Archive for June, 2012

பாரதி பாடலை மாற்றி எழுதிய கண்ணதாசன்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே –எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே!
காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி – என
மேவிய ஆறு பலவினிலும் – உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!
நீலத்திரைக்கடல் ஓரத்திலே –நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!
கல்விசிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு!
சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி – அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!
விண்ணை இடிக்கும் தலைஇமயம் –எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னைப் பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!

Image

பொன்மொழி

இன்று கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினம்.

பராசக்தி

“பராசக்தி” படத்தில் பாடல் எழுத கண்ணதாசன் விரும்பினாராம் ஏனோ அவருக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.

அதே சமயம், “ஓடினாள்…ஓடினாள்…” என்கிற அந்த பிரபலமான நீதிமன்றக் காட்சியில் நீதிபதியாக அமர்ந்து வசனம் பேசும் வாய்ப்பு கண்ணதாசனுக்கு கிடைத்துள்ளது.

“நம்ப முடியாத மனிதர் கருப்பையா மூப்பனார்” – கண்ணதாசன்

திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை நீக்கப் பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் இணைப்பு பிப்ரவரி மாதம் பூர்த்தி அடைந்தது.

பிப்ரவரி 15-ஆம் தேதியன்று கடற்கரையிலே பிரதம மந்திரி இந்திரா காந்தி, டி.கே.பருவா, பிரம்மானந்த ரெட்டி போன்றவர்கள் கலந்து கொண்டு திரு.கருப்பையா மூப்பனார் காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

அப்படித் தேர்ந்து எடுக்கும்போது கீழே உட்கார்ந்திருந்த நான் சொன்னேன்: “Wrong Choice- தவறான தேர்வு” என்று.

பக்கத்திலே உட்கார்ந்திருந்த ஏ.கே. சண்முக சுந்தரமும், பா.சிதம்பரமும் கேட்டார்கள்: “எப்படிச் சொல்கிறீர்கள்” என்று.

“நம்ப முடியாத மனிதர் இந்தக் கருப்பையா மூப்பனார்” என்றேன்.

“Anyhow he is undisputed – எப்படியானாலும் அவர் பிரச்னைக்கு அப்பாற்பட்ட ஒருவர்” என்று அவர்கள் சொன்னார்கள்.

“Every tree and stone is undisputed – ஒட்டொரு மரமும் கல்லும் கூடத்தான் பிரச்னைக்கு” அப்பாற்பட்டதாக அமைதியாக இருக்கிறது.

“ஒரு மனிதன் செயலாற்றக்கூடிய சக்தி உடையவனாக இருந்தால், அவன் disputed ஆகத்தான் – பிரச்னைக்கு உரியவனாகத்தான் – இருக்க முடியுமே தவிர, undisputed ஆக,பிரச்னைக்கு அப்பாற்பட்டவனாக இருக்க முடியாது. காந்திக்கே விரோதி இருந்தான். கடவுளுக்கே இருக்கிறார்கள். கடவுளே disputed. Disputed என்று வரும்பொழுதுதான் ஒரு மனிதன் செயலாற்றிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும். செயலாற்றாமல் தூங்கி வழிகின்ற ஒருவனைத்தான் undisputed என்று சொல்ல முடியும். இந்த மனிதர் செயலற்றவர். அதே நேரத்தில் இந்த மனிதர் நம்ப முடியாதவர்” என்று நான் கூறினேன்.

“எப்படி” என்று பழையபடியும் என்னிடம் கேட்டார்கள்.

“பொய் நிறையச் சொல்கிறார்” என்று நான் சொன்னேன்.

விளக்கம் சொல்லவில்லை.

கருப்பையா மூப்பனாரைப் பற்றி எனக்கு எப்படி இந்த அபிப்பிராயம் விழுந்தது என்பதை நான் இதில் சொல்லி விடுவது முறையாகும் என்று கருதுகிறேன்.

இணைப்புக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஸ்வாகத் ஹோட்டலிலே ஏராளமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஸ்வாகத் ஹோட்டலிலே ஏராளமான காங்கிரஸ்காரர்கள் தங்கியிருந்தார்கள். அது, யார் தலைவர் என்பது தெரியாமல் இருந்த காலம்.

