Kanna 4

கண்ணதாசனின் கருத்து

தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!

வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.

ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.

காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.

(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)

இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.

இப்படக் கதை செல்லும்.

பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.

மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.

சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.

தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.

இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.

அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.

படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!

வாருங்கள்!

(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.

மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?

நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?

வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.

வீரன்: இல்லை!

சொக்கன்: எப்படி?

வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!

வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!

நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…

வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!

{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….

நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!

சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.

நரசப்பன்: அரசே!

சொக்கன்: போவாயாக.

(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)

பொம்மண்ணன்: மன்னா!

சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.

பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.

சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.

{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}

இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.

ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!

பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.

திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!

வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!

வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!

பார்த்தீர்களா! படித்தீர்களா?

நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!

இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?

இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.

மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.

கவிஞர் வசனங்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் காவியங்கள்!

kanna 1

கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.

இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.

1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.

தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!
கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!

“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.

வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!

1956 – ஆம் ஆண்டில் புட்சி நடிகர் பற்றிக் கவியரசர் பார்வை:-

Kanna 2

‘கலைவாணர் வரிசையிலே கொடை கொடுப்பதில் இப்பொழுது புரட்சி நடிகர் இடம்பெறுகிறார்!’ என்ற கண்ணதாசன் கருத்து, வளர்ச்சி பெற்ற வளமான உண்மையாகவே வருங்காலத்தில் உருவெடுத்தது.

1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர் ‘மக்கள் திலகம்’ என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.

பின்னாளில் 1959 – ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், பள்ளிக்களுக்கு எம்.ஜி.ஆர் வாரி வழங்கிய நிதி ரூபாய் மூன்று இலட்சமாகும்.

1961, 1964 – ஆம் ஆண்டுகிளல் அடையாறு ஔவை இல்லத்திற்கு வழங்கிய நிதி ரூபாய் அறுபது ஆயிரங்கள்.

1960, 61, 64 – ஆம் ஆண்டுகளில் சென்னை வெள்ளநிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் எண்பத்தைந்தாயிரம்.

1960, 62, 64 – ஆம் ஆண்டுகளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நகரங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் ஒரு இலட்சமாகும்.

1961 – ஆம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வாங்கி, வழங்கிடத் தந்த தொகை ரூபாய் அறுபதாயிரம்.

1962 – ஆம் ஆண்டு சீனப்படையெடுப்பின் போது எம்.ஜி.ஆர் வழங்கிய யுத்த நிதி, ரூபாய் ஒரு இலட்சமாகும்.

1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தீக்குளித்த தியாகிகளுக்கு வழங்கிய நிதி ரூபாய் இருபதாயிரம். இதே ஆண்டில் பண்டிதர் நேரு பிரான் நினைவு நிதிக்கு வழங்கிய தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரமாகும்.

1965-ஆம் ஆண்டில் பரங்கிமலைத் தொகுதியில் பாலம் கட்டவும், நீர்த்தேக்கம் அமைக்கவும் தந்த தொகை ரூபாய் 41,500 ஆகும்.

1968-ஆம் ஆண்டில் மட்டும் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, விழுப்புரம் கல்லூரி, செங்கல்பட்டு கல்லூரி, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, மராட்டிய மாநில வெள்ள நிவாரணங்கள், ராஜஸ்தான் பஞ்சநிவாரணம், ஒரிஸ்ஸா பூகம்ப நிவாரண மற்றம் பல நற்செயல்களுக்கும் வழங்கிய தொகை இலட்ச ரூபாய்களுக்கும் மேலாகும்.

இவ்வளவுதானா? …. 1968 – ஆம் ஆண்டே சென்னையில் தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தந்த தொகை ரூபாய் ஒரு இலட்டசமாகும்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. விழாக்களுக்கு மட்டும் பலமுறை தந்த ரூபாய் ஐந்து இலட்சங்கள்.

இவை போன்று எத்தனையோ, தமிழ்ச்சான்றோர்கள், கலையுலகப் பிரமுகர்கள், நலிந்த கலைஞர்கள் எம்.ஜி.ஆரிடம் தனிப்பட்ட முறையில் பெற்ற நிதி ஏராளம்! ஏராளம்!

தாராளமாய்க் கலியுகப் பாரிவள்ளலாம் எம்.ஜி.ஆர். கரங்கள் ஈந்த நிதிக்கு எல்லாம் பட்டியல் ஈந்தால் அதிவே ஒரு நூலாக மலர்ந்து விடும்.

இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம், கவியரசர் பார்த்த பார்வையில் எம்.ஜி.ஆர் இறுதி வரையில் ஈயும் மனத்தோடு இருந்தார் என்பதனைச் சுட்டிடவே என்பேன்.

அதுமட்டுமல்ல… ‘கண்ணதாசன் என்ற கவிஞரின் வாக்கு, பொய்த்ததில்லை’ என்பதனை இந்தப் தமிழ்ப்புவியும் அறியவேண்டும் என்ற ஆவலுமே எனலாம்.

கவிஞரின் பாராட்டுக் கடிதத்தில் பவனி வரும் சில சொல்லோவியங்களைப் பாருங்களேன்!

இதய கீதமாக மட்டுமா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இலட்சோப இலட்சம் மக்களின் இதய தெய்வமாக அல்லவா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இன்றும் திகழ்ந்து கொண்டல்லவா இறந்தும், இறவாயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இன்னும் கவியரசரின் கணிப்பைச் சற்று, காண்போமா?

இது கணிப்பு மட்டுமல்ல… 1954 – 56 – ஆம் ஆண்டுகளில் வெளிவந்த படங்கள் சரிந்திர சாதனைகளுமே எனலாம்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த படங்கள் மூன்று. அவை முறையே,

அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்குப்பின் தாரம்

இம்மூன்று படங்களுமே வித்தியாசமான கோணங்களில் வெளிவந்து மகத்தான வெற்றிகளை ஒரே ஆண்டில் கண்ட ஒப்பற்ற படங்களாகும்.

12.1.1956 அன்று வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியீடான, டி.ஆர். சுந்தரம் இயக்கிய ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ தமிழில் வெளியான முதல் கலர் திரைப்படமாகும்.

இத்திரைப்படம் மகத்தான வெற்றி வெற்றதோடு, மதுரை ‘சிந்தாமணி’ திரையரங்கில் தொடர்ந்து, தினமும் மூன்று காட்சிகளாக 168 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது.

‘மதுரை வீரன்’ – இப்படத்தின் பெரும் பெருமைகளில், சிலவற்றைக் கண்டு மகிழ்ந்தோம்.

‘தாய்க்குப்பின் தாரம்’ 21.9.1956 அன்று வெளியிடப்பட்ட வெற்றிப் படமாகும். இப்படமும் மதுரை மாநகர் சந்திரா டாக்கீஸில் 161 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது. இப்படத்தின் சிறப்புகளையும் கண்டோம்.

ஆக, புரட்சி நடிகர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த மூன்று திரைக்காவியங்களும் மகத்தான வெற்றிகளைக் கண்டன என்பதனை நாம் அறியலாம்.

இனி இரண்டு படங்கள் எவை?

மலைக்கள்ளன்,

குலேபகாவலி – எனும் இவையே.

‘மலைக்கள்ளன்’, அன்றைய தமிழக அரசின் ஆஸ்தானக் கவிஞராக இருந்த நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதிய கதையாகும். இக்கதை பட்சிராஜா பிலிம்ஸாரின் சார்பில் திரைப்படமாகத் தயாரித்தபோது, கலைஞர் மு. கருணாநிதி, வசனங்களைத் தீட்டினார். 1954 – ஆம் ஆண்டு வெளியான இப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றதோடு, ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பேற்றினையும் பெற்றது. அப்படம் கோவையில் 150 நாள்கள் தொடர்ந்து ஓடியது.

குலேபகாவலி – ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர் ராமண்ணா இயக்கத்தில் உருவானது. இப்படத்தின் பாடல்கள், வசனங்களைத் தஞ்சை இராமையதாசு எழுதினார். 1955 – ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படமும் மகத்தான வெறியைக் கண்டது. திருச்சி பிரபாத் திரையரங்கில் இப்படம் 166 நாள்கள் தொடர்ந்து ஓடிச் சாதனை படைத்தது.

பெரும் அதிசயம் என்னவெனில், இந்த ஐந்து படங்களும் இலங்கையில் பல திரையரங்குகளில் நூறு நாள்களுக்கும் மேலாக ஓடி மேன்மைமிகு சரித்திரங்களைப் படைத்துக் காட்டின.

இந்த ஐந்து படங்களில், ‘குலேபகாவலி’ தவிர ஏனைய நான்கு படங்களில் நடிப்பின் இலக்கணமாய்த் திகழ்ந்த பி. பானுமதியே புரட்சி நடிகருடன் கதாநாயகியாய் நடித்துப் பெருமை பெற்றார்.

தமிழ்ப்படவுலக வரலாற்றில் வசூல் சாதனைகளைச் செய்து காட்டிய இந்தப் படங்களைத் தொடர்ந்து, மக்கள் திலகம் நடித்த ஏனைய படங்களும் எல்லையற்ற சாதனைகளைச் செய்து காட்டின.

அப்படங்களின் பட்டியலைப் பாருங்களேன்.

1957 – ஆம் ஆண்டு;

சக்கரவர்த்தி திருமகள்

மகாதேவி

புதுமைப்பித்தன்

ராஜராஜன்.

இவற்றில் முதல் மூன்றும் இணையற்ற சாதனைப் படங்களே.

1958 – ஆம் ஆண்டு;

நாடோடி மன்னன்.

நம்பிக்கை நாயகனாக எம்.ஜி.ஆரை மாற்றி, நாட்டிலேயே பெரும் புரட்சியை உருவாக்கிய படமே நாடோடி மன்னன்.

1959 – ஆம் ஆண்டு;

கல்பனா கலா மந்திர் தயாரித்த , அறிஞர் அண்ணா கதை எழுதி, இராம. அரங்கண்ணல் வசனம் எழுதி, ஆர்.ஆர். சந்திரன் இயக்கத்தில், அருமையான பாடல்களோடு வெளிவந்த படமே ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற புரண்ட்சிக்கருத்துகள் நிறைந்த படம்.

புரட்சி .நடிகரோடு, ஜமுனா கதாநாயகியாக நடித்த இப்படம் எதிர்பாத்த வெற்றியை ஈட்டவில்லை.

இப்படத்தில் கவியரசரின்,

“ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்’ என்று தொடங்கும் ஒப்பற்ற பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

1960 ஆம் ஆண்டு:

பாக்தாத் திருடன்

மன்னாதி மன்னன்

ராஜா தேசிங்கு

இம்மூன்றில், எம்.ஜி.ஆரோடு வைஜயந்திமாலா இணைந்து நடித்த, பாக்தாத் திருடன் பெரும் வெற்றியைப் பெற்றது.

கவியரசர் கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களைத் தாங்கி, வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’ முதலில் பரபரப்பான வெற்றியை எட்ட இயலாத நிலையில் இருந்து, பின்னர் யாரும் எதிர்பாராத வெறியை ஈட்டியது. ன்றளவும் இப்படம் மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் வெற்றிப்படமாகவே திகழ்கிறது.

கவியரசர் வசனத்தில், எம்.ஜி.ஆர். பானுமதி, பத்மினி, கலைவாணர், டி.ஏ. மதுரம் போன்றோர் நடித்து, மதுரை வீரனைத் தயாரித்த லேனா செட்டியார் தயாரிப்பில், டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளியான ‘ராஜாதேசிங்கு’, இஸ்லாமியக் கோட்பாடுகளில் சில சிக்ல்களால் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதன்பின்னர், ஜீபிடர் பிக்சர்ஸ் வெளியீடான ‘அரசினங்குமரி’: ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட, கண்ணதாசன் வசனத்தில் வெளிவந்த ‘திருடாதே’; தேவர் பிலிம்ஸ் வெளியீடான ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘குடும்பத் தலைவன்’ ஆகிய படங்களெல்லாம் மக்களால் வர்வேற்கப்பட்ட மகோன்னத வெற்றிப்படங்களாய்த் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரின் புகழ்க்கொடியை ஏந்திப் பறக்க வைத்தன.

