Archive for May, 2012

கவியரசர் போற்றிய நீதியரசர்

நன்றி : நாகூர் மண்வாசணை

கவியரசர் கண்ணதாசன் யார் ஒருவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறாரோ அவரை என்றாவதொருநாள் “டமால்” என்று கீழே போட்டுக் கவிழ்த்தப் போகிறார் என்று அர்த்தம்.

இந்த மனிதரிடம் நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டவர்களில் நான்கு பேர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள், காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர்

யாரையாவது தூற்றி வசைபாடினால் அவரை பிறிதொரு சமயம் வானாளவ உயர்த்தி வாழ்த்திப் பாடப் போகிறார் என்றும் பொருள் கொள்ளாலாம்.

கவியரசரின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் ஒன்றல்ல, இரண்டல்ல. எத்தனையோ எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போன தெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்தநந் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினிலே வீழ்ந்த திங்கே!

என்று பண்டிதர் நேருவை வாயார வாழ்த்திப் பாடிய அதே வாய்தான் முன்னொருமுறை

“சுட்டதொரு
கத்திரிக்காய் என்பேனா? கருங்குதிரை முகம் என்று
சித்தரித்துச் சொல்வேனா? திறம்போன பனம்பழத்தைச்
சப்பியபின் போட்ட தரமென் றுரைப்பேனா?
பழம்போன வாழைத்தோல் பக்குவமே நேருவமை”

என்று நேருவின் தோற்றத்தை கேவலப்படுத்தி தூற்றிப் பாடியது.

உணர்ச்சிக்கு அடிமையானவர்களின் உள்ளத்தில் உருவெடுக்கும் வார்த்தைகள் காலத்திற்கேற்ப உருமாறும் என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இராஜாஜி என்று அழைக்கப்பட்ட இராஜகோபாலச்சாரியை அறியாதவர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது.

வாழ்வாங்கு வாழ்வாரைத்
தெய்வத்துள் வைக்குமொரு
வையத்துள் வாழு மனிதா!

வையத்தில் இராசாசி
வாழ்வுக்குச் சான்றாக
வாழ்வொன்று எங்கும் உளதா?

என்று இராஜகோபாலச்சாரியை வாய்மலர வாழ்த்திப் பாடிய கவியரசரின் அதே திருவாய்தான் முன்னொருமுறை

“குள்ள நரிச் செயல் செய்யும் நச்சு உள்ளக்
கொலைகாரன் இராசகோ பாலாச்சாரி
கள்ளமறு தாய்நாட்டின் பொறுப்பை ஏற்றுக்
கயமையிலே ஆட்சிபுரிகின்றார்! அன்று
பிள்ளை மனங் கெடுப்பதற்கே இந்தியென்னும்
பிய்ந்த செருப்பினை எடுத்துத் தமிழ்ச் சேயின்
உள்ளமதிற் கட்டாயம் புகுத்த வென்று
உரைத்ததனைக் கேட்டவர்கள் துடித்தார் மாதோ!
இளங்குழந்தை நெஞ்சினிலே விஷமா! சீச்சீ!
இழிகுணத்தான் செய்கையினைத் தடுத்தே நிற்போம்!”

“வளங்கொல்ல வந்துற்றான் ஆரியப் பேய்
வன்நெஞ்சன்”

என்றெல்லாம் மடை திறந்த வெள்ளமென வாய்க்கு வந்தபடி வசைபாடி ஆத்திரம் தீர்த்துக் கொண்டது.

நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
சதாவ தானத் தனிப்பெருந் திறமை
தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்
நதியென ஓடி நாளெலாம் உழைத்தல்
நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்
அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே
இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!

என்று கலைஞர் கருணாநிதியை போற்றிய அதே கண்ணதாசன்தான் “இவனெல்லாம் ஒரு கவிஞனா?” என்று கேட்ட அவரைப் பார்த்து..

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை.

என்று கலைஞரை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மானபங்கப் படுத்தினார் கவியரசர்.

