இன்று குமரி அபுபக்கர் பாடிய குணங்குடி மஸ்தானின் பாடலைக் கேட்டபோது சில எண்ணங்கள் என் மனதில் ஓடின. அதை உங்களுக்கு பகிர்கிறேன்.

நம் வாழ்க்கை என்பது ஒரு பொம்மலாட்டம் போன்றது. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் “IT’S JUST A PUPPET SHOW” .

கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய கயிறால் நாம் இயங்குகிறோம். அதை ஆட்டுவிப்பவன் மேலிருந்து இயக்குகிறான். மெல்லிய கயிறால் ஆட்டுவிக்கும் அந்த சக்தியை அவரவர் அவரவர் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயரைக் கொண்டு அழைக்கின்றனர்.

சிலர் அல்லாஹ் என்கின்றனர்.
சிலர் கண்ணா என்று விளிக்கின்றனர்
இன்னும் சிலர் நந்தலாலா என்று அழைக்கின்றனர்.

“உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!” என்று பாடலைத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசன்

‘கால் கொண்டு ஆடும் பிள்ளை
நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா
நீ சொல்லு நந்தலாலா”

என குணங்குடியாரின் பொம்மலாட்ட தத்துவத்தை வருணிக்கிறார்

அவர் சொல்ல வரும் கருத்தை ஒரே வரியில் நான் சொல்ல வேண்டுமென்றால் “LIFE IS LIKE A PUPPET SHOW” என்கிறார். அவ்வளவுதான். SIMPLE DEFINITION.

இன்னொரு பாடலில்

“ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆடாதாரே கண்ணா”

என்ற அதே கருத்தை வேறு பாணியில் சொல்கிறார்.

இந்த PUPPET SHOW தத்துவம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று ஆராய்ந்துப் பார்த்தால் அது குணங்குடி மஸ்தான் பாடலில் நமக்கு காணக் கிடைக்கிறது.

//ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி//

என்று கண்ணதாசன் எழுதிய மற்றொரு பாடலில்

“ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – இதில்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை”

என்ற தத்துவத்தை முன் வைக்கிறார். “உன் கையில் ஒன்றும் இல்லை. உன்னை ஆட்டுவிப்பவன் கையில்தான் எல்லாமே உள்ளது” என்பது இதன் உள்ளர்த்தம்.

குணங்குடி மஸ்தான் என்பவர் ஒரு மாபெரும் சித்தர், மிகப்பெரும் ஞானி என்பதை நாம் அறிவோம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். குமரி அபுபக்கரின் இனிமையான குரலில் இசைக்கும் இந்த தத்துவப் பாடலை இதோடு இணைத்திருக்கிறேன்

//சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினைப் பாரடா!
அதிசூட்சும கயிற்றினைப் பாரடா !!

நேத்திரம் இரண்டிலும் நேரில் இலங்கிய
நீடொளி போன்றது தேட அரிதாகி
காத்திரம் உள்ளது யாவும் பொதிந்தது
கையிலும் காலிலும் எட்டப்படாதது

சாத்திர வேதம் சதகோடி கற்றாலும்
சமயநெறிகளினால் ஆச்சாரம் பெற்றாலும்
பாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும்
பாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்
மாத்திரை நேரம் எமன் வரும் அப்போது
மற்றொன்றும் உதவாது உதவாது

சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்

உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன

கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ — இந்த

மாயாப்பிறவி வலையை அடைத்திட
மாறாத் தியானமனத்தினில் இணைத்திட
காயாபுரிக் கோட்டை கைக்குள் அகப்பட
காணும் மணிச்சுடர் தானே விளங்கிட

ஆயும் அறிவுடன் யோகத்தினால் எழும்
ஆனந்தத் தேனை உண்டு அன்புடனே தொழும்
தாயாய் உலகத்தை ஈன்ற குணங்குடி
தற்பரனைக் கண்டு உவப்புடனே சென்று

சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினை பாரடா
அதிசூட்சும கயிற்றினை பாரடா !!//

குணங்குடியாரின் இப்பாடலில் இரண்டு விதமான தத்துவத்தை நாம் காண முடிகிறது. ஒன்று வாழ்க்கை என்பது பொம்மலாட்டம் என்ற கருத்து, மற்றொன்று வாழ்க்கை என்பது ஒரு தோணியைப் போன்றது என்ற கருத்து.

//சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்//

என்ற மேற்கண்ட குணங்குடியாரின் கருத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள்

//வாழ்க்கையெனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்//

என்று கூறுகிறார். மேலும் தொடர்கிறார்

//துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்
தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்த படகின் நிலை போலே ஆகும்//

இப்பாடல் பூம்புகார் படத்தில் கவுந்தியடிகள் பாடுவதைப் போன்று காட்சி அமைந்திருக்கும்.

//உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன//

என்ற குணங்குடியாரின் கருத்துக்களைத்தான் இலகுவான சொற்களால் தோரணம் அமைத்திருப்பார் கண்ணதாசன்

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன…?

//கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ//

என்ற குணங்குடியாரின் தத்துவக் கருத்துக்களை ‘போனால் போகட்டும் போடா’ என்ற பாடலில் இணைத்திருப்பார்.

//இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா…//

போனால் திரும்பி வராத கட்டை என்ற கருத்தைத்தான் கண்ணதாசன் அவரது பாணியில் சொல்லியிருப்பார். இந்த கட்டை என்ற சொற்பதத்தை அவர்

//பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா//

என்ற பாடலிலும் பயன்படுத்தியிருப்பார்.

இப்போது மறுபடியும் குணங்குடியாரின் பொம்மலாட்ட தத்துவத்தை வைத்து ‘போனால் போகட்டும் போடா’ பாடலை எப்படி கண்ணதாசன் முடிக்கிறார் என்று பாருங்கள்

//நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா…//

ஆக அந்த சூட்சமக் கயிற்றை இயக்குபவன் சூழ்ச்சிக்கார்ர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரனாக விளங்கும் எல்லா வல்ல இறைவன்தான் என்ற சித்தர்களின் தத்துவத்தை இந்த சாதாரண சினிமா பாட்டின் மூலம் நமக்கு கண்ணதாசன் உணர்த்துகிறார்.

#அப்துல்கையூம்

பின்குறிப்பு :
சுக்கான் : தேவையான திசையில் கப்பல் திருப்ப உதவும் கருவி