இன்னும் நம் இனிய கவிஞர் சொன்ன இதயம் கவர்ந்த கருந்துகள் ஒன்றிரண்டைக் காண்போமே! அவை நல்கும் ஒப்பற்ற செய்திகளை அறிவோமே!

1955 – 56 – ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பெற்ற ‘ராணி லலிதாங்கி’ திரைப்படத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்கினார். தஞ்சை இராமையதாஸின் வசனம் பாடல்கள் இடம்பெற்ற இப்படத்தில், எம்.ஜி.ஆரின் இயக்கக் கொள்கைகளுக்கு மாறுபட்ட கதையமைப்பும், பாடல் காட்சிகளும் இடம்பெறத் தொடங்கின.

‘ஆண்டவனே இல்லையே!
தில்லையம்பல நடராஜனைப்போல்
ஆண்டவனே இல்லையே!’

என்ற பாடல் காட்சியில், நடிக்க இயலாது என்று எம்.ஜி.ஆர் சொல்லியும், தயாரிப்பாளர் சார்பில் விட்டுக்கொடுக்காத நிலை உருவாகியது.

உடனே, எம்.ஜி.ஆர். தான் நடித்த காட்சிகளுக்கான செலவனைத்தையும் தந்துவிட்டு, படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர் சிவாஜிகணேசன், பானுமதியோடு இணைந்து நடித்து, அப்படம் 1957 – ஆம் ஆண்டு வெளியானது.

ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர். ராமண்ணா தொடங்கிய ‘காத்தவராயன்’ படத்தில், கட்சிக்கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்துவிட்டார். இது போன்று, கட்சிக் கொள்கைகளுக்காக எம்.ஜி.ஆர் பல இலட்சங்களை இழந்தார். ஆனாலும் பல இலட்சம் இளைஞர்களின் இதயங்களை எம்ழஜி.ஆர், பரிசாகப் பெற்றுத் திகழ்ந்தார் என்பது மட்டும் அன்றே பெருமைக்குரிய செய்தியாகத் திகழ்ந்தது.

புரட்சி நடிகர் தன்னுடைய கோட்பாடுகளில் இருந்து, மாறுபட்ட காட்சிகள் அமைந்து, திரைப்படம் தயாரிப்பவர்களின் மடங்களில் என்றுமே நடித்ததில்லை. 1967, 68 – ஆம் ஆண்டுகளில், அன்றைய பிரபல இயக்குநர் ஸ்ரீதர், தயாரித்து இயக்கிய ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற தலைப்பிலான படத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆரின் கொள்கை கோட்பாடுகளுக்கு, மாறுபட்ட ஓரிரு காட்சிகள் படத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றில் எம்.ஜி.ஆர். நடிக்க மறுத்து, ஸ்ரீதரிடம் வாங்கிய தொகையைக் கொடுத்துவிட்டு வந்தார்.

அதன்பின்னர், அந்தப் படம் சிவாஜி நடித்து ‘சிவந்த மண்’ என்ற பெயரில் வெளியானது. ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற தலைப்பு ஜெய்சங்கர் நடித்த வேறொரு படத்தின் பெயராகிப்போனது.

காலவோட்டத்தில் மீண்டும் ஸ்ரீதர், தனக்கு ஏற்பட்ட சோதனையான காலகட்டத்தில், புரட்சி நடிகரைப் பார்த்து உரையாடி, ‘உரிமைக்குரல்’, என்ற படத்தைத் தயாரித்து, வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

இவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடக் காரணம்: கண்ணதாசன், எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதசக்தியைப் பார்த்து, கணித்துச் சொன்ன கருத்துகள் எனல்லாம் உண்மைகளாய், என்றும் உயர்ந்து நின்றன என்பதனை அனைவரது உள்ளங்களிலும் பதியவைத்திட வேண்டும் என்பதற்காகவே.

இன்னும், எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை வகித்தபோதும்; பதவிகளில் இல்லாத போதும், சங்கத்திற்காக ஆற்றிய பணிகள் சரித்திர சாதனைகள் படைத்தனவே. அவரது பணிகளை நடிகர் உலகமே நன்கறியும், அவரது அரும்பணிகளின் அடியொற்றி, இன்றைய சங்கத்தலைவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிகர்கள் பட்டாளத்தை ஓரணியில் திரட்டி, நடிகர் சங்கத்தையமு, கட்டடத்தையும் கடனில் இருந்து மீட்டுள்ள சாதனையை எம்.ஜி.ஆர். சார்பில் பாராட்டி மகிழ்வோமாக.

‘நடிகன் குரல்’ என்ற மாத இதழை, வித்துவான், வே. இலட்சுமணனைச் சிறப்பாசிரியராக நியமித்து, பல்லாண்டுகள் எம்.ஜி.ஆர் சிறப்புற நடத்தி வந்த சாதனையையும் யாரும் மறந்திட இயலாது.

தி.மு.கழகத் தலைவர்களும் எம்.ஜி.ஆரிடம் கொண்டிருந்த பற்றும், பாசமும், மதிப்பும் போற்றுதற்குரியனவே. அறிஞர் அண்ணாவே, ‘எனது இதயக்கனி எம்.ஜி.ஆர்’ என்று புகழ்ந்து கூறினார் எனில், இதனைவிட வேறு சான்று என்ன வேண்டியுள்ளது.

‘எம்.ஜி.ஆர். நமது வீட்டுப் பிள்ளைகளில் ஒருவர்!’ என்று, 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் கூறினார். நாட்டு மக்களோ, 1965 – ஆம் ஆண்டில் இருந்தே, ‘எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர்!; எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர்’ என்றே போற்றிப் புகழ்ந்தார்கள். இன்றும் புகழ்கிறார்கள்! இன்னும் புகழ்வார்கள்! இது நிச்சயம்.

‘எம்.ஜி.ஆர். புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது!’ என்று கண்ணதாசன் 1956 – ஆம் ஆண்டில் வாழ்த்தி எழுதினார்.

அந்த வாழ்த்தை, நாற்பத்தேழு ஆண்டுகள் கழித்து, நாம் நினைக்கும்போது நம் நெஞ்சங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?

‘எம்.ஜி.ஆரி புகழில் நாம் பெருமைப்படப் பெரிதும், பெரிதும் நியாயங்கள் இருக்கின்றன!’ என்றல்லவா சொல்லத் தோன்றுகின்றன.

கவியரசர் எண்ணங்களில் எழுந்த வாக்குகள், புவியரசராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் வாழ்வில் என்றும் பலித்தன என்பதனை அவரது திரையிசைப் பாடல்கள் மூலமும் பார்ப்போமாக.

அதற்கும் முன்னால், ‘வாக்குப் பலிதம்’ என்றால் என்ன? என்பதனையும் சற்றே பார்த்துச் செல்வோமாக.

வாக்குப்பலிதம் என்றால்?!….
கணிப்பொறி யுகத்தில், இணைய தளத்தில் உலகினையே வீட்டுக்குள்ளே உட்கார்ந்துகொண்டு வரவழைக்கும் காலத்தில் வாக்காவது? பலிதமாவது? என்று பகுத்தறிவு படைத்த பலரும்… ஏன்? சில ஆன்மீகவாதிகளும்கூட யோசிக்கலாம்!

ஆனால், நம்மையெல்லாம் விஞ்சி, சில அதிசயங்கள் நடக்கின்றனவே! என்று ஒருவர், மற்றொருவரை எச்சரிப்பார்! அது நடந்து விடுகிறது.

‘அந்த ஜோதிடர் சொன்னால், அப்படியே நடக்கும்!’

‘இந்த டாக்டர் கைராசிக்காரர்; கை தொட்டுப் பார்த்தாலே நோய் உடனே குணமாயிடும்!’

‘காலையிலே அந்த அம்மா எதிரிலே வந்தாங்க… லட்சுமிதேவியே வந்த மாதிரி… இன்னக்கி எல்லாக் காரியமும் நல்லபடியா முடிஞ்சது!’

இவை போன்ற பேச்சுகளையும், நாம் நாளும் நம் வாழ்க்கையில் கேட்கத்தானே செய்கிறோம்.

இவற்றைத்தான் வாக்குப்பலிதம், யோகம் என்றெல்லாம் சொல்லுகிறோம்.

கவியரசர் கண்ணதாசனின் உதவியாளராகவும், ‘தமிழரசு’ அரசு மாத இதழில் பணியாற்றியவருமான புலவர் தமிழ்ப்பித்தன் எழுதிய ‘பாட்டுக்குயில் கண்ணதாசன்’ என்ற நூலில் இருந்து, இது குறித்து அவர் கூறியுள்ள கருத்துகளைச் சுருங்கக் காண்போம்!

‘செந்தாமரை’ எனும் படத்தில் அவர் பாடும் பாடலொன்றை எழுதும் பொறுப்பு கவிஞரிடம் ஒபடைக்கப்பட்டது.

கவிஞரும், கதையமைப்பிற்குப் பொருந்துமாறு, புது உத்தியைக் கையாண்டு,

“பாடமாட்டேன் – நான் பாடமாட்டேன்!”

என்று தொடங்கி,

“பாவலர் செய்த தமிழ்க் கலைப்பாட்டன்றி
வேறு எதையும் – பாடமாட்டேன்!”

என்று, பாட்டைத் தொடர்ந்து எழுதினார்.

பகுத்தறிவில் வளர்ந்த கே.ஆர். ராமசாமியும் இப்பாடலை நன்றாகவே பாடினார். பல்லாண்டுகள் கடந்தே படமும் வெளிவந்தது.

ஆனால், எப்படியோ – ஒரு மோசமான சூழ்நிலை, வளமான கே.ஆர். ராமசாமியின் குரல், பாடலைப் பாடும் நிலையிலிருந்து மாறிவிட்டது.

அப்போது அவர் நடித்து வந்த ‘அவன் அமரன்’ என்னும் படத்தில் அவர் பாடவேண்டிய பாடலை சீர்காழி கோவிந்தரஜனே பாடவேண்டியதாயிற்று.

வளமான குரல் வளத்துடன் பாடி நடித்த கே.ஆர். ஆர். பாட்டுக்கு வாயசைக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

இங்கேதான்,

“பாடமாட்டேன் – நான்
பாடமாட்டேன்!”

என்ற பாடல் சொற்கள் அறம் விழுந்த சொற்களோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

கவிஞரின் வாக்கு, பலிதமாகி விட்டதோ என்ற நினைப்பையும் தோறுறுவிக்கிறது.

இந்த உண்மையை உணர்ந்த கவிஞரும், இதன்பின்னர் அறம் விழும் சொற்களைத் திவிர்த்தே பாடல்களை எச்சரிக்கையாக எழுதினார்.

இருப்பினும் அவரையும் அறியாமல்,

“விடியும் விடியும் என்றிருந்தோம் – அது
முடியும் பொழுதாய் விடிந்ததடா!”

என்று, ‘சிவகெங்கைச் சீமை’ படத்திற்காக, பாடல் ஒன்றை எழுதினார்.

படமும் தோல்வி கண்டதோடு, ‘கண்ணதாசன் புரசடெக்சன்ஸ்’ என்ற நிறுவனமும் கலைக்கப் பெற்றது.

இங்கு கவிஞரின் வாக்கே, கவிஞருக்குக் கஷ்டங்களைத் தந்துவிட்டது.”

இதுவரை, தமிழ்ப்பித்தன் குறிப்பிட்ட வாக்குப்பலிதங்களைப் பார்த்தோம்.

திரைப்படவுலகில் கொடிகட்டிப் பறந்த டி.ஆர்.மகாலிங்கம், நடிப்பதற்குப் படங்களின்றி நலிந்த நிலையில் இருந்தார்.

