e0ae95e0aea3e0af8de0aea3e0aea4e0aebee0ae9ae0aea9e0af8d-e0ae95e0af81e0ae9fe0af81e0aeaee0af8de0aeaae0aeaee0af8d

எங்களுடன் ஒன்றாகத் தங்கி படித்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசனின் செல்வப் புதல்வன் கலைவாணனுக்கு ஏனோ இந்த ஹாஸ்டல் வாழ்க்கை அறவே பிடிக்கவில்லை. இதனால் படிப்பிலும் அவனால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.

 

காரணம், சுதந்திரப் பறவையாக தன் வீட்டில் சுற்றித் திரிந்து வாழ்க்கையை தன் குடும்பத்தாருடனும், உடன்பிறந்தோருடனும் ‘ஜாலியாக’ அனுபவித்து வந்த அவன் இந்த ஹாஸ்டல் வாழ்க்கையை சிறைவாழ்க்கையாக எண்ணி கலக்குமுற்றான்.

 

ஒருநாள் காலை வேளையில், ஏற்கனவே அவன் திட்டமிட்டிருந்தபடி சுவரேறிக் குதித்து பள்ளி வளாகத்திலிருந்து வெளியே ஓடிவிட்டான். “தோள் கொடுப்பான் தோழன்” என்பார்கள். அதுபோல முதுகைக் கொடுத்து அதன் மீது ஏறி அவனை தப்பிக்க துணை புரிந்தவன் நானல்ல; என் இன்னொரு நண்பன்.

 

அச்சமயத்தில் அண்ணா உயிரியல் பூங்காவெல்லாம் வண்டலூரில் கிடையாது. ஓட்டேரி நாற்சந்தியில் ஒரே ஒரு கீற்றுக் கொட்டகை டீக்கடை மாத்திரம் இருக்கும். தாம்பரம் செல்வதற்கு ஏகப்பட்ட மண் லாரிகள் அவ்வழியே போய்க்கொண்டிருக்கும். அதில் ஏறி எப்படியோ வீட்டுக்குச் சென்றுவிட்டான் கலைவாணன்.

 

அன்று இந்த சம்பவம் எங்களுக்குள் பரபரப்பாக பேசப்பட்டது. மறுபடியும் எப்படியும் கலைவாணனை அவனது பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள் என்று எங்களுக்கு நன்றாகவேத் தெரியும். பள்ளி முதல்வர் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறாரோ என்று பயந்துக் கொண்டிருந்தோம்.

 

அப்போது எங்கள் பள்ளியின் முதல்வராக இருந்தவர் இறையருட்கவிமணி என்று போற்றப்படும் பேராசிரியர் கா.அப்துல் கபூர்.

principal

கா.அப்துல் கபூர்

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்று கூறுவதைப்போன்று “அழகுத்தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று எங்கள் பள்ளி முதல்வருக்கு புகழ்மாலைச் சூடுவார்கள் தமிழறிந்த சான்றோர்கள்.

 

எதிர்பார்த்தபடியே கலைவாணனின் குடும்பத்தார் மீண்டும் அவனை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துவிட்டு போனார்கள். “போன மச்சான் திரும்பி வந்தான்” என்று பாட்டுப்பாடி நாங்கள் குதூகலித்தோம்.

 

கலைவாணனை அழைத்து எங்கள் பள்ளி முதல்வர் அவன் ஓடிப்போனதற்கான காரணத்தை வினவுகிறார்.

 

“உனக்கு இங்கிருப்பது பிடிக்கவில்லையா?” என்று பரிவோடு விசாரிக்கிறார்.

 

பள்ளி வளாகத்திலிருந்து சுவரேறிக் குதித்து ஓடிப் போனதற்கு கலைவாணன் சொன்ன காரணத்தைக் கேட்டால் நீங்களே சிரித்து விடுவீர்கள்.

 

அதற்குமுன் எங்கள் பள்ளி வளாகத்தைப் பற்றிய இச்சிறு குறிப்பை படிப்பது அவசியம்.

