Archive for September, 2009

கவியரசருக்கு செல்வனின் கேள்வி :

பண்புடன் குழுமத்தில் செல்வன் என்ற அன்பர் கேட்கும் கேள்வி இது :

கவியரசே…!   “காதலெனும் பரிசு தந்தேன் கட்டிலின் மேலே” என்று தலைவனையும் “அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே” என்று தலைவியையும் பாடவைத்திருக்கிறாயே? காதல் என்பது தலைவன் தலைவிக்கு அளிக்கும் கருணையா? இது நியாயமா?

60-களில் உன்னிடம் இருந்த இந்த மனபோக்கு “ஆதிக்கநாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?” என்று 80களிலும் தொடர்ந்திருக்கிறதே? இது நியாயமா கவியரசே?

செல்வன்

தொடர்புடைய சுட்டி :

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில் இந்த பாடலின் சூழல்

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே !

இரங்கல் கவிதை

vaali

கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !

நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள்
உன்னால் –
திவ்வியப் பிரபந்தங்களாயின !

படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !

கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
 
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !

கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
 
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல –
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..

எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

– கவிஞர் வாலி
(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை}

திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.

கடைசிப் பாடல்

கண்ணதாசன்

அமெரிக்காவுக்குச் சென்ற கவிஞர் கண்ணதாசன் தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் பேசவில்லை என்று ஆதங்கத்துடன் ஒரு பாட லை எழுதினார்:

“மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்;
இங்கு மழலைகள் தமிழ் பேசச் செய்து வைப்பீர்;
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை;
பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க் கையில்லை”

என்றார் கவிஞர் கண்ணதான். இதுதான் அவர் எழுதிய கடைசிப் பாடல்.

தொடர்புடைய சுட்டி : தமிழ் சினிமாவும் பாடல்களும்

சுய விமர்சனம்

கண்ணதாசன்

“நான் யார் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்து விட்டேன். யார் யார் என் வாழ்வைச் சீரழித்தார்களோ அவர்களே என் நினைவில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓய்வாக உட்காரும் போதெல்லாம் அவர்களே என் நினைவிற்கு வருகிறார்கள். என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக் கொண்ட பின்பு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.”

– கண்ணதாசன்

படிக்காத மேதை

கண்ணதாசன்

பட்டப்படிப்பு படிக்கத்தான் நினைத்திருந்தேன்
கொட்டும் மொழி மழையிற் குளிக்கத்தான் நினைத்திருந்தேன்
ஆனால் எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர்
இட்டார்;பின் ஏழ்மையிலே என்னை உலகில் விட்டார்
கல்வியிலான் வாழ்வு கரைகாணாத் தோணியெனக்
கலங்கினேன்; கற்றோரைக் கண்டு கரையில் நின்றேன்.

– கண்ணதாசன்

நினைவாஞ்சலி

Karunanidhi

என் இனிய நண்பா !
இளவேனிற் கவிதைகளால்
இதயசுகம் தந்தவனே! உன்
இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ ! – என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ ! – உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரைமட்டம் ஆக்கிவிட்டதே !

கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ !
கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட !
இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ
தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை !
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்
சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;

தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
அடடா! இந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!

ஆயிரங்காலத்துப் பயிர் – நம்
தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார் !
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்

நிலையில்லா மனம் உனக்கு ! – ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு !

இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள் !

என் நண்பா !

இனிய தோழா !

எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள் !
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா ?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய் !

– கலைஞர் மு. கருணாநிதி

புகழாரம்

Karunanidhi

” கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது ”

– கலைஞர் மு.கருணாநிதி

இரங்கற்பா

கண்ணதாசன்

எத்தனையோ பேர்களுக்கு இரங்கற்பா எழுதிய கவிஞன், மறைவதற்கு 12 ஆண்டுகட்கு முன்னர் தனக்குத்தானே எழுதிக் கொண்ட இரங்கற்பா.

தேனார் செந்தமிழமுதைத்
திகட்டாமல் செய்தவன்
மெய் தீயில் வேக
போனாற் போகட்டுமெனப்
பொழிந்த திரு
வாய் தீயிற் புகைந்து போக
மானார் தம் முத்தமொடும்
மதுக் கோப்பை
மாந்தியவன் மறைந்து போக
தானே எந் தமிழினிமேல்
தடம் பார்த்துப்
போகுமிடம் தனிமைதானே!
கூற்றுவன் தன் அழைப்பிதழைக்
கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
நீ எரிவதிலும்
அவன் பாட்டை
எழுந்து பாடு

– கண்ணதாசன்

படிக்காத மேதை காமராஜர்

Kamraj

சொத்து சுகம் நாடார் ,
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார் ,
பொருள் நாடார்,
தான்பிறந்த அன்னையையும் நாடார் ,
ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.

– கண்ணதாசன்