கவியரசர் கண்ணதாசன் வாழ்த்திப்பாடி, அவரை வசைபாடாது இறுதிவரை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ஒரே மனிதர் யாரென்றால் அவர் இலக்கியச் செல்வர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களாகத்தான் இருக்க முடியும். அந்த மனிதர்குல மாணிக்கத்தை கவியரசர் கண்ணதாசன் மனம் நெகிழ்ந்து எழுதிய கவிதை இது :

புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!

பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!”

(பார்க்க: “கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 158)

கவியரசர் கண்ணதாசன் மட்டுமின்றி, வேறு எவருடைய இழிச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு தன் தூய்மையான வாழ்வில் கறை படாத வண்ணம் சீரிய, நேரிய வாழ்க்கை வாழ்ந்துச் சென்றவர் மு.மு.இஸ்மாயீல்.

நீதிபதி மு.மு.இஸ்மாயீல் மீது கண்ணதாசனுக்கு அப்படியென்ன ஒரு அக்கறை? அப்படியென்ன ஒரு தனி மரியாதை? அவர் மீது இணைபிரியாத ஒரு பந்தம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விடலாம்.

ஆம்! அதற்கான ஒரே விடை – கம்பராமாயணம்.

கண்ணதாசனுக்கு பிடித்த இலக்கியம் கம்பரமாயணம். நான் பாடல் இயற்றும் சக்தியை பெற்றதே அதிலிருந்துதான் என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்வார் அவர்.

“சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்”

என்று உணர்ந்து சொல்லுமளவுக்கு கண்ணதாசனை பித்தனாக ஆக்கிய சத்தான காவியம் எதுவென்றால் அது முத்தமிழின் முத்திரைக் காவியமான கம்பனின் படைப்புதான்

“கம்பனுக்கு மேலோர் கவிஞன் இல்லை; கம்பனது கவியின்றி கனித்தமிழ்தான் வாழ்வதில்லை” என்று அடிக்கடி உரைப்பார் கவியரசர் கண்ணதாசன்.

“கம்பனைப் போற்றுவதென்பது கன்னித்தமிழைப் போற்றுவதாகும்” என்று அடிக்கடி உரைப்பார் நீதியரசர் இஸ்மாயீல்.

ஒருவர் கோர்ட்டுக்கு அரசர். மற்றொருவர் பாட்டுக்கு அரசர்.

இவ்விருவரையும் முடுக்கிய விசையும், பற்றிப் பிடித்திருந்த பசையும்தான் கம்பராமாயணம்.

“பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளி வைத்த கம்பனுக்கு ஈடு –
இன்னும் வித்தாகவில்லை என்றே நீ பாடு”

என்று வேறொரிடத்தில் உணர்ச்சி பொங்க பாடி, தனக்கும் கம்பனுக்குமிடையே உள்ள மானசீக உறவை தம்பட்டம் அடிக்கிறார் கண்ணதாசன்.

இத்தமிழார்வலர்கள் இருவரும் “கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடுகள் கிடையாது”. மாறாக கம்பக்கடலில் மூழ்கி முத்தெடுத்து முத்தி பெற்ற முத்தமிழ்க் காவலர்கள்.

ஒருவர் முத்தையா. இன்னொருவர் முத்தான ஐயா.

நீதியரசருக்கும் கவியரசருக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் இறுக்கத்திற்கு கிரியாவூக்கியாகச் செயல்பட்டவன் கவிக்கம்பன். “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பனைக் காதலித்த இருவர்க்கிடையிலும் இணைபிரியா உறவு இறுதிவரை நிலைத்திருந்தது.

நீதிபதி மு.மு.இஸ்மாயீலைப் போலவே முன்னூறுக்கும் மேலான கம்பனின் பாடல்களை கண்ணதாசன் மனனம் செய்து வைத்திருந்தார்.

கம்பனுக்கும் கவியரசருக்கும் அப்படியென்ன ஒரு இறுக்கம்? கம்பன் மேல் அப்படியென்ன ஒரு கிறக்கம்? கவியரசரே தருகிறார் அதன் விளக்கம்.