அப்போதுதான் கண்ணதாசன்,

“எங்கள் திராவிடப் பொன்னாடே!”

“செந்தமிழ்த் தேன்மொழியாள்!”

போன்ற பாடல்களை எழுதி, தனது ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில், டி.ஆர். மகாலிங்கம் பாடி, நடித்திடும் வாய்ப்பினை நல்கினார்.

அதன் பின்னர் டி.ஆர். மகாலிகத்தைத் தேடி, ஒப்பந்தம் செய்திடப் படத் தயாரிப்பாளர்கள் படையெடுத்தார்கள்.

கவிஞரின் மங்கள வார்த்தைகள், மகாலிங்கத்திற்கு மறுவாழ்வைப் பெற்றுத்தந்தது.

‘வானம்பாடி’ – இது கவிஞர் தயாரித்த இனிமையான பாடல்கள் நிறைந்த வெற்றிச்சித்திரம். இதில் கதாநாயகன் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். பாடுவது போன்ற பாடல் காட்சிக்காக ஒரு பாடல்.

பாடலைக் கவிஞர்,

“கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
காதலித்து வேதனையில் சாகவேண்டும்!”

என்ற பல்லவியுடன் எழுதியிருந்தார்.

பாடலைப் பாடவந்த டி.எம். சௌந்தரராஜன், ‘கடவுள் சாகவேண்டும்!’ என்ற பல்லவியைப் பார்த்து பயந்து, ‘நான் பாடமாட்டேனுங்க!’ என்று சொல்லிவிட்டார்.

அவர் மறுப்பு, கவிஞருக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது என்றாலும், வார்த்தைகளை வாரி வழங்கும் மன்னர், பாடகரின் உணர்வுக்கு மதிப்புத் தந்து.

“கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!”

என்று, பல்லவியை மறுவிநாடியே மாற்றித் தந்தார்.

இன்றுவரை, கவிஞரின் திறமைக்கும், இசையமைத்த் கே.வி. மகாதேவனின் பெருமைக்கும், டி.எம். சௌந்தரராஜனின் கடவுள் பக்திக்கும் ஏற்றங்கள் தரும் பாடலாகவே இப்பாடல் திகழ்கிறது.

‘வானம்பாடி’ பாடல் பற்றிய விசயம் தமிழ்ப்பித்தனால் குறிப்பிடப்பட்டதாகும்.

இப்படி ‘வானம்பாடி’ படத்தில் பாட மறுத்த டி.எம்.எஸ் மன்சூர் கிரியேசன்ஸ் தயாரித்த ‘ஒருதலை ராகம்’ படத்தில்,

“என் கதை முடியும் நேரமிது!”

“நான் ஒரு ராசியில்லா ராஜா!”

இவ்வாறு தொடங்கும் இரண்டு பாடல்களையும் பாடி, உச்சத்தில் இருந்த தனது பின்னணி பாடும் நிலையை, மிகவும் பின்னுக்கு தள்ளிக் கொண்ட கதையையும், தனக்குத்தானே வாக்குப் பலிதம் செய்துகொண்டதாகத்தானே கூறவேண்டும்.

இப்போது வாக்குப்பலிதங்களை, நமது இதயங்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் அல்லவா?

kanna 6

எம்.ஜி.ஆர். படங்கள்!
கண்ணதாசன் பாடல்கள்!
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்தியாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

வினாக்களுக்கான விடைகள்!

கண்டறியப்பட வேண்டும்!

எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

நினைத்துப் பாருங்கள்!

சிந்தனைக்குச் சில துளிகள்!
கவியரசர் கண்ணதாசன் 1961 – ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஒன்பதாம் தேதி, தி.மு.கழகத்தை விட்டு, விலகிச் சென்றுவிட்டார்.

கழகத்தை விட்டு, விலகிச் சென்ற கவியரசர்; கழகத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் அடைய விரும்பிய திராவிட நாடு கொள்கை பற்றியும், திராவிட நாடு கொள்கையை அவர்கள் கைவிட்டது பற்றியும்; நாட்டையாளும் நிலையில் நாற்காலிகளில் அவர்கள் அமர்ந்தால் நேரக்கூடிய அவலங்கள் பற்றியும் ஏராளமாக எழுதினார், மேடை முழக்கங்களும் செய்தார்.

இவற்றையெல்லாம் தனது இதயத்தின் ஒரு பகுதியில் இருத்திக் கொண்ட மக்கள் திலகம்; தனது படங்களில் கண்ணதாசன் பாடல்கள் எழுதக்கூடாது என்று, எந்தத் தயாரிப்பாளரிடமும் கட்டளை பிறப்பித்ததில்லை.

இதனால்தான் தேவர் பிலிம்ஸ் தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த அனைத்துப் படங்களுக்கும் (ஒன்றிரண்டு தவிர) கண்ணதாசனே பாடல்களை எழுதிக் குவித்தார்.

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கும்; ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர். ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார்.

இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.

திராவிட இயக்கத்தில் இருந்தபோது கண்ணதாசன் எழுதிய

‘அச்சம் என்பது மடமையடா!

அஞ்சாமை திராவிடர் உடமையடா!’

என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!

எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.

நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

இனி, எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசனின் கவித்துவம் வாக்குப் பலிதமாய் வாகை சூடிய விதங்களை விபரமாய்க் காண்போம்.

ஆரம்பகாலப் பாடல்கள்…. சில!
‘மர்மயோகி’ படம் வெளியான ஆண்டு 1951.

“அழகான பெண்மானைப் பார்!
அலைபாயும் கண்வீச்சைப் பார்!”

என்று தொடங்கும் இப்படப் பாடலில்,

வாடாத ரோஜா – உன்
மடிமீதில் ராஜா!
மனமே தடை ஏனையா! – நிதம்

பொன்னாகும் காலம்
வீணாக லாமோ!
துணையோடு உலகாளவா!

என்ற அருமைமிகு கவித்துவமே துள்ளித் ததும்புகின்றன.

‘உலகாளவா!’ என்ற அழைப்பு கவியரசரின் பாடலில், எம்.ஜி.ஆருக்கு எழுதும் முதல் படப்பாடலிலேயே எழுப்பும் விதம் விந்தையல்லவா!

“கண்ணின் கருமணியே கலாவதி – இசைசேர்
காவியம் நீயே!
கவிஞனும் நானே!”

என்று ஆரம்பம் ஆகும் பாடலில், அடுத்து,

“எண்ணம் நிறை வதனா – எழில்சேர்
ஓவியம் நீர் மதனா!”

“அன்பு மிகுந்திடும் பேரரசே!
ஆசை அமுதே என் மதனா!”

என வரும் தொடர்கள் எம்.ஜி.ஆரின் எழிலார்ந்த வனப்பையும், அன்புள்ளத்தையும், பேரரசாளும் பெருமையினையும் எடுத்துரைக்கும்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,

‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே! – கீதம்
பாடும் மொழியிலே!…”

இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.

இப்பாடலில்,.

“தேடிய இன்பம் கண்டேன்! இன்று
கண்ணா வாழ்விலே – உங்கள்
அன்பால் நேரிலே!…”

“ஸ்வாமி!
உன் அழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே!
அலைபாயும் தென்றலாலே
சிலை மேனி கொஞ்சுதே!”

என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

1957 – ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

“கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”

“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா!”

இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,

மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,

“மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு
வாழ்வது நமது சமுதாயம்!
மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்
மாறிவிடாது ஒரு நாளும்!”

என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;

“காமுகர் நெஞ்சில் நீதியில்லை – அவர்க்குத்
தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”

என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!

இவற்றுள்,

‘மானம் ஒன்றே!’ என்று தொடங்கும் பாடலின் முழு விளக்கத்தையும் ‘கண்ணதாசன் கவிதைகளில் கடவுள் நெறி’ என்ற எனது முந்தைய நூலில் எழுதியுள்ளேன்.

காலத்தை வென்ற பாடல்கள்!
‘அச்சம் என்பது மடமையடா!’
1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’

இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,

“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”

என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!

உண்மைதானே!

அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றியபோது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.

அவர்தானே,

‘அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்று கூறத்தகுந்தவர்.

நோயைக் கண்டு எம்.ஜி.ஆர். என்றேனும் அஞ்சினாரா? 1959 – ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

(திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம்)

1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.

(அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரசு பேரியக்கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றிவைத்தது எனில் மிகையாகா).

மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்; சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.

1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவமனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புருக்ளீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் முப்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”

என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே!

தொடரும் பாடலில், வளரும் செய்திகளைப் பார்ப்போமா?

“கனக விஜயரின் முடித்தலை நெறித்து
கல்லனை வைத்தான் சேரமகன்!
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி,
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!”

தொடர்ந்த இப்பாடல் வரிகளில், தமிழ்ப்புவியை ஆண்ட பண்டைய மன்னர்களின் வீரம் பறைசாற்றப்பட்டது.

அடுத்து……!

“கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!
களங்கம் பிறந்தால் பெற்றவள மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை!
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி!
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர், மானம் காப்போர்,
சரித்திரம் தனிலே நிற்கின்றார்!”

கவியரசர் தீட்டிய இந்த வைர வரிகள், புவியரசர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில், வரலாறாய் நடந்து வந்த வரிகள் அல்லவா?

சத்தியா எனும் தாய், கருவினிலே வளர்ந்தபோதே தனது அன்பு மழலையாம், எம்.ஜி.ஆர். என்ற மகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!

பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச் செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக் காலமெல்லாம் துணையாய் நின்ற காவல் தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும் தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு, மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.

கோடி மக்கள் இம்மண்ணில் வாழ்ந்ததுண்டு. வாழ்ந்த சுவடுகள் தெரியாமல் மறைந்ததும் உண்டு. ஆனால் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பவர் யாவர்?

மாபெரும் வீரர்! மானத்தைக் காப்போர்!

இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல…. வருங்காலச் சரித்திரத்திலும் சாய்ந்துவிடாது நிலைத்து நிற்பர்.

உண்மைதானா? உண்மையே! உதாரணம்…. எம்.ஜி.ஆரே!

1980 – ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்! வெற்றியெனும் படிகளில் ஏறியே பயணப்பட்டு, பழக்கமாகிப் போன எம்.ஜி.ஆர். இத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தார்.

இந்திரா காங்கிரஸ் – தி.மு.க. என்ற கூட்டணித் திமிங்கலம், எம்.ஜி.ஆர். என்ற கடலில் இருந்த வெற்றி எனும் சுறாமீன்களையெல்லாம் விழுங்கிவிட்டது.

எம்.ஜி.ஆர். இயக்கம் சிவகாசி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய இரு பாராளும்ன்ற இடங்களை மட்டுமே பெற்றது.

‘இரு விரல்களைக் காட்டியவர்க்கு இரண்டு இடங்களே கிடைத்தன’ என்று வலுவான எதிர்முகாமினர், இரட்டை இலைச்சின்னத்தையும் இடித்துரைத்துப் பேசலாயினர்.

இத்தோடு விட்டார்களா? கூட்டணி பலத்தை நம்பி எம்.ஜி.ஆர். அரசு மீதும் இல்லாத பொல்லாத ஊழல் குற்றச் சாட்டுகளைக் கூறி, அரசையும் கலைத்து விட்டார்கள்.

மாபெரும் வீரர் எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மானப்பிரச்சனையாய் மாறிவிட்டது.

அரசைக் கலைத்தவுடன், இனி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற அதிரடிப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

எம்.ஜி.ஆர். ஆமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நாஞ்சில் கி. மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி போன்ற பலரும் மாற்று முகாம்களை நோக்கிப் புறப்பட்டனர்.

1980 – ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ‘தி.மு.க – காங்கிரஸ்’ கூட்டணி இரு கட்சிகளும் சரி பாதி இடங்களில் போட்டியிட்டன. கூட்டணி வென்றால் கலைஞர் கருணாநிதியே தமிழக முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகப் பத்திரிக்கை உலகமோ, ‘சாய்ந்தால் சாய்கின்ற பக்கம்’, என்ற போக்கில் ‘தி.மு.க – இந்திரா காங்கிரஸ் கூட்டணி 210 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில், விட்டலாச்சார்யா படங்களில் வரும் மாயமந்திர ஜாலங்களைப் போன்றவற்றைச் செய்திகளாக்கி மக்கள் மத்தியில் திணித்தன.