 

வண்டலூரில் எங்கள் பிறைப்பள்ளி (Crescent Residential School) நிறுவப்பட்டது ஒரு மாங்காய் தோப்பினில்தான். கட்டிடங்கள் யாவும் எழும்பிய பின்னரும் வளாகத்தினுள் எங்கு பார்த்தாலும் மாமரங்களில் மாங்காய் காய்த்துத் தொங்கும். வேண்டுமளவு மரத்திலேறி மாங்காய் பறித்துத் தின்பது எங்களது ‘வீரதீர’ பொழுதுபோக்காக இருந்தது.

 

“இங்கிருப்பது உனக்கு பிடிக்கவில்லையா….? ஏன் இங்கிருந்து சுவரேறிக் குதித்து ஓடினாய்..?” என்ற முதல்வரின் கேள்விக்கு கலைவாணன் சொன்ன பதில் இதுதான்.

 

“நான் மாந்தோப்பில் மாங்காய் பறித்து தின்பதற்காக சுற்றி வந்தேன். அப்போது ஒரு மாங்காயை பறித்து நான் உண்டேன், அது மிகவும் சுவையாக இருந்தது. அது சாப்பிட்டபின் அப்படியே தூங்கி விட்டேன் அப்புறமா கண்முழிச்சு பாத்தபோது நான் மவுண்ட் ரோடுலே நின்னுக்கிட்டு இருந்தேன். எனக்கு எப்படி ஸ்கூலுக்கு போறதுன்னு வழியே தெரியலே. அப்புறமா அப்படியே நான் வீட்டுக்குப் போயிட்டேன்”

 

இதை கலைவாணன் சொன்னபோது ஒரு சில ஆசிரியர்களும் கூடவே இருந்தார்கள். முதல்வாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆசிரியர்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

கலைவாணனின் ‘சால்ஜாப்பு’ பதிலை பொறுமையாக காதுகொடுத்து கேட் ட எங்கள் பள்ளி முதல்வர் கூறிய பதில் என்ன தெரியுமா?

 

“அடேங்கப்பா….! கலைவாணா! நீ கதை சொல்வதிலும், கற்பனையிலும் உன் தகப்பனையே மிஞ்சிட்டே,,!” என்றார்.

 

கலைவாணன் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவன். பிசிறில்லாமல் சீராக பாடக் கூடியவன். கதை, கவிதை எழுதுவதிலும் அவனுக்கு ஆர்வம் அதிகம். ஒரு முறை கண்ணதாசன் எங்கள் பள்ளிக்கு வந்தபோது “அடி என்னடி ராக்கம்மா கண்டாங்கி நெனப்பு” என்ற பாடலை தாளம் பிசகாமல் எங்கள் எல்லோர் முன்னிலையிலும் இனிமையாக பாடிக் காட்டினான் அந்த நினைவலைகள் இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.

 

நானும், பிரான்சு நாட்டில் இருக்கும் என் பள்ளி நண்பன் காரைக்கால் திப்பு சுல்தானும் சந்தித்து உரையாடும்போதெல்லாம் கலைவாணன் பற்றிய பேச்சு எப்படியாவது வந்துவிடும். பள்ளிப் பருவத்திற்கு மீண்டும் சென்று விடுவோம்.

 

ஒருநாள் காலை வேளையில் என் நண்பர் அஹ்மது தெளஃபீக்கிடமிருந்து ஓர் அதிர்ச்சியான செய்தி வந்தது.

 

காக்கா சேதி கேள்விப் பட்டியலா..?

என்ன செய்தி தெளஃபீக்..?

நம்ம கலைவாணன் இறந்து போயிட்டான் காக்கா.  இப்பத்தான் நான் கேள்விப்பட்டேன்

என் தலையில் பேரிடி விழுந்தது போலிருந்தது. எந்த கலைவாணன் என்றெல்லாம் நான் கேட்கவில்லை. காரணம் எங்களுக்குத் தெரிந்த ஒரே கலைவாணன் அவன்தான். துடிதுடித்துப் போனேன். என் உதிரம் சற்று நேரம் உறைந்து போனதுபோலிருந்தது

 

“அழியாத கோலங்கள்” படத்தில் அந்த குண்டு பையன் இறந்தபோது அவ்ற்ட்டவனது நண்பர்களுக்கு ஏற்பட்ட  அதே மனபாதிப்பு எங்களுக்கும் கலைவாணனின் திடீர் மறைவு அதிர்ச்சிக்குள்ளாகியது.

