“உள்ளம் என்பது ஆமை – அதில்
உண்மை என்பது ஊமை”

Kஅன்ன

இன்னிசையுடன் கூடிய கண்ணதாசனின் இப்பாடல்வரிகளை,  இரவின் மடியில், இரண்டு கண்களையும் இறுக்கமாக மூடியபடி   இலயித்து  ரசிக்கும்போதெல்லாம், அதில் வரும் ஒவ்வொரு வரிகளுக்கும், காட்சிகள்  என்  மனக்கணினி திரை முன், தனித்தனியே Windows தானகவே திறக்கும்.

இப்பாடலின் அத்தனை வார்த்தைகளுக்கும் அருஞ்சொற்பொருள், அத்தனை வரிகளுக்கும் பதவுரை; பொருளுரை; விளக்கவுரை எழுத வேண்டுமெனில் எனக்கு நேரமும் போதாது, அதை வாசிக்க உங்களுக்கு பொறுமையும் கிடையாது.

அதில் காணப்படும் இரண்டே இரண்டு வரிகளுக்கு மட்டும் சிறிய விளக்கத்தை தர விழைகிறேன். (சிறிய விளக்கமே இம்புட்டா என்றெல்லாம் கேட்கப்படாது. )

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”

இதுதான் இப்பதிவுக்காக விளக்கம் கூற முற்பட நான் எடுத்துக் கொண்ட  இருவரிகள்.

வெறும் எட்டாம் வகுப்பு வரை படித்த கவிஞர் கண்ணதாசன் எப்படி திருமூலர் கருத்துக்கள் முதல் ஷேக்ஸ்பியர், ஷெல்லி கருத்துக்கள் வரை  இரண்டிரண்டு வரிகளில், உயிரைக் குடிக்கும் வீரியம் கொண்ட சயனைடு வேதிப்பொருளை சிறிய குப்பிக்குள் அடைத்து வைப்பதுபோல், வீரியமிக்க கருத்துக்களை Auto Compress செய்து எப்படி Word Format-ல் அடக்கி வைத்தார் என்பது மில்லியன் தீனார் கேள்வி (ஏன்.?. டாலரில் மட்டும்தான் கணக்கு சொல்ல வேண்டுமா என்ன?)

இந்தக் கருத்தை கண்ணதாசன் திருமூலரிடமிருந்து காப்பிரைட் இன்றி “அலேக்காக அபேஸ்” பண்ணியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன் அல்லது Great Minds think Alike” என்ற கோட்பாட்டின்படியும்  இருக்கக்கூடும். திருமூலர் சொன்ன மூலக்கருத்தை Enlarge செய்வதற்கு ஒரு குட்டிக்கதை இங்கு தேவைப்படுகிறது.

சுரேஷும்,  ரமேஷூம் ஒரு கலைப்பொருள் கண்காட்சிக்கு செல்கிறார்கள். அங்கு பிரமாண்டமான அளவில் தேக்கு மரத்தாலான ராட்சத யானை ஒன்று செதுக்கப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

“வாவ்..! சூப்பர்.. என்னமா ‘ டால்’ அடிக்குது பாத்தியா இந்த தேக்கு மரம்” என்கிறான் ரமேஷ்.

“ஓ மை காட்! அட்டகாசம்..! எவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார்கள் இந்த யானையை?. அஜீத் படம் மாதிரி அமர்க்களமாக இருக்கிறது” என்கிறான் சுரேஷ்.

காணும் காட்சி ஒன்றே. காண்பவர்களின் மனநிலை வெவ்வேறாக இருக்கிறது

இதைத்தான் திருமூலர் சொல்கிறார்

“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை” என்று.

கண்ணதாசன் எழுதிய மற்றொரு பாடலும் கிட்டத்தட்ட இதே உட்பொருளை  கருவாகக் கொண்டதுதான் அண்ணன் தம்பிகளான 2G [அதாவது சிவாஜியும், பாலாஜியும்]  பெண்பார்க்கச் செல்கிறார்கள். ஒருவனுடைய கண்களுக்கு அப்பெண் பொன்னாகத் தெரிகிறாள். இன்னொருவன் அவள் முகத்தைக் காண்கிறான் . அது அவனுக்கு முகமாகத் தெரியவில்லை; பூவாகத் தெரிகிறது. இது என்ன உடான்ஸ் என்று கேட்கக்கூடாது. இதற்குப் பெயர்தான் Concentration.

//பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?//

இதுதான் அந்த அர்த்தம் பொதிந்த அட்டகாச வரிகள்

“கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!” என்ற பழமொழியை நாம் அடிக்கடி கையாள்கிறோம். அதன் உண்மையான உட்பொருள் வேறு. நாம் பயன்படுத்தும் சூழ்நிலை வேறு.

“கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்”

என்ற சொல்வழக்குத்தான் நாளடைவில் [GUN என்ற உயிர்கொல்லி ஆயுத எழுத்துக்களை அகற்றிவிட்டு], நாயகனை நாய் ஆக்கி விட்டது..

கோயிலுக்குச் செல்லும் ஒருவன் கல்லால் ஆன நாயகனை (கடவுளை) வெறும் கல் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அது வெறும் கல்தான். அதேசமயம் அதனை கல் என்ற எண்ணத்தை அகற்றிவிட்டு கடவுளாகப் பார்த்தால் அது கடவுள்தான் என்று பொருள். இதைத்தான் ILLUSIONS என்று மேஜிக் செய்பவர்கள் கூறுகிறார்கள்.   நான் பள்ளியில் படிக்கையில் ஒரு மேஜிக் வித்தை செய்பவர்  எவர்சில்வர் டம்ளரில் கரண்டியால் கிண்கிணி என்று அடித்து சப்தம் உண்டாக்கி விட்டு அந்த     அதிர்வலை அடங்குவதற்குமுன் என் காதில் வைத்து “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற பாடல் உன் காதில் கேட்கிறதா என்றார். என்ன ஆச்சரியம்? ஆம் கேட்டது.!!!

இதைத்தான் கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமரனும் புரியும் வண்ணம்

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”

என்று பாடினான்.

“Concentration is the root of all the higher abilities in man” என்கிறார் மறைந்த உலகப் புகழ்ப்பெற்ற தற்காப்புக்கலை வீரர் புரூஸ்லீ.

“The secret of concentration is to shut down the other windows.”    என்கிறார் இன்னொரு யோகி

“மனதை ஒரு முகப்படுத்த கற்றுக் கொள்பவன் மகான் ஆவான்” என்கிறார் சுவாமி விவேகானந்தர் .

ஐவேளை தினந்தோறும் தொழுகும்  ஒரு முஸ்லீமுக்கு தொழுகையை விட மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான எண்ணம்.

வில்வித்தையில் நிபுணத்துவம் பெற்ற அர்ச்சுனன் பறவையை குறி பார்த்தபோது, அவனுக்கு அந்த பறவை அமர்ந்திருந்த மரமோ, மரத்தின் இலைகளோ, அல்லது அதற்கு பின்னால் தென்பட்ட வானமோ, அதனை சுற்றியிருந்த காட்சிகள் எதுவுமே அவன் கண்ணில் படவில்லை, ஏன் அந்த பறவைகூட அவன் கண்ணுக்கு முழுமையாகத் தெரியவில்லை, அவன் கண்ணுக்கு தென்பட்டது அப்பறவையின் கழுத்து மட்டுமே.

சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று ஒரு கேள்வி கேட்கின்றான்.

“சுவாமி! நீங்கள் எங்கும் பிரம்மம் உள்ளது. அதைவிடுத்து வேறெதுவும் இங்கு இல்லை என்று உறுதியாக சொல்கின்றீர்கள், ஆனால் என் கண்களுக்கோ உலகம்தான் தெரிகின்றதே தவிர பிரம்மம் தெரியவில்லையே. ஏன் சுவாமி?”  எனக் கேட்கின்றான்
.
குருஜீ ஒரு மெல்லிய புன்னகையோடு பதில் கூறுகிறார்.

“ஒருவன் நகை வாங்க பொற்கொல்லர் இல்லத்திற்குச் செல்கிறான். அவரது அறையில் அவர் உருவாக்கிய வளையல், காப்பு, மோதிரம், தோடு கம்மல், பிள்ளையார் உருவம், போன்ற ஆபரணங்கள்   செய்யப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. தங்கமும், அதன் தரமும், அதன் எடையும் மட்டுமே அந்த ஆசாரிக்கு முக்கியம் அதேபோன்று போல பிரம்மத்தைதவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை.    நம்மிருவருக்குமே   காட்சி ஒன்றுதான், ஆனால் பார்க்கும் பார்வைதான் வெவ்வேறு” என்று அவனுக்கு புரிய வைத்தார்.

குருஜி முதல் புரூஸ்லீ வரை அத்தனைப்பேருடைய கருத்துக்களையும் கண்ணதாசன்

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலையென்றால் வெறும் சிலைதான்”

என இரண்டே வரிகளில் ஒரு மேஜிக்காரர் வரவழைக்கும் ILLUSION    போன்று  காட்சிகளை கொண்டுவந்து நமக்கு எளிதில் புரிய வைத்தார்.

That Is Knnadasan.

#அப்துல்கையூம்