ஆர்ப்பரிக்கும் ஆரவாரக் கூட்டணிக்கு நடுவில், மத்திய மந்திரிசபையின் படையெடுப்பிற்கு மத்தியில், கலைஞரின் உடன்பிறப்புகளின் உற்சாகப் போர்ப்பரணிக்கு இடையில், எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதர், தாய் சத்தியா கருவினிலே வளர்த்து ஈந்த தைரியத்தைத் தாரக மந்திரமாய்க் கொண்டு, தனது அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக மறவர்களின் மாபெரும் துணையோடு, என்றும் தளராத பாசத்தை அள்ளித்தரும் தாய்மார்களின் தணியாத பக்கபலத்தோடு தமிழக மக்களைத் துணிச்சலோடு தேர்தல் களத்தில் சந்தித்தார்.

நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? எனது தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது நியாயமா? மக்களே! நீங்களே எனக்கு நீதி வழங்குங்கள்!’ என்றே, எம்.ஜி.ஆர். சென்ற இடங்களில் எல்லாம் பேசினார்.

மறுமுனையில், பத்திரிக்கை கணிப்புகள், பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களை எடுத்துக் கூறியே, ஏகோபித்த நம்பிக்கையுடன் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே மறுமுனையில் வெற்றிவிழாச் சுவரொட்டிகள், நன்றி அறிவிப்புச் சுவரொட்டிகள் தயாராயின என்றும்; வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் பதவியேற்பு விழாவிற்காக ஆயத்தங்கள் செய்யப்பட்டு விட்டன என்றும் பேச்சுகள் எழுந்தன.

ஆனால் தேர்தல் முடிவுகளோ?… தலைகீழாய் மாறிப்போயின.

மானப்பிரச்சனையாய், தன்மானத்தோடு தேர்தலைச் சந்தித்த மாவீரன் எம்.ஜி.ஆர். இயக்கமே மாபெரும் வெற்றியைப் பெற்றது.

எம்.ஜி.ஆர். மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து, இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தைவரின் அ.இ.அ.தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.

எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது. அன்னை இந்திராவோ அவசரப்பட்டுச் செய்த தன் செயலுக்காகப் பின்னர் வருந்தினார்.

இப்போது புரிகிறதா? கண்ணதாசன் என்ற காலக்கவிஞரின் கவிதை வாக்குகள் வாகைசூடிய விதங்களின் விநோதங்கள்…..!

கண்ணதாசனே கூறுவாரே!

“கவிஞர் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
……………………………..
வளமார் கவிகள் வாக்குமூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!”

என்றெல்லாம்…………..

அவர் சொன்னவை சரிதானே!

நாம் உள்ளத்து உணர்வுகளை, துள்ளி எழுப்பி, உடன் அழைத்து, அமரவைத்து உணரச்செய்யும்,

“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!”

என்ற பாடலைப்போல், ஏராளமான பாடல்களை எம்.ஜி.ஆர். படங்களுக்காகக் கண்ணதாசன் படைத்து ஈந்துள்ளார்.

அவற்றுக்கெல்லாம் இப்பாடலுக்குக் கூறிய விளக்கங்கள் போல் விரிவுரைகள் காண்போமாயின், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர்!’ எனும் இந்நூலை, ஆயிரக்கணக்கான பக்கங்களுக்குமேல் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, இனிவரும் காலத்தை வென்ற பாடல்களுக்கான கருத்துகளைச் சுருங்கக் காண்போம்.

இடையிடையே நம் இனிய கவிஞர், எம்.ஜி.ஆரைப் பற்றிக் கூறிய அரிய செய்திகளையும் அறிந்து செல்வோமாக. அத்துடன், அதிசய மனிதர் எம்.ஜி.ஆர். கண்ணதாசனைப் பற்றியும், அவரது பாடல்கள் குறித்தும் குறிப்பிட்ட சில செய்திகளையும் கண்டு செல்வோமாக.

1980 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட கண்ணதாசன், ‘இந்தியாவை அன்னை இந்திரா ஆளவேண்டும்! தமிழகத்தை எம்.ஜி.ஆரே ஆளவேண்டும்! என்று தமிழக மக்கள் விரும்பினார்கள். விருப்பங்களின் விளைவே பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள்!’ என்று குறிப்பிட்டார்.

கண்ணதாசன் பாடல்களின் சிறப்பு! எம்.ஜி.ஆர். பாராட்டு!
கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சர்வகட்சித் தலைவர்கள் (தி.மு.கழகம் நீங்கலாக) கலந்துகொண்ட இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது,

“கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.

இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.

பின்னர் பேசும்போது,

“இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பிதயவைக்க முடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது.

சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.

கண்ணதாசன் பாடி, நடித்த பாடல்காட்சிகளை டெலிவிஷனில் அடிக்கடி ஒலி-ஒளிபரப்ப வேண்டும்!” என்று குறிப்பிட்டார்.

இலங்கை அமைச்சர் பேச்சின் மூலமும், எம்.ஜி.ஆரின் பேச்சின் மூலமும் கண்ணதாசன் பாடல்களின் தனிச்சிற்ப்புகள் புலப்படுகின்றன. அத்துடன், அப்பாடல்கள் எம்.ஜி.ஆர். என்ற மனிதநேய நெஞ்சத்தைத் தொட்டு, உயர்ந்த இடத்தைப் பிடித்த நுட்பமும் புலனாகிறது அல்லவா?

தாய் சொல்லைத் தட்டாதே!
தேவர் பிலிம்ஸ் திரைப்படங்கள் என்றாலே, எம்.ஜி.ஆருக்கு ஏற்றதுபோல், தாய்மையைப் போற்றும் தலைப்புள்ள படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்.

அவற்றுள் ஒன்றுதான், ‘தாய்சொல்லைத் தட்டாதே!’ என்ற படம். 1961 – ஆம் ஆண்டு கண்ணதாசன் வசனம் தீட்டி, சமூகப்படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து, வெற்றிக்கொடி நாட்டிய ‘திருடாதே!’ எனும் மூன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டு, மகத்தான வெற்றியை சென்னை மாநகரில் ஈட்டியது.

இப்படத்தில் கண்ணதாசன் எழுதிய எல்லாப் பாடல்களும் கருத்துச்சுவையும், இனிமையும் நிரம்பிய பாடல்களே கே.வி. மகாதேவன் இசையில்,

“காட்டுக்குள்ளே திருவிழா!
கன்னிப் பொண்ணு மணவிழா!
சிரிக்கும் மலர்கள் தூவி,
சிங்காரிக்கும் பொன்விழா!”

என்று, காதல் வெற்றியில் மிதக்கும் கன்னிப்பெண், பாடிக் குதூகலிக்கும் பாடலைக் கவியரசர் இப்படத்திற்காக ஈந்தார்.

இப்பாடல் 1962 – ஆம் ஆண்டு தேனி சட்டமன்றத் தொகுதியில், அன்றைய தி.மு.கழக வேட்பாளராகப் போட்டியிட்ட இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ஆருக்குப் பிரச்சாரப் பாடலாக மாற்றி ஒலிக்கப்பட்டு பெருமிதம் அடைந்த பாடலாகும்.

தேனியிலே திருவிழா!
தேர்தலெனும் பெருவிழா!
ஜெயிக்கும் எஸ்.எஸ்
ராஜேந்திரனுக்கு வெற்றிவழா!”

என்றமைக்கப்பட்டு, வளமான வரவேற்பைப் பெற்றதாகும்.

இப்படத்தில்,

கேட்போர்க்குப் பாடலாய், பல்லாண்டு வாழும் பாடலொன்றும் உள்ளதை கேட்க வேண்டாமா? கேட்போம்….!

“போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே! – இறைவன்
புத்தியைக் கொடுத்தானே! – அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே! – மனிதன் பூமியைக் கெடுத்தானே!”

கேட்டோம்! பாடலின் ஆரம்பமே பாடந்தானே!

மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்தவன் இறைவன் ஆனால்….!

புத்திகுள் பொய், புரட்டு, திருட்டு ஆகியவற்றைக் கலந்து பூமியைக் கெடுத்தவன் மனிதன்!

இங்கே குற்றவாளி யார்? மனிதன் தானே!

மனிதனின் செயல்களுக்குள் மறைந்திருக்கும், மர்மங்களையும் நாம் அறிய வேண்டாமா? கவிஞரே சொல்லட்டும்….! அறிவோம்!

“கண்களிரண்டில் அருளிருக்கும்! – சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்!
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்! – அது
உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்!”

அறிந்தோமா?

‘கண்ளோ அருள் பொழியும் அருவி!
உள்ளமோ பொய்நிறைந்த கடல்!
கருத்தினிலோ ஆயிரம் பொருள்கள்! – அவையே
கருவுக்குள் பிறந்தோரைக் கொல்லும் ஆயுதங்கள்!’

மனிதச் செயல்களுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் இவ்வளவுதானா?

படத்தில் நடிக்கும் மக்கள் திலகம், மக்களுக்குச் சொல்லும் பாடமாகக் கவியரசர் அள்ளித்தரும் கருத்துகளை இன்னும் கேட்பீர்களாக!

“பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே! – புலியின்
பார்வையில் வைத்தானே! – இந்தப்
பாழும் மனிதனின் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே! – இதயப்
போர்வையில் மறைத்தானே!…
கைகளைத் தோளில் போடுகிறான்! – அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்!
பைகளில் எதையோ தேடுகிறான்! – கையில்
பட்டதை எடுத்தே ஓடுகிறான்!”

கேட்டீர்களா?

‘பாயும் புலியின் கொடுமை பார்வையில் பாழும் மனிதனின் குணங்கள் இதயப் போர்வையில்! அப்படியானால்….!?

பாயும் புலியின் கொடுமையிலிருந்து தப்பலாம்? பாழும் மனிதனின் மறைக்கப்பட்ட குணக்கேடுகளில் இருந்து தப்பமுடியுமா?

தப்ப முடியாது தவிக்கும் மனிதனுக்குத் தொடர்ந்து வரும் சோதனைகளைப் பாருங்களேன்!

பழகிவிட்டது போன்ற பாவனையில், வருகிறான் ஒருவன்; வந்தவன் தனது கைகளை அருகில் உள்ளவன் தோள்களில், கருணை என்ற போர்வையில் போடுகிறான்! உரிமையோடு பைகளில் எவற்றையோ தேடுகிறான்! கைகளில் அகப்பட்டதை எடுத்தே ஓடி விடுகிறான்…..!

கருணைக்கும், உரிமைக்கும் இடம் தந்தவன் ஏமார்ந்து நிற்கிறான்!’

இப்படி, மனித சமுதாயத்தில் உலாவும், இந்தப் போலிகளை அடையாளம் காட்ட, புரட்சிநடிகர் புகட்டிய புரட்சிக் கருத்துகளுக்கு ஏற்றவாறு, எவ்வளவு அருமையாகப் பாடலைப் புனைந்து தந்துள்ளார் கவியரசர். இத்தகு பாடல்கள் அமையும் வண்ணம், தான் நடிக்கும் படங்களில் கருத்தைச் செலுத்தி வென்ற எம்.ஜி.ஆரை எப்போதும் கண்ணதாசன் பார்த்த பார்வைகளும் பரவசம் ஊட்டுவனவே எனலாம்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடித்து 1962 – ஆம் ஆண்டில் வெளியான படங்கள் ஆறு. இவற்றில் சமூகப் படங்கள், ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத் தலைவன்’, ‘பாசம்’, ‘மாடப்புறா’ உள்ளிட்ட நான்கு படங்கள்.

‘ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.

இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.

Kanna 7

கொள்கைப் பாடல்

இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

அதனை இப்போது காண்போமா?