 

கலைவாணர் என்.எஸ்.கே.யின் நினைவாகவே கண்ணதாசன் தன் மகனுக்கு கலைவாணன் என்ற பெயரைச் சூட்டினார் . தனக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை தன் பிள்ளைகளுக்குச் சூட்டி அழகு பார்ப்பதில் கவியரசருக்கு அலாதிப் பிரியம்.

 

அறிஞர் அண்ணாவின் நினைவாக அண்ணாத்துரை; பாரதிதாசனின் நினைவாக கண்மணி சுப்பு (சுப்பு ரத்தின தாசன்).

 

தங்குவதற்கு இடமின்றி. தனது 14-வது வயதில் பிழைப்புத் தேடி சென்னையில் சுற்றித் திரிந்த கண்ணதாசனுக்கு எந்த மெரினாவிலுள்ள காந்தி சிலை வழியே திக்குத் தெரியாமல் சுற்றித் திரிந்தாரோ; அவருக்கு பிடித்த அதே காந்தி மகானின் நினைவாக இன்னொரு மகனுக்கு காந்தி என்ற பெயர்.

 

கலைவாணனுக்கு தன் தந்தையைப் போலவே குழந்தை மனசு. கண்ணதாசனுக்கும் அவன்மேல் அலாதிப் பிரியம். கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் பாலு மகேந்திராவின் “மூன்றாம் பிறை”  படத்தில்  இடம்பெற்ற    “கண்ணே கலைமானே” என்ற பாடல். (அவர் கடைசியாக எழுதிய பாடல் இடம் பெற்ற படம் “உன்னை நான் சந்தித்தேன் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு)

 

“கண்ணே கலைமானே!” என்ற பாடல் தன் தந்தை தன்னை நினைவில் வைத்துதான் எழுதினார் என்று கலைவாணன் பிற்காலத்தில் அவனுக்கு நெருங்கியவர்களிடம் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

தன் சகோதரன் கலைவாணனின் நினைவுகளை கண்ணதாசனின் இன்னொரு தாரத்தின் (புலவர் வள்ளியம்மை) செல்வப் புதல்வியான விசாலி கண்ணதாசன் கூறுவதைக் கேளுங்கள்:

 

“அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு. கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்”

 

தன்மீது அளவில்லாத அன்பைப் பொழிந்த அன்புச் சகோதரனை இழந்தபோது இந்தச் சகோதரியின் மனம் எந்தளவுக்கு பாடுபட்டிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகின்றது.

 

தகப்பனின் அன்பை முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்காதவர் விசாலி என்றுதான் சொல்ல வேண்டும்.. கவிஞர் மரணிக்கையில் விசாலிக்கு கருத்து தெரியாத பருவம்.  அப்போது அவருக்கு வெறும் நான்கு வயதுதான்.

 

‘’அப்பாவோட மற்ற பதினான்கு பிள்ளைகளில் கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல”என்கிறார் விசாலி கண்ணதாசன்.

 

“கண்ணே கலை மானே”  பாட்டில் “கலை” என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்று கலைவாணன் ஒருமுறை  தன் சகோதரிகளிடம் வாதம் புரிய, அவர்கள் அதை “இல்லை” என்று மறுக்க அதை உறுதிப்படுத்த நேராகவே சென்று தன் தந்தையிடம் சந்தேகம் கேட்டிருக்கிறான்.