எப்படியோ கம்பனுக்கும் எனக்கும் தொடர்புண்டு
செப்புவதெல்லாம் கம்பன்
செந்தமிழாய் வருவதனால்;
அக்காலம் அப்பிறப்பில்
அழகு வெண்ணை நல்லூரில்
கம்பனது வீட்டில்
கணக்கெழுதி வாழ்ந்தேனோ?
நம்புகிறேன் அப்படித்தான்

என்று பூர்வஜென்ம தொடர்பு இருந்ததாக அழகாக கற்பனை செய்து ஆனந்தப் படுகிறார் கவிஞர்

அதுமட்டுமல்ல தனது எத்தனையோ சினிமா பாடல்களில் கம்பனை நினைவுக்கு கொண்டு வந்து களிப்படைகிறார் கண்ணதாசன்.

‘கன்னியரை ஒரு மலரென்று’ பாடிய கம்பனை வம்புக்கிழுத்து “கம்பன் ஏமாந்தான்” என்ற பாடலில் “புலவா நீ சொன்னது பொய்” என்று – சூசகமாக – அன்பாகச் சாடுகிறார் நம் கவிஞர்.

“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” என்று தொடங்கும் திரைப்படப்பாடலை எழுதும்போதும் கவிஞருக்கு கம்பனின் நினைவு வந்து மீண்டும் பாடாய்ப் படுத்துகிறது. “இதழை வருடும் பனியின் காற்று, கம்பன் செய்த வருணனை” என்று பாடி ஆனந்தம் கொள்கிறார்.

“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?” என்ற காலத்தில் அழியாத கானத்தில் ‘கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா’ என்று வரும் கண்ணதாசனின் பாடல்வரிகளை முணுமுணுத்திராத ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது.

“அவள் ஒரு மேனகை” என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இழைந்து குழைந்து பாடும் கவிஞரின் பாடலிலும் ‘என்ன சொல்லி என்ன பாட, கம்பன் இல்லை கவிதை பாட’ என்று கம்பனை நினைவுக் கூறுகிறார்.

“அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா” என்ற பாடல் மறக்க முடியாத நிலாப் பாடல். பேசாமல் “வண்ண நிலா” “வெள்ளி நிலா” என்று பாடி விட்டு போவதுதானே? ஊஹும்.. “கம்பன் பாடிய வெள்ளி நிலா” என்று மறைந்துபோன கம்பனுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கிறார் கண்ணதாசன்.

“இதயத்தில் நீ” என்ற படத்தில் ‘சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ?” என்ற படத்தில் மனதை வருடும் அருமையான காதற்பாடலொன்று.

“கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ? – இந்த
பட்டு உடலினை
தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ?”

என்ற கம்பனை பிடித்திழுத்து வந்து நுழைக்கையில் நம் மனதும் கம்பனை நாடிச் செல்கிறது.

அது மட்டுமா? பண்டிதர்கள் மாத்திரமே புரிந்து கொள்ளக் கூடிய தண்டமிழ் வரிகளை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக்கியவன் இந்த கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது.

“நதியின் பிழை அன்று நறும்புனல்
இன்மை அற்றே
……………………………
விதியின் பிழை இதற்கு என்னை
வெகுண்டது என்றான்”

என்ற கம்பராமாயணத்தில் வரும் இலக்கணச் செய்யுளை எல்லோரும் புரியும் விதத்தில் எப்படி இனிமையாய் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் என்று பாருங்கள்.

“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறு யாரம்மா?”

ஆஹா…! இதை விட எளிமையா வேறு யாரால் கூற இயலும்?

“தோள் கண்டார் தோளே கண்டார்”! என்று கம்பன் ராமனை வருணிக்கும் வரிகளை “இதயக்கமலம்” என்ற படத்தில்

“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்”

என்ற பாடல் வரிகளை பட்டிக்காட்டானுக்கும் எட்டும் வகையில் புட்டு புட்டு வைக்கிறார்.

பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.

என்று “பாசம்” படத்தில் வரும் கவிஞரின் பாடல் வரிகளிலும் கம்பனின் தாக்கம் ரொம்பவே தெரிகிறது.