“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!

“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.

நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!

பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”

பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!

இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

– என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

என்றும்,

“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது.

தாயைக் காத்த தனயன்!
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனிசிறந்தனவே!”

என்று பாடிய பாரதியாரின் பாடலுக்கு, இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவரே புரட்சித்தலைவர்.

தாய்ப்பாசத்தில் தன்னிகரற்று விளங்கியதுபோலவே, பிறந்த தாய்த்திரு நாட்டின்மீதும் அளவில்லாப் பற்றுகொண்டு வாழ்ந்தவரே எம்.ஜி.ஆர். என்பதனை எல்லோரும் அறிவர்.

அவரது தாய்ப்பாசத்தை நன்கறிந்த தேவர் திருமகனார், அவருக்கேற்றவாறே தனது படங்களில் பெயரினைச் சூட்டி மகிழ்வார் என்பதும் நாமறிந்த ஒன்றே.

‘தாயைக்காத்த தனயன்’ படம், 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் திரையிட்ப் பெற்று, பெரும் வெற்றியை ஈட்டியது.

இப்படத்தின் இனிய பாடல்கள் அனைத்தையும் கவியரசரே எழுதினார்,

“கட்டித் தங்கம் வெட்டி எடுத்து,
காதல் என்னும் சாறு பிழிந்து,
தட்டி தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! – அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!”

என்று, என்றும் புதுமையாய்ப் பூத்துக் குலுங்கி, நிலைத்து நிற்கும் காதல் ஓவியப்பாடலை யார்தான் மறக்கமுடியும்?

புரட்சி நடிகரும், ‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவியும் இணைந்து நடித்த அப்பாடல் காட்சியை இன்றும் இரசிக்காதவர் யாரேனும் உண்டா?

“பேரைச் சொல்லலாமா?
கணவன் பேரைச் சொல்லலாமா?”

என்று வினாக்களை எழுப்பி,

“பெருமைக்கு உரியவன் தலைவன் – ஒரு
பெண்ணுக்கு இறைவன் கணவன்!”

எனத் தமிழ்ப் பண்பாட்டைப் பதியம் போட்டுச் செல்லும் பாடலை இனி யார் தருவார்?

“காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப்போலப் பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு!”

இப்படி மலர்ந்து;

“காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறிவரும்!
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்!”

என்றே, பிறந்த மண்ணின் மகிமையைக் கண்ணயத்தோடு, காதல் பாடலில் தந்தால் சுவைக்காத உள்ளங்களும் சுவைக்குமே!

இன்னும் நம் இதயங்களை இனிமையாக்கும் பாடல்களோடு,

“நடக்கும் என்பார் நடக்காது!
நடக்கா தென்பார் நடந்துவிடும்!
கிடைக்கும் என்பார் கிடைக்காது!
கிடைக்கா தென்பார் கிடைத்துவிடும்!”

என்ற, நாட்டு நடப்பை நன்றாகக் கணித்துக் கூறும் தத்துவப்பாடலையும் தந்து, புரட்சித் தலைவரின் படத்தில் வெற்றிக்குப் பக்கபலமாய்க் கவியரசர் நின்றதுண்டு.

சரி, எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கண்ணதாசன் எழுதிய முத்தான பாடல்களை மட்டும் பார்ப்போம் என்றீர்? இப்போது ஒரு படம் என்றால் அதில் வரும் பாடல்களை, ஏறத்தாழ எல்லாவற்றையும் குறிப்பிட்டு விடுகிறீர்களே! இது என்ன விந்தை? என்று நீங்கள் கேட்கலாம்!

நான் என்ன செய்வது? புரட்சித்தலைவர் படத்திற்கென்று பாடல்கள் எழுதத் தொடங்கினால், கவியரசர் அனைத்துப் பாடல்களையும் நன்முத்துக்களாகவே படைத்து விடுகிறார்! நான் எதை விடுப்பது? எதைக் குறிப்பிடுவது?

காதல் பாடல்களில் கூடக் கவிஞர், எம்.ஜி.ஆர் என்ற ஏந்தலின் தனித்துவத்திற்குத் தனி முத்திரை இட்டுக் காட்டுகிறாரே? சொல்லாமல் செல்ல முடியவில்லையே!

இதற்கெல்லாம் காரணங்கள் எவை? கவிஞரே சொல்கிறார்…. கேளுங்கள்!

டைரக்-ஷனில் நல்ல ஒரு டெக்னீஷியன் எம்.ஜி.ஆர்!
நாகை தருமன் வெளியிட்ட ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’, என்ற புத்தகத்திற்காக, 1978 – ஆம் ஆண்டில் கவியரசர் கண்ணதாசன் தந்த பேட்டியினைக் கேளுங்கள்:

“சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றைவாடைத் தியேட்டரினுடைய ஒரு பகுதியில், ஒரு சிறிய வீட்டில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், பெரியவர் சக்ரபாணி, அவர்களுடைய தாயார் ஆகியோர் குடியிருந்தார்கள். அங்கே நானும், நண்பர் கருணாநிதியும் சென்று புரட்சித்தலைவரைச் சந்தித்தோம்.

ஜூபிடரில் நான் இருந்திருக்கிறேன். ஆனாலும் அங்கெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்புகள் கிட்டவில்லை; இங்கேதான் முதன் முதலாகச் சந்தித்தேன்.

இதற்கு முன்னாலே ஏறக்குறைய ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ‘அசோக்குமார்’ படம் பார்த்தபோது, ‘இவர் ஏன் கதாநாயகனாக நடிக்கக்கூடாது?’ என்று, என் மனதிற்குள்ளே ஒரு ஆதங்கம் எழுந்தது.

கையிலே ஒரு கத்தியை வைத்துக்கொண்டு, ஒரு போர்க்காட்சியிலே அவர் நிற்கின்ற அழகு மிக அற்புதமாக இருக்கும்.

அதெல்லாம் ஒற்றைவாடைத் தியேட்டர் அருகிலே புரட்சித்தலைவரைப் பார்த்தபோது என் நினைவிற்கு வந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தவராக அவர் மாறியபின்பு, நானும், அவரும் அடிக்கடி நெருங்கிப் பழக ஆரம்பித்தோம்.

கருணாநிதி அவரை வைத்து ஒரு படம் எடுத்தார். இந்தப் படத்திலே எனக்குப் பங்கில்லை; நான் எதுவும் எழுதவில்லை; என்றாலும் அந்தப் படம் எடுக்கப்பட்ட சமயத்தில் அவரோடு பழகியது சற்று அதிகமாக இருந்தது.

(இந்தப் படம் எம்.ஜி.ஆர். வி.என். ஜானகி இணைந்து நடித்து, ஜூபிடர், மேகலா கூட்டுறவோடு, பலரையும் பங்குதாரர்களாக்கி, கருணாநிதி வசனம் எழுதி, சி.எஸ். ஜெயராமன் இசையமைத்து, ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் 1953 – ஆம் ஆண்டு வெளிவந்து, வெற்றி காண இயலாது போன ‘நாம்’ எனும் படமாகும்.)

பிறகு அவருக்கு நிறையப் படங்கள் வந்தபோது, அந்தப் படங்களுக்கு நான் எழுதவேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். பலரிடம் கூட அதுபற்றிக் கூறினார்.

(அவர்தான் எம்.ஜி.ஆர்)

பலர் என்னை ‘புக்’ செய்து பல படங்களுக்கு எழுத வைத்தார்கள்.

அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடு நெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.

அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால், கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குத் தெரியாத அளவிற்கு அதிகமாக அவருக்குத் தெரியும்.

டைரக்-ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.

வசனத்தைப் படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு, எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்து கொள்ளுவார்.

மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்.

இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரிக் கதைதான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.

இந்த மாதிரிப் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டால்தான், மக்களிடையே மரியாதை இருக்கும் என்பதையும் அவர் அறிவார்.

கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும், சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!

அதனாலேயே சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.

இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவர அமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.

(இப்போது புரியுமே? எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் கண்ணதாசன் எழுதிய வசனங்களும், பாடல்களும் சத்தானவையாய், முத்தானவையாய் அமைந்து மக்கள் மனங்களை ஈர்த்ததன் மூல காரணங்கள்!)

இவைகளெல்லாம் என் மனதில் பசுமையாகப் பதிந்திருந்த காரணத்தால், பின்னாலே நானும் நிறைய எழுத முடிந்தது.

அவருடைய சந்திப்பும், அவரோடு எனக்கு ஏற்பட்ட பழக்கமும், நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கும் நிலைக்கு உருவாக்கின.

நாங்கள் இருவரும் ஒரு படத்தை எடுக்கவும் ஆரம்பித்தோம்.

‘பவானி’ என்ற படம், பாதியிலே நின்று போனாலும், எனக்கு அவர் நல்ல உதவிகள் செய்தார். அதிலே அவருக்குத்தான் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது.

ஆனாலும்கூட தொடர்ந்து எங்களுடைய உறவு நீடித்தது.

அவருடைய உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர் கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நன் குறிப்பிட்டிருக்கிறேன்.

மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்து நிலைத்து நிற்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”

கவிஞர் கண்ணதாசன் சொன்னதைக் கேட்டீர்கள்! கவிஞர் பார்வையில் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் திகழ்கிறார் என்பதையும் அறிந்தீர்கள்!

மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும் ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம், தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடு மன்னன்’ 1969 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய மூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில் சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.

காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும் மக்களின் மனமாற்றங்களை அறிந்து வெள்ளித்திரையில் வெற்றியை எப்போதும் காணமுடிந்த நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் ஒருவரே.

எனவேதான் அவருடைய படங்களுக்கெனக் கவியரசர் கண்ணதாசன், கருத்துச் செறிவுடன் எழுதிய வசனங்களும், பாடல்களும் காலம் கடந்தும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன. இன்றைய இளைஞர்களும் அவற்றை விரும்பி இரசித்துப் பாராட்டும் விந்தையைக் காண்கின்றோம்.

அடுத்து, இன்னும் 1962 – ஆம் ஆண்டு, படங்களின் பார்வையிலேயேதான் உள்ளோம்.

உண்ணும் உணவு வகைகளில் எல்லாமே சுவையாக இருந்தால் என்ன செய்வோம்? எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுவைப்போம்! அதுபோல… இனி தொடர்வோமா?

1962 – ஆம் ஆண்டு, தமிழ்ப்புத்தாண்டில், திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய ‘தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து தேவர் பிலிம்சாரின் ‘குடும்பத் தலைவன்’ திரைப்படம் அதே ஆண்டு சுதந்திர திருநாளன்று வெளியிடப் பெற்று மகத்தான வெற்றியைக் கண்டது.

இதில் அதிசயம் என்னவென்றால், தேவர் பிலிம்ஸ் என்ற ஒரே நிறுவனம் தொடர்ந்து வெளியிட்ட இரண்டு படங்களிம் வெற்றியை ஈட்டின என்பது மட்டுமன்று. இரண்டு படங்களிலும் கதாநாயகன் எம்.ஜி.ஆர், கதாநாயகி சரோஜாதேவி; கதை வசனம் ஆரூர்தாஸ், இயக்கம் எம்.ஏ. திருமுகம்; இசை கே.வி. மகாதேவன்; பாடல்கள் கண்ணதாசன்.

இப்படியொரு கூட்டமைப்பினரின் இரு படங்கள் இடைவெளியின்றி, நான்கு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றதாக உலகப்பட வரலாற்றில் எங்கும் காண இயலாது என்பதே உயர்வான அதிசயம்.

‘குடும்பத்தலைவன்’ படத்தில் கண்ணதாசன் எழுதியுள்ள பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்களே!

“மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்!”

இவ்விதம் தொடங்கும் பாடலில்,

“ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்!”

என்று, புரட்சிநடிகரைப் பார்த்து நாயகி பாடுவதுபோல் கவியரசர் எழுதிய பாடல், எம்.ஜி.ஆரை எடைபோட்டுப் பார்த்து, இந்தப் புவியோர்க்குச் சொன்ன உண்மையைப்போல் உள்ளதல்லவா?

