கண்ணா 2

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago”

கமல்ஹாசன் சில காலத்திற்கு முன்பு “அற்றை திங்கள்” என்ற காணொளி பக்கம் ஒன்றை தொடங்கினார்.

“அற்றை திங்கள் என்றால் என்ன?”

“Long Long  Ago” அல்லது “Once upon a time” என்பதை சங்கத் தமிழில் சொல்வதுதான் இந்த அற்றைத்திங்கள்.

“சிவாஜி”  படத்தில் வரும் அங்கவை, சங்கவை எனும் பாத்திரங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களின் பெயர்கள் இவை.. எங்கள் தமிழ்க்குலப் பெண்களை எப்படி கண்ணேங் கரேலென காட்டி கிண்டல் அடிக்கலாம் என சங்கருக்கு அப்போது எதிர்ப்பு வேறு தெரிவித்தார்கள்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

என்று புறநானூற்றில் காணப்படும் பாடல் இந்த பாரிவள்ளல் மகள்கள் பாடியதுதான். அதன் பொருள்:

“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்து வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார்.. எங்களுடைய மலைக்குன்றும் அப்போது எங்களிடம்தான் இருந்தது. இந்த நிலாக் காலத்தில் அதை வென்று முரசு ஒலிக்கும் இந்த வேந்தர்கள் எங்கள் மலைக்குன்றையும் அபகரித்து விட்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கின்றோம்”. என கையறு நிலையில் பாடிய பாடலிது.

கடந்தகாலம் பசுமையாக இருந்தால் “அது ஒரு நிலாக்காலம்” என்று நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்துடன் நாம் சொல்வதுண்டு.

“இருவர்” படத்தில் வைரமுத்து இந்த சங்ககால வார்த்தைகளைப் போட்டு

அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

என்று பாடல் எழுதினார்.

அதன் பின்னர் “சிவப்பதிகாரம்” படத்திற்கு கவிஞர் யுகபாரதி “உங்களுக்கு மட்டும்தான் வருமா? எங்களுக்கும் சங்கத்தமிழ் போட்டு பாடல் எழுத வரும்” என்று

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

என்று தன் கவித்திறமையைக் காட்டி அசத்தினார்.

பாரி மகளிர் அங்கவை, சங்கவை பாடிய அந்த பாடலைத்தான் கவிஞர் கண்ணதாசன் எளிமையான வரிகளில்

அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

என்று எளிமையான வார்த்தைகளில் எழுதி விட்டுப் போனார். படித்தவனுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் இருந்த கவிச்சுவையை பாமரனுக்கும் எட்டி வைத்ததால்தான் “கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு” என்று இப்போதும் பாடல் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

– அப்துல் கையூம்