வெறும் சித்தாரையும் மிருதங்கத்தையும் வைத்துக் கொண்டு ஒரு சிறப்பான பாடலை கொடுக்க முடியுமென்றால் அது எம்.எஸ்.வி.யால் மட்டும்தான் முடியும்.
“நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்தில் வரும் “சொன்னது நீதானா..” பாடல் கல்மனதையும் கரைய வைக்கும்.
தாய்மொழி தமிழல்லாத ஒரு பாடகி (பி.சுசிலா) இந்த அளவுக்கு தெளிவ்வன உச்சரிப்போடு, பாவத்தோடு, உணர்ச்சிகளைக் கொட்டி நம் மனதை உருக வைத்திருப்பதை வார்த்தைகளால் வருணிக்க இயலாது.
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் பொருள் நிறைந்த படக்காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட பாடலிது.
படத்தைப் பார்க்காமலேயே, வெறும் பாட்டை மட்டும் கேட்டு விட்டு இக்காட்சியையும், பாத்திர அமைப்பையும் நம்மால் ஊகித்துவிடமுடியும்.
இன்றைய கவிஞர்களால் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் அதே படத்தளத்தில் எழுத முடியுமா என்பது சந்தேகமே.
பாடல் எழுதுவதற்காக கண்ணதாசனுக்கு வேண்டி காத்திருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
நண்பனை “இந்த குடிகாரன் எப்ப வருவானோ?” என்று விமர்சிக்கிறார் அவர். இந்தச் செய்தி கவியரசரின் காதுகளுக்கு எட்டுகிறது. கடும் சொற்கள் அவர் மனதை முள்ளாய்த் தைக்கிறது. இடனே பாடலும் பிறந்து விடுகிறது.
“சொன்னது நீதானா?
சொல்…சொல்..சொல்.. என்னுயிரே”