பலம் – ஆயிரம் யானை பலம்!

மனம் – அல்லிக்கொடிபோல் மென்மை மனம்!

பாசம் – தாயின் பாசம்!

அணைப்பு – ஆடவர்க்கும் மெய்சிலிர்க்கும் அணைப்பு!

கவியரசர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வைகள் அனைத்துமே பாங்கானவையே.

“திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்!”

என்று தொடங்கும் பாடலும், இன்றும் திருமண மேடைகள்தோறும் ஒலிக்கக் கேட்கிறோம்.

“அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்!”

இப்படித் தொடங்கும் கவிஞர் பாடலில், எம்.ஜி.ஆரின் புகழ் எப்படியெல்லாம் எடுத்துக் கூறப்பெற்றுள்ளன என்பதைப் பாருங்களேன்!

“வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை – மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை!
…………………………………
அத்திப்பூ முகத்தைக் காண எத்தனைக் கூட்டம் – அதைத்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம்!”

பார்த்தீர்களா?

எல்லோர்க்கும் எங்க வீட்டுப் பிள்ளையாய்த் திகழ்ந்து, ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’, என்று கூறிய எம்.ஜி.ஆருக்கு எல்லோரும் வேண்டியவர்கள்தானே! மக்களின் மனமெனும் வீடுகளுக்குள் அவர் என்றும் இருப்பார்! அதனால்தானே அவர் ‘மக்கள் திலகம்’ எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள முடிந்தது.

மனங்களுக்குள் இருக்கும் அவரைக் காணாமல், அழகு மிளிரும் அவரது அத்திப்பூப் போன்ற முகத்தைக் கண்டு தரிசிக்கவே தினம் மக்கள் கூட்டம் எல்லையின்றி அலைமோதுகிறதாம்.

இதனால்தான் அறிஞர் அண்ணாவும், எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘தம்பீ! நீ முகத்தைக் காட்டினால் போதும்! முப்பது இலட்சம் ஓட்டு வரும்!’ என்று கூறினாரோ?

அத்தகு அருள்பாலிக்கும் முகத்தைத் தொடர்ந்து பார்த்து வந்தால், மனதிலுள்ள வாட்டமெல்லாம் தீர்ந்து போகுமாம்!

இப்படியோர் திரையிசைப் பாடலில், அதுவும் காதலி கூற்றாக வரும் பாடலில், எம்.ஜி.ஆர் எனும் தனிமனிதரின் குணநலன்களைக் கூறிப் பக்குவமாகப் புகழ யாரால் முடியும்? கவியரசரால் மட்டுமே முடியும்!

இன்னும்;

“கட்டான கட்டழகுக் கண்ணா! – உன்னைக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?….”

எனும் வினாவோடு தொடங்கும் பாடலில்;

“மதயானை வடிவமே!
நடமாடும் வீரனே!
மலர் போன்ற உள்ளமே வா!….”

என்று மதுரைவீரனாய், மன்னாதிமன்னனாய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் வடிவப் பொலிவினையும், வீரத்தின் திட்பத்தையும்; கண்ணதாசன் பாடலை யாரால்தான் கேட்காமல் இருக்க முடியும்?

உலகியல் தத்துவம்!
புரட்சித் தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள், தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

விளையாட்டு வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன் எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி, டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!

“மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)

காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)

வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது!
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது!
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
காத்துலே விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”

பாடலைக் கண்டீர்கள்!

இதில் இடம்பெற்றுள்ள உலகியல் உண்மைத் தத்துவங்களில், எவற்றைப் பொய்யென்று நம்மால் புறந்தள்ள முடியும்?

இவற்றைப் புரட்சித்தலைவர், திரையில் கூறித் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் எழுந்த தரவொலிகளைக் கேட்டு மனம் மகிழாதாரும் இருந்ததுண்டோ? இப்படி எத்தனையோ நாட்டு நடப்புத் தத்துவப் பாடல்களை, நல்லவர் எம்.ஜி.ஆர். படங்களில், கவியில் வல்லவராம் நம் கண்ணதாசன் எழுதியுள்ளார். முடிந்த மட்டும் நாமும் பார்ப்போமாக.

உலகம் பிறந்தது எனக்காக!
எம்.ஜி.ஆருக்காக!
‘குடும்பத்தலைவன்’ படம் வெளிவந்து பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த இரண்டாவது வாரமே, ஆர்.ஆர். பிக்சர்ஸாரின் ‘பாசம்’ திரைப்படம் 31.8.1962 அன்று திரையிடப்பட்டது.

தித்திக்கும் தேனாறாய் இப்படத்தின் பாடல்கள் தமிழகமெங்கும் ஒலிக்கத் தொடங்கின.

“ஜல் ஜல ஜல்லெனும் சலங்கையொலி”

என்று, ஒலி எழுப்பி,

“அவன்தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்!
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுசாய்த் திருட மறந்துவிட்டேன்!….”

எனத் தொடரும் பாடலை, எஸ். ஜானகியின் இன்பக் குரலில் எழுந்த பாடலை, சரோஜாதேவியின இன்முகத் தோற்றத்தில் காட்சி வடிவாய் வரும் பாடலை, பெண்மனக் காதலை, புதிய இலக்கிய நயத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலை எவரால் மறக்க முடியும்?

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிதைக் கடலில் நீந்தியவர் கவியரசர். அந்தக் கம்பரின் இலக்கியத்தைத் தேன்சுவைச் சாறாக்கிக் கொடுப்பதில் தனி இன்பம் கண்டவர் கவியரசர்.

இப்படத்தில் கம்பரின்,

“கால்வண்ணம் அங்கே கண்டேன்!
கைவண்ணம் இங்கே கண்டேன்!”

எனும் பாடலைச் சுவைத்த கவியரசர்,

“பால்வண்ணம் பருவம் கண்டு
வேல்வண்ணம் விழிகள் கண்டு
மான்வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன்!…..
கண்வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண்வண்ணம் நோய் கொண்டு
வாடுகிறேன்!….”

என்றெல்லாம் ஆரம்பமாகி, மெல்லிசைக் குரலோன் பி.பி. ஸ்ரீநிவாசனும், கொஞ்சும் சலங்கைக் குரல் எஸ். ஜானகியும் மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் – ராம்மூர்த்தி இருவரது இணைந்த இசையில் மயங்கிப் பாடும் பாடலாக யார்த்துத் தந்தார்.

இன்றைய திரைக் கவிஞர்கள் இதுபோன்ற பாடல்களைத் தினமும் கேட்டு, சிந்தித்தால் தரமான பாடல்களைத் தமிழ்த் திரையுலகிற்குச் சீதனமாகத் தரலாமே! சிந்திப்பார்களா?

‘பாசம்’ படத்தில் வரும் பரவசமான பாடல்! பைந்தமிழ் நாடெங்கும் இன்னும் இனிமையாய் ஒலிக்கும் பாடல்! டி.எம். சௌந்தரராஜன் குரலில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல்! புரட்சித்தலைவருக்கென்றே புத்துணர்ச்சியோடு, புதுமை எண்ணங்களோடு, புவியே பாராட்டக் கவியரசர் உருவாக்கித் தந்த உயர்வான பாடல்! எதுவென்று எல்லோர்க்கும் தெரியுமே! பாடலை ஆனந்தமாய்ப் படித்து… ஏன்? பாடித்தான் பாருக்களேன்!

“உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக!…..”

படித்து, பாடித்தான் பார்த்தீர்களா?
உலகம் பிறந்ததும்
ஓடும் நதிகளும்
மலர்கள் மலர்வதும் எனக்காக!
என்று சொல்வது யார்? எம்.ஜி.ஆர்!
சொல்ல வைத்தவர் யார்? கண்ணதாசன்.
எல்லாமே எம்.ஜி.ஆருக்காக! அதற்காகத்தான் இயற்கை
அன்னையும்; சத்யா அன்னையும் மடியை விரித்தார்களாம்!

இன்னும் பாருங்களேன்!

“காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருந்ததை நான்றிவேன்
என்னை அவனே தான்றிவான்!….”

ஆம்!

பண்டைத்தமிழர் மரபுப்படி, இயற்கையின் வடிவங்கள் எல்லாம் இறைவனே! அம்முறைப்படி, காற்றின் ஒலியில், கடலின் அலையில் இறைவன் இருப்பதைப் புரட்சித்தலைவர் அறிவாராம்! பூமி தந்த அந்தப் புனிதனை இறைவனும் அறிவானாம்!

அவரது அரசாங்கம் எத்தன்மையாதாம்? கவிஞரின் கவிதையே சொல்லட்டுமே!

“தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்!”

தன்னைத் தாங்கும் தங்க ரதமே வானத்தில் தவழும் நிலவாம்! தனது மணிமகுடமோ வானத்து நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட மணிமகுடமாம்! அரச மாளிகையோ, இன்னிசைக் குயில்கள் பாடும் கலைக்கூடமாம்! இவையனைத்தும் கொண்டதுதான் எம்.ஜி.ஆரின் அரசாங்கமாம்!

அவர் ஆண்டபோது, தமிழக மக்களின் மனமகிழ்ச்சியும், எழுச்சியும் இப்படித்தானே எட்ட முடியாதனவற்றையெல்லாம் எட்ட முடிந்த நிலையில் இருந்தன….

நியாயவிலைக் கடைகளில் அரிசி முதல் அனைத்திற்கும் பஞ்சமில்லையே! ஐந்துகிலோ எடையுள்ள பாமாயில் டின்கள் அல்லவா தங்களைத் தாங்குவார் கரங்களித் தேடித்தேடி அலைந்தன?

எதற்கும் பஞ்சமில்லாத ஆட்சியல்லவா எம்.ஜி.ஆரின் ஏற்றமிகு பொற்கால ஆட்சி!

படங்களில் பாடியதுபோல் பாராண்ட பண்பாளர் அல்லவா எம்.ஜி.ஆர்! இதிலென்ன ஐயம் என்றுதானே அனைவரும் கேட்பார்கள்?

எல்லாம் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் எண்ணம் மட்டும் எப்படி இருந்ததாம்….?

கண்ணதாசன் கவி வழியில் கேட்போமே!

“எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்!….”

கேட்டீர்களா?

பொங்கித் ததும்பும் தாய்ப்பாசத்தை….! கருவறைக்குள் பத்துமாதங்களாக உருவாகும் பச்சைப் பசும்பொன்னாம் பச்சிளங்குழந்தைக்காக, கண்ணிலே உறக்கமின்றி, ஊன் உண்ணும் உற்சாகமுமின்றி, வயிற்றில் எட்டி உதைக்கும் மழலை எப்படிப்பிறக்குமோ என்று எண்ணியெண்ணி, ஈன்றபொழுது பெரிதுவக்கும் பெறற்கரிய அன்னையைவிடப் பெருந்தெய்வம் உலகில் உண்டா? இல்லை! இல்லவே இல்லை.

இதனால்தான்,

‘எல்லா நலங்களும், வளங்களும் எனக்கென்றே இருந்தாலும், என்னைத் தனக்குள்ளேயே வைத்திருக்கும் அன்னையின் மனமே என் ஆலயம்! அவளே என்றும் என்னை ஆளுகின்ற தெய்வம்!’ என்றார் எம்.ஜி.ஆர்.

அன்னையை வணங்காமல் எந்தச் செயலையும், எந்நாளும் செய்தறியாத எம்.ஜி.ஆரைப் பற்றி அறிந்ததால்தான், கண்ணதாசனால் அவருக்கு ஏற்றபடி, காலத்தை வெல்லும் பாடலை எழுத முடிந்தது.

கண்ணதாசன் பாடல்களையும், எம்.ஜி.ஆரால் என்றும் அறிந்து, புரிந்து போற்ற முடிந்தது.