 

இன்னொருமுறை கலைவாணன் தன் தந்தையிடம் ஓடிச்சென்று அவரைக்  கட்டிப்பிடித்து

 

“அப்பா.. நீங்க எல்லாரைப் பத்தியும் பாட்டு எழுதுறீங்க. என்னைப் பத்தியும் பாட்டு எழுதுங்கப்பா”

 

என்று செல்லமாக கேட்டிருக்கிறான். கவியரசரின் நகைச்சுவை உணர்வுக்கும், சமயோசித புத்திக்கும் அளவே கிடையாது. உடனே குறும்புத்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

 

“உன்னைப் பத்தி ஏற்கனவே எழுத்திட்டேனடா…” என்று கவிஞர் சொல்ல கலைவாணனுக்கு ஒரே ஆச்சரியம். “சொல்லுங்கப்பா..” என்று மீண்டும் அவர் தோளைப் பிடித்து உலுக்க

“ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ?  பாட்டை உனக்காகத்தானே எழுதினேன்” என்றாராம் அந்த கவிராஜன் சிரித்துக் கொண்டே..

 

இந்த பதிலைக்கேட்ட மற்ற குழந்தைகளும் முண்டியடித்து அவர் மடிமேல் தவழ்ந்து

 

“அப்ப எங்களைப் பத்தியெல்லாம் ஒண்ணும் எழுதலையா..?” என்று சிணுங்கி இருக்கிறார்கள்.

 

கவிச்சக்கரவர்த்திக்கு பேச  சொல்லியா கொடுக்க வேண்டும்?

“அதுவும் எழுதி விட்டேனே..…!” என்றாராம். “அது என்ன பாட்டு?” என்று பிள்ளைகள் ஆர்வத்துடன் வினவ..

 

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு
ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றால்
ஒன்பது பிள்ளை அந்த
ஒன்பதிலே ஒன்றுகூட
உருப்படியில்லை..
உருப்படியில்லை “

 

என்று பாடி முடித்துவிட்டு, “இதையெல்லாம் உங்களை மனசுலே வச்சுத்தான் எழுதினேன்” என்று பிள்ளைகளை கலாய்த்தாராம்.

 

பாவம் பிள்ளைகள். இந்த பதிலை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மறுபடியும் செல்லமாக சிணுங்கிக் கொண்டு ஓடி விட்டன. .

 

கண்ணதாசனுக்குள்ளே கவிஞர்களுக்கே உரித்தான குசும்பு சற்று அதிகமாகவே குடிகொண்டிருந்தது

 

எங்க ஊரில் ஒரு பழமொழி வட்டார வழக்கில் கூறுவார்கள். “இருந்தா நவாப்சா, இல்லேன்னா பக்கீர்சா”. கண்ணதாசனைப் போல் லட்சக்கணக்கில் சம்பாதித்தவரும் இல்லை. அதுபோல   செலவழித்தவர்களும் இல்லை.  அப்போது லட்சங்கள் கோடிகளுக்குச் சமம்.

 

பெருமளவு சம்பாதித்துக் கொண்டிருந்த வேலையிலும் கடனில் மூழ்கி கண்ணதாசன் தன் குழந்தைகளுக்கு தீபாவளியன்று புதுத்துணிமணி, பாட்டாசுகள் வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் கண்ணீர்கூட வடித்திருக்கிறாராம்.

 

கண்ணதாசன் சில சமயம் இரவில் தாமதமாக வீடு திரும்புவார். சில பிள்ளைகள் முழித்துக்கொண்டு அவருக்காக காத்திருப்பார்கள். ஜாலியான மூடு வந்துவிட்டால் தனது அம்பாஸிடர் காரை எடுத்துக் கொண்டு மவுண்ட்ரோடிலுள்ள புகாரி அல்லது பிலால் ஓட்டலிலிருந்து வகைவகையான அசைவ உணவு பார்சல் கொண்டுவந்து வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். இறால், நண்டு, முயல்கறி, மான்கறி எல்லாமே விரும்பிச் சாப்பிடுவார்.

 

“பறப்பதில் ஏரோப்பிளேனும், ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று நகைச்சுவையாகச் சொன்னதை ஒரு பத்திரிக்கை பேட்டியின்போது காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

 

“குழந்தைகளுக்கு இடையே வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்” என்று தன் தந்தை பற்றிய சுவையான நினைவுகளைப் பகிர்கிறார் காந்தி கண்ணதாசன்.

 

—-அப்துல் கையூம்

 

– —- இன்னும் தொடரும்

கண்ணதாசன் நினைவுகள் – பாகம் 1