திருமதி மரகதம் சந்திரசேகர் அவர்கள் ஒரு நாள் வந்து, மேலே கருப்பையா மூப்பனாரைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் பார்த்ததையும், கீழே போய்க் கொண்டிருப்பதையும் நான் பார்த்துவிட்டு நான் மேலே போகிறேன்.

மேலே போய் மூப்பனாரைப் பார்த்து, ‘என்ன, மரகதம் உங்களைப் பார்த்தார்களா?’ என்று கேட்கிறேன்.

அவர் உடனே, “மரகதமா? அவர்கள் டெல்லியிலல்லவா இருக்கிறார்கள்! இங்கே வந்திருக்கிறார்களா?” என்று என்னிடம் கேட்டார்.

அப்பொழுதே நான் முடிவு கட்டினேன், “இந்த மனிதனைவிட ஒரு அண்டப்புளுகன் உலகத்திலேயே இருக்க முடியாது” என்று.

பொய் சொல்வது என்றால் அது உடனேயே பொய் என்று தெரிகிற மாதிரி சொல்லக் கூடாது என்பது கூடத் தெரியாத ஒரு மடத்தனமாக பொய்யை, அவர், அன்று சொன்னார்.

நான் தொடர்ந்து விளைவுகளைப் பார்த்தப்போது அந்த ஓராண்டுக் காலத்திற்குள்ளாகவே இந்த மனிதர் பொய்யர் மட்டுமல்ல, யோக்கியமானவரும் அல்ல, என்று முடிவு கட்ட வேண்டிய நிலைக்கு நான் வந்தேன்.

ஆனால் காங்கிரஸினுடைய வளர்ச்சி என்பது தமிழகத்தில் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். காரணம், நல்ல தலைமை அமையவில்லை என்பது மட்டுமல்ல, ஒழுங்கான வேலையும் நடக்க முடியாமல் போயிற்று.

நன்றி
கவிஞர் கண்ணதாசன் எழுதிய நான் பார்த்த அரசியல்
நன்றி : Naga Inthu

திருமண ஆல்பம்

மனவாசம்

ஆசிரியர்: கண்ணதாசன், வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், பக்கம்: 240, விலை: ரூ 80/-
Dial For Books: 9445901234, 9445979797

 
மனவாசம்

 

வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை.
உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன். மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா? ‘சுயசரிதம்’ எழுதும்போது அதில் நான் கற்பனைகளைக் கலப்பதில்லை. கூடுமானவரை சொல்ல வேண்டியவை அனைத்தையும் சொல்லிவிடுவேன்.

 

இந்த மனவாசம் 1961-ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும் போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்வேன்.

 

நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல். நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்துவிட்டேன்.

 

என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக்கொண்ட பிறகு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.

 

இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால்… எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்….?

 

– கண்ணதாசன்

 

 

 

வனவாசம்

வனவாசம்

ஆசிரியர்: கண்ணதாசன், வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், பக்கம்: 424, விலை: ரூ 140/-

Dial For Books: 94459 01234, 9445 97 97 97

 

வனவாசம்’ புதிய முன்னுரை

காந்தி அடிகளின் சுயசரிதத்தைப் படித்தபின்பு, இதனை எழுதியதால், உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது.

உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம்போல் ஆடையின்றிக் குளிக்க? ஆற்றில் குளிக்கும்போது ஒரு கோவணமாவது கட்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது! அவமானத்துக்கு பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைத்தே தீரவேண்டியதாகிவிட்டது.

என்னோடு பழகியவர்கள் எனக்குப் பின்னால் அதனை வெளியிட்டால், அது எனக்குச் செய்யும் உதவியாகவே இருக்கும்.

எழுதுகிறவனைப் பொறுத்தல்ல, எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது ஒரு சுவையான நூல்தான். இது வெளிவந்த நேரத்தில் தொலைபேசி மூலமாக இதைத் தேடியவர்கள் பலர். வெளிநாடுகளில் இருந்து இதை அடைவதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலருக்கு நானே அனுப்பியிருக்கிறேன்.

ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல!

