எது பேரின்பம்?
“கவலை இல்லாத மனிதன்” படத்தில் வரும் கண்ணதாசனின் இவ்வரிகள் எனக்குப் பிடித்த வரிகள்.
“அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்”
இன்பம் இரண்டு வகைப்படும். ஒன்று சிற்றின்பம். மற்றொன்று பேரின்பம். எதுவெல்லாம் இன்பம்? என எத்தனையோ கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.
“இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி – நீ
சொல்லும் சொல்லில் மழலைக்கிளி – என்
நெஞ்சில் ஆடும் பருவக்கொடி”
இது கவிஞர் புலமைப் பித்தனின் வரிகள். இன்பத்திற்கு மறுபெயர் பெண்மை என்பது இப்பாடலில் காணும் நாம் விளங்கும் பொருள். எது இன்பம்? என்பதற்கு ஒவ்வொரு கவிஞர்களும் ஒவ்வோர் விதமான விளக்கங்களை அளித்துள்ளனர்.
ஜில்லென்ற காற்று இன்பம். மழைச்சாரலில் நனைவது இன்பம். உறக்கம் சிலருக்கு இன்பம். சுவையாக உண்பது சிலருக்கு இன்பம். எனக்கோ குளித்துவிட்டு காட்டன் பட்ஸால் காது குடைவது இன்பம்.
நான்கே வரிகளில் இன்பத்தின் சாராம்சங்களை எது இன்பம்? எது பேரின்பம்? என்று பாமர சினிமா ரசிகனுக்கு புரிய வைப்பதில் கண்ணதாசன் கில்லாடி.
“அன்னையின் கையில் ஆடுவதின்பம்…”
‘குவா குவா’ என்று அழுதுக்கொண்டிருக்கும் ஒரு பச்சிளங் குழந்தையானது அன்னையவள் தூளியிலிட்டு தாலாட்டுப் பாடுகையில் தன்னை மறந்து துயில் கொண்டு விடுகிறது. அந்தக் குழந்தைக்கு அன்னையின் கையில் தொட்டிலில் ஆடுவது இன்பம். இது குழந்தைப் பருவம்.
“கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்….”
அரும்பு மீசை முளைத்து இளைஞனானதும் அவனது கவனம் கன்னியின்பால் நகர்கிறது. தன் மனதுக்கு பிடித்த காதலிடன் பேசுவதில் இன்பம் காண்கிறான். அவளிடம் பழகுவதில் இன்பம் காண்கிறான். அவளோடு பொழுதைக் கழிப்பதில் இன்பம் காண்கிறான். அவளது கையில் சாய்வதில் இன்பம் காண்கிறான் இது காளையர் பருவம்.
“தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்…”
வாலிப வயதை எட்டி, படித்துப் பட்டம் பெற்றபின் வேலையிலும் அமர்ந்தாகி விட்டது. இப்போது வாழ்க்கையில் உயர வேண்டும். முன்னேற வேண்டும், என்ன செய்வது? அதற்கு அவன் தன்னையறிய வேண்டும், தன்னுடைய தகுதி என்ன? தன்னுடைய திறமை என்ன? தன்னுடைய அசுரபலம் என்ன? இதனையறிந்து அதற்கான உத்வேகத்துடன், அதற்கான முயற்சியுடன் முழுவேகத்துடன் செயல்பட்டால் அவன் வாழ்க்கையில் முன்னேறி விடலாம். இதே கருத்தை மற்றொரு பாடலில் கவிஞர் கண்ணதாசன்
“உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை
வணங்காமல் நீ வாழலாம்”
இது நடுத்தர வயது.
“தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்……”
எதுவெல்லாம் இன்பம் என்று சொல்லியாகி விட்டது. இப்போது இதில் எது பேரின்பம் என்று கவிஞர் சொல்லியாக வேண்டும்.
ஐந்தறிவைக்கொண்டு புலனின்பங்களை அனுபவிப்பது சிற்றின்பம். ஆறாம் அறிவைக்கொண்டு , தன்னையறிந்து தன்னலம் துறந்து செயலாற்றுவதுதான் பேரின்பம்.
சம்பாதித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை எட்டியபின்பு பிறர்நலம் காண உழைக்க வேண்டும். தன்னலம் மறந்து , சுயநலம் மறந்து சமுதாயப் பணிக்காக தன் நேரத்தை செலவழிக்க வேண்டும். EGO என்ற கர்வத்தை விட்டொழிக்க வேண்டும். அதுவே பேரின்பம் என்கிறார் கண்ணதாசன்.
வாழ்க்கையின் தத்துவத்தை நான்கே வரிகளில், மனிதனின் வாழ்க்கைப் பருவத்தை நான்காகப் பிரித்து, இன்பம் என்றால் என்ன? உண்மையில் எது இன்பம்? எது சிற்றின்பம்? எது பேரின்பம்? என்ற வாழ்க்கை நெறிகளை, வாழ்க்கையில் அடங்கியிருக்கும் மாபெரும் சூட்சமத்தை எளிமையான மொழியில் பாமரனும் அறியும் வண்ணம் புரியவைக்கும் திறமை கவிஞர் கண்ணதாசனிடத்தில்தான் இருக்கிறது. அவருக்கு எனது சல்யூட்.
– அப்துல் கையூம்