மேற்கூறிய எடுத்துக்காட்டிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது. வேறு எந்த புலவனைக்காட்டிலும் கம்பனின் எழுத்துக்கள் இவனை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்ற உண்மை வெட்ட வெளிச்சமாகிறது.

கவியரசரும் நீதியரசரும் கம்பன் கழக விழாக்களில் ஒன்றாக பலமுறை பங்கெடுத்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வானதி பதிப்பகத்தின் உரிமையாளார் திருநாவுக்கரசு இவ்விருவரின் நூல்களை தொடர்ந்து வெளியிட்டார்.

தமிழுக்குக் ‘கதி’ இருவர்தானாம். காலங்காலமாக அறிஞர்கள் உரைக்கும் கூற்று இது. “கதி” என்ற வார்த்தையில் ‘க’ என்ற எழுத்து கம்பனையும், ‘தி’ என்ற எழுத்து திருவள்ளுவரையும் குறிக்குமாம்.

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த இஸ்மாயீல் அவர்கள் இந்து மதத்தின் காப்பியமாக போற்றப்படும் கம்பராமாயணத்தில் அதன் இலக்கியச் சுவைக்காக அந்த காப்பியத்தை முழுவதுமாய் படித்துத் தேர்ந்தவர்.

சிலகாலம் நாத்திகச் சிந்தனையில் ஊறித் திளைத்த கண்ணதாசன், கம்பராமாயணத்தைக் கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, கம்பனின் பாடல்களைக் கசடறக் கற்று, அதன் கவிநடையில் மயங்கி தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டவர் கண்ணதாசன்.

“நான் கேலி செய்ய நினைத்த கம்பன், என்னையே கேலி செய்து விட்டான்” என்று இந்நிகழ்வை கண்ணதாசன் சுவைபடக் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணதாசன் “ஏசு காவியத்தை” எழுதினார் என்ற காரணத்தினால் அவர் கிறித்துவ மத ஆதரவாளர் என்றோ அல்லது நீதிபதி இஸ்மாயீல் “கம்பராமாயணத்தை” ஆராய்ந்தார் என்ற காரணத்தினால் அவர் இந்து மத ஆதரவாளராக இருந்தார் என்றோ பொருள் கொள்ள ஆகாது.

இலக்கியச் சுவை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதில் ஜாதி, மத பேதம் கிடையாது.

அறிஞர் அண்ணாவின் பார்வையில் கம்பராமாயணத்தில் காமரசம் தென்பட்டது. நீதிபதி இஸ்மாயீலின் பார்வையில் கம்பராமாயாணத்தில் இலக்கியநயம் தென்பட்டது.

நீதிபதியை “வழி தவறிய வெள்ளாடு” என்று வருணிப்பவர்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

by Abdul Qaiyum

கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கேட்டதற்கு கண்ணதாசனில் கவிதையை பாருங்கள்

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை

மக்கள் திலகமும் மக்கள் கவிஞரும்

சிவாஜி பற்றி சில வரிகள்:

எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

–கவியரசு கண்ணதாசன்

தகவல் பெறப்பட்ட வலைத்தளம்

கவியரங்கமொன்றில் கண்னதாசன் பாடிய தமிழ் வாழ்த்து

கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!

நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ!

தனைப் புகழ் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே என் தாயே நின் பாதம் போற்றி
நினைப்பில் எழும் அத்தனையும் வடிவம் இன்றி
நிழலாகத் தோன்றிடினும் சிறிய நெஞ்சின்
நினைப்பினுக்கு மதிப்பீந்து வாழ்த்தாய் உன்
நிழல் கண்ட நானும் உன்னை வணங்குகின்றேன்!

கண்ணதாசன் திரைப் படப் பாடல்கள்

Tuesday, March 27, 2012

நெல்லை கண்ணன்
தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.

பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ

என்று கேட்கின்றார் கவியரசர்

ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.

அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.

உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.

உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.

கண்ணதாசன் பங்குபெற்ற விழாவில் நெல்லை கண்ணன்

Image