இதே 1962 – ஆம் ஆண்டு வெளியான ‘விக்கிரமாதித்தன்’ படத்திலும்,

“கன்னிப் பெண்ணின் ரோஜா
கன்னங்கண்ட ராஜா கவிஞரம்மா…
சிறுவிழிப் பார்வையில் காணாத சொல்லையே
செந்தமிழ்க் காவியம்தான் காணவில்லையே!”

என்றதோர் அருமையான பாடலைக் கண்ணதாசன் எழுதினார்.

இந்த செந்தமிழ்க் காவியக் கவிஞரைப் பற்றித் திரையுலகச் சக்கரவர்த்தியாய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் எண்ணந்தான் எப்படி இருந்தது என்பது பற்றியும் நாம் சற்று அறியலாமே!

புரட்சித் தலைவர் பார்வையில்
சாகாவரம் பெற்ற சத்தியக் கவிஞர்!

kanna 5

கவியரசர் கண்ணதாசனைப் பற்றி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூறியுள்ள கருத்துகளில் சிலவற்றைத்தான் இங்கே காணப்போகிறோம்.

“காலக்காற்று இந்த மாபெரும் கவிஞரை எங்கெல்லாமோ அலைக்கழித்தது. எந்தத் துறைமுகத்திற்கு இந்தப் படகு பயணப்பட்டாலும், அங்கெல்லாம் இது சீரோடும், சிறப்போடுமே போற்றப்பட்டது. அவரிடமிருந்த தமிழ்தான் அதற்குக் காரணம்.

மற்றவர்கள் கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார்.

‘கவிஞர்’ என்றால் அது கண்ணதாசன் ஒருவரைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்கு அவருக்குப் புகழ் சேர்ந்தது.

பாரதி – பாரதிதாசனுக்குப் பிறகு தமிழுக்கு அவர்தான் என்பது நிலைமை அவர் காலத்தில் வாழ்ந்தது தமிழர்களாகிய நமக்குப் பெருமை. பல கவிஞர்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்த பிறகே வாழ்த்தப்பட்டார்கள்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்தபோதே வரலாறாகிவிட்டார். மரணத்திற்குப் பிறகு அவருக்குச் சூட்டப்போகிற கீர்த்தி கிரீடத்தை, வாழ்ந்தபோதே பார்க்கக் கொடுத்துவைத்த கவிஞர்களில் அவரே தலையானவர்.

மற்றவர்கள் சரித்திரம் படித்தவர்கள். கவிஞர் சரித்திரமே படைத்தார். பள்ளியிறுதி பார்க்காத அவர், பழந்தமிழ்ச் சாற்றைப் பருகி, புதுத்தமிழ் பொழிய வாழ்ந்தார் என்பது அதிசயமாகவே இருக்கிறது.

அவர் சொன்னால் கவிதை. அவரை சொன்னதெல்லாம் கவிதை என்று வாழ்ந்தவர் அவர்.

இலக்கியம் படைக்க முடிந்தவர்களால், எளிதான கவிதைகளைப் படைக்க முடிந்ததில்லை. இந்த இலக்கியவேலி, கவியரசு காலத்திலேதான் அவராலேதான் வீழ்த்தப்பட்டது.

‘மாங்கனி’ போன்ற காவியங்களை எழுதிய அவரது கரமே, கோடிக்கணக்கானவர்கள் கேட்டு மகிழ்கின்ற எளிதான, இனிமையான திரைப்படப் பாடல்களையும் எழுதியது. திரைப்படப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சிக்குரிய அற்புதங்களாவதற்கு அவரே பெருங்காரணமாக இருந்தார்.

அருவி நடை, ஆன்றபுலமை, அன்புள்ளம், பிள்ளை மனது, உயர்ந்த சிந்தனை – உலகளாவிய பார்வை இவையே கவியரசு கண்ணதாசன்.

நூறு கவிஞர்கள் சேர்ந்து செய்யவேண்டிய இலக்கியப் பணியைக் கவிஞர் அவர்கள் ஒருவரே செய்தார்.

எப்போதோ ஒருமுறை தோன்றுகின்ற இதிகாசக் கவிஞர் அவர்.”

கண்டீர்களா?

சாகாவரம் பெற்ற சக்தியக் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிப் புவிபோற்ற வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கூறியுள்ள கருத்துகளை… பார்வையை… இதனைவிடக் கவியரசரைப் புவியில் யார், ஆழ்ந்து நோக்கி ஆய்வு செய்திட இயலும்? சொல்லுங்கள் பார்ப்போம்!

எதனையும் நுட்பமாக ஆய்கின்ற ஆற்றல் பெற்ற எம்.ஜி.ஆர். அற்புதமாகக் கவியரசரை அணுகி, ஆய்ந்து கூறிய கருத்துகள் காலத்தை வென்று நிற்கும் கருத்தாய்வுப் பெட்டகந்தானே!

தன்னை இந்த அளவிற்கு ஆய்கின்ற அன்புள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர் படங்களுக்கு அந்தக் கவியரசர் அள்ளித் தந்த பாடல்களை… இல்லை!…. இல்லை…! பார்போற்றும் பாடல்களைத் தொடர்ந்து நாமும் கார்ப்போமாக.

அதிகமான படங்கள் தந்த
1963 – ஆம் ஆண்டு

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, அதிகமான திரைப்படங்கள் வெளியான ஆண்டு 1963 – ஆம் ஆண்டாகும். இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஏறத்தாழ அனைத்துமே வெற்றிகளை ஈட்டிய படங்களே எனலாம்.

இந்த ஒன்பது படங்களில், எட்டுப் படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றிருந்தன என்றால் நம் இதயங்களே வியப்பில் விம்முகின்றன அல்லவா!

அவரது பாடல் இடம்பெறாது வெளிவந்த ஒரே படம் மேகலா பிச்சர்ஸ் சார்பில், கலைஞர் கருணாநிதி தயாரித்து, அவரே வசனம் எழுதி, ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த ‘காஞ்சித்தலைவன்’ படம் மட்டுமேயாகும்.

இனி 1963 – ஆம் ஆண்டு, முதன்முதலில் 11.1.63 அன்று வெளியான, ‘பணத்தோட்டம்’ படத்தில் கவிஞர் எழுதிய மகத்தான பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக:

வாருங்கள்! சுவைமிகுந்த காதல் பாடலில் எம்.ஜி.ஆரின் பெருமையைப் பேசவைக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இன்பம் பொங்கும் பாடலைப் பார்ப்போம்!.

ஆண்: “பேசுவது கிளியா? இல்லை
பெண்ணரசி மொழியா?
கோயில் கொண்ட சிலையா?
கொத்து மலர்க்கொடியா?”

பாடலின் தொடக்கமே, இன்பவாரியில் நம்மை நீந்தச் செய்கிறதல்லவா? அடுத்த வரிகளை வாசியுங்களேன்!

பெண்: “பாடுவது கவியா? இல்லை
பாரிவள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?”

வாசித்தீர்களா? இனி யோசியுங்கள்!

பாடுவது யாராம் கவியா?

ஆமாம்! கவித்துவத்தை உணர்ந்த இரசனைக்குரிய சீமான்தான்!

அவர் யார்? பாரிவள்ளல் மகனா?

அவர்தான் கலியுகப் பாரிவள்ளல் என்று பெயர் பெற்ற பெருமகனார் ஆயிற்றே!

அவர் என்ன சேரனுக்கு உறவா?

ஒரு காலத்தில் முடியுடை மூவேந்தர்களில் முதலிடம் பெற்ற சேரமன்னர்கள் ஆண்ட, வாழ்ந்த பூமியிலே பிறப்பெடுத்த புண்ணியன்தானே!

அவர் என்ன செந்தமிழர் நிலவா?

செந்தமிழர் உள்ளங்களில் எல்லாம் உறவாடி, நித்த நித்தம் நீந்தி வரும் வெள்ளிநிலாவாய்த் திகழ்ந்தவர், திகழ்பவர் அல்லவா எம்.ஜி.ஆர்!

இப்படியெல்லாம் கவிமகனார் கண்ணதாசன் எழுதிய காதல் கவிதையிலேயே எம்.ஜி.ஆர். எனும் ஏந்தலின் பெருமை பேசப்பட்டுள்ளதை அறியும்போது, நமது உள்ளங்களில் உவகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன அல்லவா?

இன்னும்:

“வில்லேந்தும் காவலன்தானா?
வேல்விழியாள் காதலன்தானா?
கொல்லாமல் கொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் கவலன்தானா?
மன்னாதிமன்னர்கள் கூடும் மாளிகையா? – உள்ளம்
வண்டாட்டம் மாதர்க்ள கூடும் மண்டபமா?”

இப்படிப் பெண்மையைப் பாடவைத்து, பார்போற்றும் நாயகனின் புகழை ஏற்றிப் போற்றும் விதமே விந்தைதான்!

‘வில்லேந்தும் காவலனாம்!
கோட்டை கட்டும் காவலனாம்!
அவர் உள்ளமோ!
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையாம்!
மாதர்கள் கூடும் மண்டபமாம்!’

இவையெல்லாம் உண்மைதானே!

வீரத்திருமகனாய், கோட்டையிலே கொலுவிருந்து ஆண்ட காவலனாய்; நாட்டிலுள்ள அரசியல் விற்பன்னர்கள், அரசு அதிகாரிகள், மிட்டாமிராசுதாரர்கள் உள்ளிட்ட மன்னாதி மன்னர்களும் கூடிய இல்லம் அவர் இல்லம்! அவர்களைக் குடிவைத்ததோ அவரது உள்ளம்!

அவரது உள்ளம் கோடானகோடி மாதர்களாம் தாய்க்குலத்தையும் மகிழ்வித்த உள்ளந்தானே! இவையனைத்தும் உயர்ந்த உண்மைகள்தானே!

தவழ்ந்துவரும் தத்துவங்கள்!
கவியரசர், புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா?

தொகையறா:

“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”

பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?

மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!

இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.

இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?

அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!

“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”

சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?

மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….

சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.

ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!

இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!

இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!

பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!

“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”

மீதியைப் பார்த்தோம்!

ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!

மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!

எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.

நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?

இனி என்ன?

‘என்னதான் நடக்கும்! நடக்கட்டுமே!’ அடடா! இது கவிஞர் எழுதிய ‘பணத்தோட்டம்’ படப் பாடலல்லவா?

அதையும் பார்த்து விடுவோம்!

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!”

‘நீதி இருட்டினில் மறையட்டும்! என்னதான் நடக்கும் நடக்கட்டும்! – நீ ஏன் பயப்படுகிறாய்? எல்லாமே தன்னாலே வெளிவரும்! தயக்கம் கொள்ளாதே! ஒரு தலைவன் இருக்கிறான் – அதனால் மயக்கம் கொள்ளாதே!

அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
அவனது வீடு இருப்பது முன்னாலே!
நடுவினிலே நீ விளையாடு!
தினமும் நல்லதை நினைத்தே போராடு!
விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்!

எப்படி?

“உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”

இப்படித்தான்….!

உலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.

இங்கே நீதி எப்படிக் கிட்டும்? ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்!’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி!’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.

‘மனம் கலங்காதே! மதி மயங்காதே!’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுதிவரையிலும் இருந்தார்.

தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.

இவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்கு… ஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.

நீ ஆள வந்தாய்!
ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் தயாரித்து, ப. நீலகண்டன் இயக்கத்தில் புரட்சி நடிகரோடு, ஈ.வி. சரோஜா, எல். விஜயலட்சுமி ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘கொடுத்து வைத்தவள்’ படம் 9.2.63 அன்று வெளியிடப்பட்டது.

இப்படத்தில் கவியரசர் எழுதிய முத்தான மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

ஆண்: “பாலாற்றில் சேலாடுது – இரண்டு
வேலாடுது – இடையில் நூலாடுது – மேனிப்
பாலாற்றில் சேலாடுது!

பெண்: தேனாற்றில் நீராடுது – அழகுத்
தேரோடுது மனது போராடுது – காதல்
தேனாற்றில் நீராடுது!

