைஞர்” என்ற கவிதையை வடித்தார் வாலி.

“மின்னல் வேகத்தில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளங்கவிஞர் வாலி மக்கள் திலகத்தைப் பற்றி எழுதிய கவிதை” என்ற அறிவிப்புடன் வந்தது அது.

வங்கக் கடல் கடைந்த செங்கதிர் வண்ணம் போல்
சிங்கத் திருமுகம் செவ்விதழில் புன்சிரிப்பு!
வெள்ளம்போல் கருணை, வள்ளல் போல் வடிவம்

என்று எழுதுவதற்கு முன் ..

பாமலைப் பாடியிவன் பெருமைகளைப் பேசுகையில்
காமலைக் கண்கள் என்னை காக்காய் எனத் தூற்றும்!
நாய்க் குரைத்தால் நாய்க்குத்தான் வாய் வலிக்கும் தெரியாதா?
நேற்றுவரை போற்றுவதும், போற்றிப் பின் தூற்றுவதும்
காற்றடிக்கும் திசை மாறும் காற்றாடி குணம் கொண்டு
நாவிதன் கத்தியென நாவைப் புரட்டுவோர்
காவியக் கவிஞரென கொலுவிருக்கக் கண்டதுண்டு!
அதுபோல வரவில்லை, அவதூறும் பெறவில்லை! ..

எம்.ஜி.ஆருக்கு புகழ் மாலை மட்டுமல்ல,  கண்ணதாசனுக்கு சாட்டையடி போல் ஒலிக்கும் வரிகள்.

(வாமனன் எழுதிய “டி.எம்.எஸ். – ஒரு பண்பாட்டு சரித்திரம்” என்ற நூலிலிருந்து)

தாத்தா பாடல்

mgr

எம்.ஜி.ஆரிடமிருந்து வேறுபட்டு, அரசியல் மேடைகளில் அவரை விளாச ஆரம்பித்தார் கண்ணதாசன்.

“பணத்தோட்டம்” படத்தில் ‘ஜவ்வாது மேடையிட்டு“ப் பாடலை கண்ணதாசன் எழுதியிருந்த நேரம்.

“செம்மாதுளை பிளந்து தா தா தா” என்பது சரணத்தின் கடைசி வரி. “இப்போதுதான் எம்.ஜி.ஆருக்கு ‘தாத்தா பாடல்’ எழுதிவிட்டு வருகிறேன்” என்றாராம் கண்ணதாசன்.

தன்னுடைய கடைசி படம்வரை இளம் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆருக்கு வயதாகி விட்டது என்று 1962-63-ல் கிண்டலடித்தார் கண்ணதாசன்

e0ae9ae0aebfe0aeb5e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0aebee0aeb0e0af8d

வாழும்போது ஒருவரை புகழ்வதைவிட, அவர் இறந்தபின்னரும் புகழ்வது கடினமான காரியம்.  ரசிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் நெஞ்சத்தில் எப்போதும் நிறைந்திருப்பவர் கண்ணதாசன். கவிதையில் வீச்சு, எழுத்து நடையில் எளிமை என அவர் தனிபாணியே வகுத்துவைத்திருந்தார். காதல், தத்துவம், ஆன்மிகப் பாடல்களில் கற்பனையின் உச்சத்துக்கே சென்றவர் கண்ணதாசன்

நடிகர் சிவக்குமார்.

காலக்கணிதம்

Kannadasan

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!

உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்!

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல!

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரப் பதுதான் நாட்டின் சட்டம்!

கவியரங்கக் கவிதை

Kannadasan

(இது கலைஞர் கருணாநிதி தலைமையில் சேலத்தில் நடைபெற்ற கவியரங்கில் கவியரசு கண்ணதாசன் பாடிய கவிதை வரிகள்)

முச்சங்கங் கூட்டி
…..முதுபுலவர் தமைக்கூட்டி
அச்சங்கத் துள்ளே
…..அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
…..சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
…..அமைத்த பெருமாட்டி !

வட்டிக் கணக்கே
…..வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
…..சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
…..சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
…..விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
…..உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
…..போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
…..ஏழை வணங்குகின்றேன்!

மலையளவு நெஞ்சுறுதி
…..வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
…..கனிந்துருகும் கவிக்கனிகள்
இவைதலையாய் ஏற்றமுற்று
…..இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
…..அன்புமிகும் என்தோழ!

கூட்டத்தைக் கூட்டுவதில்
…..கூட்டியதோர் கூட்டத்தில்
நாட்டத்தை நாட்டுவதில்
…..நற்கலைஞன் நீயிலையோ!
அந்தச் சிரிப்பலவோ
…..ஆளையெலாம் கூட்டிவரும்
அந்தச் சிறுமீசை
…..அப்படியே சிறைப்படுத்தும்
சந்திரனைப் போலத்
…..தகதகவென்றே ஒளிரும்
அந்த வழுக்கையில்தான்
…..அரசியலே உருவாகும்!
எந்தத் துயரினிலும்
…..இதயம் கலங்காதோய்!
முந்துதமிழ் தோழ!
…..முனைமழுங்கா எழுத்தாள!
திருவாரூர்த் தேரினையே
…..சீராக்கி ஓடவிட்டுப்
பல்கும் மழைத்துளியைப்
…..பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதி தலைவ!
…..கவிதை வணக்கமிது!

