Archive for May, 2016

பெண்களும் கண்களும்

கண்களைப் புகழாத காதலனும் இல்லை; கண்களைப் பாடாத கவிஞனும் இல்லை.

கண், காது, மூக்கு, நாக்கு கை, கால் எல்லாமே உடல் உறுப்புக்கள்தான். ஆனால் ஏனோ கண்களுக்கு மாத்திரம் ஒரு தனி மரியாதை; தனியொரு அந்தஸ்து.

தலைவன் தலைவியை விளிக்கும்போது மூக்கே, நாக்கே, காதே என்று அழைத்து மகிழ்வதில்லை (நாக்கு மூக்கா பாடல் இதில் சேர்த்தி இல்லை ப்ளீஸ்..)

காதலன் “கண்ணே!” என்று அழைப்பதில்தான் மனநிறைவு கொள்கிறான், இன்னும் ஒரு படி மேலே சென்று “கண்மணியே!” என்று அழைக்கின்றான்.  அவளோ “கண்ணாளனே” என்று அழைக்கிறாள்

The Night has a thousand eyes

And the day but one

என்று ஆங்கிலக் கவிஞன் பிரான்ஸில் வில்லியம் போர்டிலோன் பாடினான். அதே கருத்தை

இரவுக்கு ஆயிரம் கண்கள்

பகலுக்கு ஒன்றே ஒன்று

என்று கவிஞர் கண்ணதாசன் பாடி வைத்தான்.

வெறும் எட்டாம் வகுப்புவரை மட்டுமே பயின்ற கண்ணதாசன் ஆங்கில இலக்கியங்கள் அனைத்தையும் கற்றறிந்த பிறகுதான் எழுதினானா அல்லது Great minds think alike என்ற கூற்றின்படி எல்லா அறிவு ஜீவிகளுக்கும்  ஒரேபோன்ற கருத்துக்கள் பிறக்கின்றனவா என்று தெரியவில்லை.

இந்த இரண்டு கவிஞர்களும் விண்மீன்களை கண்களுக்கு உவமை படுத்தி பாடுகிறார்கள். அதைவிட மீன்களை கண்களுக்கு ஒப்பீடு செய்த கவிஞர்களே அதிகம்.

eyes

அரிதாரம் பூசும் பெண்கள் கண்களின் ஓரங்களுக்கு வால் வரைந்து, மை தீட்டுவது அவைகள் மீன்கள் போல் காட்சியளிக்கத்தானோ என்னவோ..?

சிறு மணல் வீட்டில் குடிஏறும் நண்டானது

இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது

என்று பாடுகிறார் கவிஞர் வாலி.

நாகூரிலேயே தன் வாழ்நாட்கள் முழுவதையும் கழித்த வண்ணக் களஞ்சியப் புலவரின் கற்பனையைப் பாருங்கள்.

பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்

தளம்குளிர் புனல்என நெடிய

கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்

கண்டுவந்து உடல்அசை யாது

விரிசிறை அசைத்துஅந்த ரத்தின்நின்று எழில்சேர்

மீன்எறி பறவை வீழ்ந் திடுமே!

என்று பாடுகிறார் அவர்.

உயர்ந்த நிலைமாடத்தில் நிற்கும் எழில் மங்கைகளின் கண்கள் பிம்பமாக பளிங்குத் தரையில் காட்சி தருகின்றனவாம். அந்தரத்திலிருந்து பறந்து வரும் மீன்கொத்தி பறவை அவைகளை மீன்கள் என்று நினைத்து கவ்விக்கொள்ள பாய்ந்து பளிங்குத் தரையில் மோதி பலனற்று போகிறதாம்.

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி

பின்சென்றது அம்ம சிறுசிரல்;  பின்சென்றும்

ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்

கோட்டிய வில்வாக் கறிந்து.

இது நாலடியார் பாடல்.

அவளின் கண்களை மீன் என்று எண்ணி கொத்தி தின்ன முயன்றதாம்  மீன் கொத்திப் பறவை. ஆனால், அருகில் போனவுடன் அவளின் வில் போன்ற புருவத்தை பார்த்து பயந்து கொத்தாமல் சென்று விட்டதாம்.