மீசை முறைக்காத பருவத்தில் பிறந்த கிராமத்தை விட்டுப் பறந்து, காற்றிலே அலைமோதி, கடைசியில் தனித்து விழுந்துவிட்ட காகிதம் ஒன்று அந்த நாள் ஞாபகத்தை அச்சிலேற்றிவிட்டது.

‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி.

– கண்ணதாசன், 26.04.1981

 

‘வனவாசம்’ முதற் பதிப்பின் முன்னுரை

சுயசரிதம் எழுதுகிறவனுக்கு இரண்டு பெருமைகள் வேண்டும்.

ஒன்று, அதை எழுதும்போது அவன் புகழ் ஓங்கி நிற்க வேண்டும்.

இரண்டு, அவன் வாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்தியிருக்க வேண்டும்.

இந்த இரண்டும் இருந்தால்தான் அவனது சரித்திரத்தைப் படிப்பதற்குச் சிலபேர் கிடைப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரை, என் புகழ் குன்றிலிட்ட விளக்காக ஒளி வீசுகின்றதென்று நான் பெருமைப்பட முடியாது.
என் வாழ்வில் வியக்கத்தக்க சாதனை என்று எதுவும் இல்லை.

ஆயினும் எந்தத் துணிச்சலில் நான் சுயசரிதம் எழுதத்துவங்கினேன்?

இது கேள்வி!

நான் நடந்த வந்த பாதை, தனி வாழ்வில் நான் பட்ட துயரங்கள், இவையெல்லாம் ஒரு கதைபோல இருப்பதாக நான் கருதினேன்.

அதுவே, வேறு கதாபாத்திரங்களை உற்பத்தி செய்து கதை எழுதுவதைவிட, என்னையே பாத்திரமாக்கி உண்மையைக் கதை வடிவில் சொல்ல நான் விரும்பினேன்.

அந்த முயற்சியே இந்த நூலாக எழுந்தது.

“நான்” என்ற எழுதுவதற்குத் தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடனேயே “அவன்” என்று என்னைக் குறிப்பிட்டேன்.

இதில், நான் பிறந்த கதை சொல்லவில்லை. அப்படியொன்றும் நான் அதிசயப்பிறவி அல்ல என்பதனால்.
நான் வளர்ந்த கதை சொல்லவில்லை, அப்படியொன்றும் நான் ராஜபோகத்திலோ, கொடிய ஏழ்மையிலோ வளர்க்கப்படவில்லை என்பதனால்.

நடுத்தரக் குடும்பத்தின் சாதாரண மகனுக்கு வயதும் மனதும் வளர்ந்ததிலிருந்தே கதை தொடங்குகிறது.
1943லிருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்க்கை நடந்த விதம் இதில் வருணிக்கப்பட்டுள்ளது.

சில உண்மைகளை நிர்வாணமாகக் காட்டியிருக்கிறேன்.

சில துயரங்களைத் தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.

எனது மேன்மைகள் என்று நான் கருதுபவனவற்றை பயத்துடனேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறுமல்ல இது; ஒரு மாபெரும் கவிஞனின் காவிய வாழ்க்கையுமல்ல இது.

வாழ்க்கை வழிப்போக்கன் ஒருவனின் உயர்வு, தாழ்வுகளே இந்நூல்.

இதனைப் படிக்கின்றவர்கள் என்னை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

சில ரசிகர்களுக்காக இந்தச் சரிதம் பலகாலம் காத்துக் கொண்டிருக்க நேர்ந்தாலும் நான் வருந்தமாட்டேன்.

ஏனென்றால், என் காலத்துக்குப் பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.
இதில் நான் “வனவாசம்” என்று குறிப்பிடுவது ஓர் அரசியல் கட்சியில் நான் வாழ்ந்த வாழ்க்கையையே ஆகும்.

அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியதோடு வனவாசம் முடிந்துவிடுகிறது.

அடுத்த பகுதியை “மனவாசம்” என்ற தலைப்பில் எழுத நினைத்துள்ளேன்.

இந்த வனவாசத்தின் ஒரு பகுதி முதலில் தென்றலிலும் பிறகு இனமுழக்கத்திலும் வெளிவந்தது.

அந்த ஏடுகளுக்கும், அவற்றின் நிர்வாகிகளுக்கும் இதனை நூலாக வெளியிட்டவர்களுக்கும் எனது நன்றி.

– கண்ணதாசன், 4.9.1965