போட்ட கணக்கிலொரு
…..புள்ளி தவறாமல்
கூட்டிக் கழித்துக்
…..குறையாப் பொருள்வளர்க்கும்
நாட்டுக்கோட்டை மரபில்
…..நானும் பிறந்தவன்தான்
ஆனாலும் என்கணக்கோ
…..அத்தனையும் தவறாகும்!
கூட்டுகின்ற நேரத்தில்
…..கழிப்பேன்: குறையென்று
கழிக்கின்ற நண்பர்களைக்
…..கூட்டுவேன்; கற்பனை
பெருக்குவேன்; அத்தனையும்
…..பிழையென்று துடைப்பத்தால்
பெருக்குவேன்; ஏதேதோ
…..பெரும்பெரிய திட்டங்கள்
வகுப்பேன்; வகுத்ததெலாம்
…..வடிகட்டிப் பார்த்தபின்பு
சிரிப்பேன்! அடடா! நான்
…..தெய்வத்தின் கைப்பொம்மை!

அன்றொருநாள் எந்தன்
…..அப்பனோடும் என்அன்னை
ஒன்றாமல் சற்றே
…..ஒதுங்கிக் கிடந்திருந்தால்
என்பாடும் இல்லை!
…..என்னால் பிறர்படைத்த
துன்பங்க ளில்லை!
…..சுகமாய் அவர்கண்ட
கூட்டலினால் என்னைஇங்கே
…..கூட்டிவந்து விட்டுவிட்டார்
கூட்டிவந்து விட்ட
…..குறைமதியை என்தோழர்
மேடையிலே கூட்டி
…..விளையாட விட்டுவிட்டார்
எத்தனையும் கூட்டி
…..ஐந்தொகை போட்டுப்பார்த்தால்
இத்தனைநாள் வாழ்வில்
…..எதுமிச்சம்? என்அன்னை
தந்த தமிழன்றிச்
…..சாரம் எதுவுமில்லை
‘போனால் போகட்டும்
…..போடா! இறந்துவிட்டால்
நானாரோ நீயாரோ!’
…..நல்ல பொழுதையெலாம்
அழுதே கழிக்காமல்
…..ஆடித்தான் பார்க்கின்றேன்!
கொத்தும் இதழழகும்
…..கொஞ்சும் இடையழகும்
சேலம் விழியழகும்
…..சேர்த்துப் பிறந்திருக்கும்
கோலக் கிளிமொழிகள்
…..கூட்டத்தைக் கூட்டுகின்றேன்!
கையில் மதுக்கிண்ணம்
…..கன்னி இளங்கன்னம்
காதலுக்கே தோன்றினான்
…..கவிஞன்எனும் வண்ணம்

இரவை பகலாக்கி
…..இன்பத்தைக் கூட்டுகின்றேன்!
அரசியலைப் பேசி
…..ஆத்மச் சிறகுகளை
உரசிக் கொதிக்கவைத்த
…..உற்பாதம் தீர்ந்துவிட்டேன்!
உடைந்துவிட்ட கண்ணாடி
…..ஒருமுகத்தைக் காட்டாது!
ஒடிந்துவிட்ட மரக்கிளையை
…..ஒட்டிவைத்தால் கூடாது!
காலம் சிறிதென்
…..கனவுகளோ பலகோடி!
காதல் ரசத்தினிலே
…..கனியக் கவிபாடிக்
கனவில் மிதக்கின்றேன்
…..கற்பனை நீராடி!
எண்ணிவந்த எண்ணம்
…..எல்லாம் முடிந்ததென்று

கிண்ணம் உடைந்தால்என்
…..கிறுக்கும் முடிந்துவிடும்!
பிறப்பில் கிடைக்காத
…..பெரும்பெரும் வாழ்த்தொலியும்
இறப்பில் கிடைக்காதோ?
…..என்கவிக்குத் திறமிலையோ?
அண்ணனுக்குப் பின்னால்
…..அழுதுவந்த கூட்டமெலாம்
கண்ணனுக்குப் பின்னாலும்
…..கதறுவர மாட்டாதொ!
‘வாழ்ந்தநாள் வாழ்ந்தான்;
…..வாழத் தெரியாமல்
மாண்டநாள் மாண்டான்!
…..மானிடத்தின் நெஞ்சத்தை
ஆண்டநாள் ஆண்டான்!
…..ஆண்டவனின் கட்டளையைத்
தோள்மீதில் ஏற்றுத்
…..தொடர்ந்தான் நெடும்பயணம்’

என்பாரும், ‘பாவி!
…..எவ்வளவோ பொருள் சேர்த்தான்
எல்லாமே தொலைத்தான்;
…..எம்மைக் கதறவிட்டுப்
போயினன்’ என்று
…..புலம்பியழும் பிள்ளைகளும்
கூட்டத்தில் சேர்ந்துவரும்!
…..குழப்பம் முடிந்ததென
நிம்மதியும் சில்லோர்
…..நெஞ்சி பிறந்திருக்கும்!
‘ஏடா அவலம்;
…..என்ன இது ஒப்பாரி?’
என்பீரோ! சொல்வேன்!
…..எல்லாம் மனக்கணக்கு!
கூட்டல் எனஎன்பால்
…..குறித்துக் கொடுத்தவுடன்
கூட்டித்தான் பார்த்தேன்
…..குடைந்து கணக்கெடுத்தேன்
முடிவைத்தான் பாட
…..முந்திற்றே யல்லாமல்
வாழ்வைநான் பாட
…..வார்த்தை கிடைக்கவில்லை