நாலடியாரும், வண்ணக்களஞ்சியப் புலவரும், கண்ணதாசனும் ஒருவரையொருவர் காப்பியடித்து எழுதினார்கள் என்று நான் நினைக்கவில்லை.  கற்பனைக் கடலில் அவரவர்கள் மூழ்கி முத்து எடுக்கிறார்கள். சிற்சமயம் அவைகள் ஒரே மாதிரியாக அமைந்து விடக்கூடும்.

பூவா தலையா என்ற படத்தில் கவிஞர் வாலி ஒரு பாடல் எழுதினார்.

மதுரையில் பிறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்

புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே !

 

வாலியின் கற்பனையிலும் புருவம் வில்லாகவே தெரிகிறது.

I don’t think they are all copy cats.. கற்பனை உலகம் என்பது பரந்து விரிந்தது. அண்டசராசரம் பெரிதா அல்லது கற்பனை உலகம் பெரிதா என்று என்னை கேட்டால் கற்பனை உலகம்தான்  பெரிதென்பேன் நான்..

“மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா”  என்று பாடுகிறார் கவிஞர் பிறைசூடன்.

கண்களால் பாடவும் முடியும். ஆச்சரியமாக இருக்கின்றதா? “கண்களும் கவி பாடுதே” பாடல் அதற்ககோர் எடுத்துக்காட்டு.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

மேற்கூறிய திருக்குறளின் கருத்தைத்தான் கண்ணதாசன்

உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தா போகும்?

புன்னகை புரிந்தால் என்ன பூமுகம் சிவந்தா போகும்?

என்று எளிமையாக பாடி வைத்தான். .கற்பனைக்கு “கமா”தான் (Comma) உண்டு. முற்றுப்புள்ளி கிடையாது.

-அப்துல் கையூம்

 

அற்றைத் திங்கள்

கண்ணா 2

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago”

கமல்ஹாசன் சில காலத்திற்கு முன்பு “அற்றை திங்கள்” என்ற காணொளி பக்கம் ஒன்றை தொடங்கினார்.

“அற்றை திங்கள் என்றால் என்ன?”

“Long Long  Ago” அல்லது “Once upon a time” என்பதை சங்கத் தமிழில் சொல்வதுதான் இந்த அற்றைத்திங்கள்.

“சிவாஜி”  படத்தில் வரும் அங்கவை, சங்கவை எனும் பாத்திரங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களின் பெயர்கள் இவை.. எங்கள் தமிழ்க்குலப் பெண்களை எப்படி கண்ணேங் கரேலென காட்டி கிண்டல் அடிக்கலாம் என சங்கருக்கு அப்போது எதிர்ப்பு வேறு தெரிவித்தார்கள்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

என்று புறநானூற்றில் காணப்படும் பாடல் இந்த பாரிவள்ளல் மகள்கள் பாடியதுதான். அதன் பொருள்:

“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்து வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார்.. எங்களுடைய மலைக்குன்றும் அப்போது எங்களிடம்தான் இருந்தது. இந்த நிலாக் காலத்தில் அதை வென்று முரசு ஒலிக்கும் இந்த வேந்தர்கள் எங்கள் மலைக்குன்றையும் அபகரித்து விட்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கின்றோம்”. என கையறு நிலையில் பாடிய பாடலிது.

கடந்தகாலம் பசுமையாக இருந்தால் “அது ஒரு நிலாக்காலம்” என்று நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்துடன் நாம் சொல்வதுண்டு.

“இருவர்” படத்தில் வைரமுத்து இந்த சங்ககால வார்த்தைகளைப் போட்டு

அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

என்று பாடல் எழுதினார்.

அதன் பின்னர் “சிவப்பதிகாரம்” படத்திற்கு கவிஞர் யுகபாரதி “உங்களுக்கு மட்டும்தான் வருமா? எங்களுக்கும் சங்கத்தமிழ் போட்டு பாடல் எழுத வரும்” என்று

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

என்று தன் கவித்திறமையைக் காட்டி அசத்தினார்.

பாரி மகளிர் அங்கவை, சங்கவை பாடிய அந்த பாடலைத்தான் கவிஞர் கண்ணதாசன் எளிமையான வரிகளில்

அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

என்று எளிமையான வார்த்தைகளில் எழுதி விட்டுப் போனார். படித்தவனுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் இருந்த கவிச்சுவையை பாமரனுக்கும் எட்டி வைத்ததால்தான் “கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு” என்று இப்போதும் பாடல் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

– அப்துல் கையூம்