ஆண்: ஆறேழு வயதினிலே
அம்புலியாய்ப் பார்த்த நிலா!
ஈறேழு வயதில் மாறுது – அது
ஏதேதோ கதைகள் கூறுது!”

என்றே தொடரும், கேட்போர் இதயத்தைத் தழுவி இன்பம் பாய்ச்சும் டாக்டர், சீர்காழி கோவிந்தராஜனும், கே. ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல் அவற்றில் ஒன்று.

அடுத்து,

ஆண்: “என்னம்மா சௌக்கியமா?
எப்படி இருக்குது மனசு!

பெண்: ஏதோ உளக ஞாபகத்தாலே
பொழைச்சுக்கிடக்குது உசுரு!”

இப்படித் தொடங்கி, இளைஞர் இதயங்களை ஈர்த்திட்ட டி.எம்.எஸ்; பி.சுசீலா பாடிய பாடலும் ஒன்றாகும்.

இப்பாடலில்,

பெண்: “அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம்
அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்!
நீ ஆள வந்தாய்! நான் வாழ வந்தேன்! – இதில்
ஆனந்தம் இனி என்ன பஞ்சம்!”

என்ற கவிதை வரிகளைக் கவனித்தீர்களா? எம்.ஜி.ஆரின் புகழை எடுத்து முழங்குவதுபோல் உள்ளது அல்லவா?

அடுத்து,
நான் யார்?
நான் யார்?

என்றே எதிரொலித்துத் தொடங்கும் பாடல்,

“நான் யார் தெரியுமா? – என்
நிலைமை என்ன புரியுமா?”

என்று தொடங்கும், எதார்த்தமான தத்துவப்பாடல்.

இப்பாடல் மனநிலை பிறழ்ந்த கதாநாயகன், மனம் தெளிவுற்ற நிலையில் பாடுவதாக அமைந்த பாடல்.

இப்படத்தி இசையமைப்பாளர் ‘திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன்’ எனும் இமயப் பெரும் இசையமைப்பாளரே!

“மனது வேறு மனிதன் வேறு ஆக முடியுமா?”

என்ற கவிதை வரிகளைக் கேட்டு, இந்தத் தமிழகம் செய்த தனிப் பெரும் தவத்தால்தான், இப்படியெல்லாம் தத்துவத்தைப் பாமரரும் புரியும் வகையில் எழுதும் கண்ணதாசன் என்ற ‘கவிக்கடவுள்’ திரையுலகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று பாராட்டினாராம்.

இதனையெல்லாம் இன்றைய திரைப்படப்பாடல் எழுதும் இளங்கவிஞர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

தர்மம் தலைகாக்கும்!
தேவர் பிலிம்ஸாரின் ‘தர்மம் தலைகாக்கும்’ திரைப்படம், 22.2.63 அன்று வெளியிடப்பட்ட வெற்றிப்படமாகும்.

இப்படத்தில் இசையமைப்பாளரும் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவனே! படத்தின் பாடல்கள் முழுவதையும் படைத்தவர் கண்ணதாசனே!

இப்படத்தில் எம்.ஜி.ஆரைக் கவிஞர் பார்க்கும் பார்வையில் தன்மையே தனித்துவமானது. புரட்சி நடிகர் ‘சந்திரன்’ என்ற பெயரில் டாக்டராக இப்படத்தில் நடிக்கிறார். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!’ என்ற வாக்கின்படி செயல்படும் அவரது கதாபாத்திரத்தின் இயல்பையும், அவரது செயல்படும் அவரது கதாபாத்திரத்தின் இயல்பையும், அவரது உண்மையான இயல்பையும் ஒன்றாக்கிப் பார்க்கும் கவிஞர், அதற்கேற்பவே பாடல்களை அமைத்தார்.

ஆண்: “மூடுபனிக் குளிரெடுத்து
முல்லை மலர்த் தேனெடுத்து
மனதில் வளர்
மோகமதை……
தீர்த்திடவா…. இன்பம்
சேர்த்திடா…..

என ஆரம்பமாகும் அருமையான பாடலொன்று

இப்பாடலில்,

பெண்: “காதலெனும் தேர்தலுக்கோர்
காலமில்லை ஒரு நேரமில்லை!

ஆண்: தேர்தலிலே தோற்றவர்கள்
திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு!

பெண்: காதலிலே தோல்வி கண்டால்
ஜெயிப்பதில்லை! என்றும் ஜெயிப்பதில்லை!”

இப்படிப்பட்ட அர்த்தபுஷ்டியுள்ள வரிகள் அந்தக் காலத்தில் அமர்க்களமான ஆதரவைப் பெற்றன.

குறிப்பாக, 1957 தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோற்ற பலர், 1962 தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்கள். அதன் அடிப்படையிலேயே இப்பாடல் அமைந்ததாக்க் கருதிப் பலரும் இப்பாடலைப் பெரிதும் வரவேற்றார்கள்.

இன்னும், இன்றைய தேனி மாவட்டத்தில், தேனித் தொகுதியில் 1957 – ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்; 1962 – ஆம் ஆண்டுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார்.

அவரை நினைத்தே, அவருக்காக 1962 – ஆம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்த அவரது அன்புக்குப் பாத்திரமான, அவரது அண்ணன் புரட்சிநடிகர் பாடுவதாக இப்பாடலை வரவேற்று, அப்பகுதித் திரையரங்குகளில் இப்பாடல் ஒலித்தபோது எழுந்த பெரும் ஆரவாரங்களை நானும் கண்டு களித்ததுண்டு.

இவ்வாறு காதல் பாடல்களிலும், எம்.ஜி.ஆரின் எண்ணங்களைப் பார்த்து, பக்குவமாய்ப் பாடல் வரிகளைப் பதித்திட்ட பார் போற்றும் கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பது உண்மைதானே!

இரண்டு தத்துவப் பாடல்கள்!
மக்கள் திலகத்தின் மனதைச் சரியாக எடைபோட்ட மகோன்னதக் கவிஞர் எழுதிய தத்துவப்பாடல் ஒன்றை இப்போது நாம் காண்போமே!

“ஒருவன் மனது ஒன்பதடா – அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா!
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா! – அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!
ஏறும்போது எரிகின்றான்!
இறங்கும்போது சிரிக்கின்றான்!
வாழும் நேரத்தில் வருகின்றான்!
வறுமை வந்தால் பிரிகின்றான்!

தாயின் பெருமை மறக்கின்றான்!
தன்னலச் சேற்றில் விழுகின்றான்!
பேய்போல் பணத்தைக் காக்கின்றான்!
பெரியவர் தம்மைப் பழிக்கின்றான்!
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப்படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா?”

நாம் கண்ட இப்பாடலில் உள்ள எந்தக் கருத்தைத் தவறென்பது?

‘ஒருவன் மனதில் ஒளந்து கிடக்கும் எண்ணங்கள் எத்தனையோ? அவை எண்பதையும் தாண்டுமே?

உருவத்தைப் பார்த்தே எடைபோடும் மனிதர் உலகில்; எவனொருவன் உள்ளத்தைப் பார்த்து எடைபோடுகிறானோ அவன் இறைவன்தானே!’

ஒருவனது உயர்வைக் கண்டு எரிச்சலும்; தாழ்வைக் கண்டு மகிழ்ச்சியும் காணும் மனித சமுதாயத்தை இன்றளவும் காண்கின்றோமே! வசதியாக வாழும்போது சொந்தம் கொண்டாடிட தூரதேத்தவரும் வருகின்றாரே! வறுமை வந்துவிட்டால் பக்கத்துச் சொந்தமும் பாராமுகமாய்ப் பிரிந்து போவதைப் பார்க்கின்றோமே!

பெற்ற தாயையும் மறந்து, தன் பெருமை பேசும் சுயநலவாதிகள்! பேயைப் போல் பணத்தைக் காக்கும் திமிங்கலங்கள்! பெரியோர் தம்மைப் பழித்துப் பேசும் பண்பற்றவர்! எல்லோரையுந்தான் எங்கும் பார்க்கின்றோமே!

பட்டம் பதவிகள் பெற்றவர் எல்லோரும் பண்புடையோராய் இருக்கின்றார்களா? அவர்கள்தானே இலஞ்சலாவண்யக் காரியங்களின் கதை மாந்தர்களாய் உலவுகின்றனர்! பள்ளிப்படிப்பு இல்லாத பாமர மக்கள் தானே சேற்றிலே கால் பதித்து, பாரிலுள்ளோர் சோற்றுக்கு வழிவகுத்து, பண்போடு நடக்கும் பகுத்தறிவு மனிதர்களாய் வாழுகின்றனர்!’

மக்கள் மத்தியில் இத்தகு மகத்துவத் தத்துவங்களை, மக்கள் திலகம்தானே கூறவேண்டும். அதற்கான பாடலைக் கவியரசர் தானே ஆக்கித் தரவேண்டும்.

அப்படி அமையும்போது அப்பாடல் ஆன்றோர் அவையிலும், பாமரர் நாவிலும் அற்புதமாய் நடமாடத்தானே செய்யும்!

அடுத்து,

தர்மம்! என்ன செய்யும்?

தலை காக்கும் – எப்படி?

இதோ…….பார்ப்போமே!

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர்காக்கும்!
கூட இருந்தே குழிபறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்! – செய்த
தர்மம் தலைகாக்கும்!

மலைபோல வரும் சோதனை யாவும்
பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்துவிடும் – செய்த
தர்மம் தலைகாக்கும்!

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு!”

இப்பாடல் வரிகளைப் பார்த்தோம்!

எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக, எந்தக் கவிஞர் இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்தார்கள்?

எண்ணிப் பாருங்கள்!

எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.

1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.

திண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.

இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.

ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!

அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.

இந்தப் பாடலில்,

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”

என்ற வரிகள்,

எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?

கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….

இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!

“கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்!”

இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!

மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!

அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.

அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.

இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.

இதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்’ என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு’ எனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இன்றைய நிலையில், தமிழ்க் திரையுலக வரலாற்றை, நடிகர்களின் நிலைமைகளை நினைத்து பார்த்தால்தான், வசூல் சக்கரவர்த்தி, நிருந்திய சக்கரவர்த்தி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமே என்ற உண்மைகளை உணரமுடியும்.

பரிசு! கலையரசி!!
மூன்று படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 15.3.63 – ஆம் நாளில் எம்.ஜி.ஆரும் சாவித்திரியும் நடித்த, கௌரி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய ‘பரிசு’ திரைப்படம் வெளியாயிற்று. 19.4.63 – ஆம் நாளில் சரோடி பிரதர்ஸ் வெளியீடான எம்.ஜி.ஆருடன் பானுமதி, ராஜஸ்ரீ இணைந்து நடித்த, ஏ. காசிலிங்கம் இயக்கிய ‘கலையரசி’ படம் வெளியானது. இரண்டு படங்களில் ‘பரிசு’படத்தில் கவியரசரே அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார்.

“பட்டு வண்ணச் சிட்டு
படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்னநடை போட்டு?”

“பொன்னுலகம் நோக்கிப் போகின்றோம்
புத்தம் புதிய சுகம் காணுகின்றோம்!”

“காலமென்னும் ந்தியினிலே
காதலென்னும் படகு விட்டேன்!”

“எண்ண எண்ண இனிக்குது
ஏதேதோ நினைக்குது

வண்ண வண்ணத் தோற்றங்கள்
அஞ்சு ரூபா – கண்ண
வட்டமிட்டு மயக்குது அஞ்சுரூபா!”

“ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து
ஆசை வைக்காதே!”

என்றெல்லாம் ஆரம்பமாகும் அனைத்துப் பாடல்களும் அமுத மழை பொழியும் பாடல்களே!

‘கலையரசி’ படத்தில், சீர்காழி கோவிந்தராஜனும், பி. பானுமதியும் இணைந்து பாடும்.

ஆண்: “கலையே உன் எழில்மேனி கலையாவதேன்?
காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்?

பெண்: உறவாடும் இவ்வேள் பிரிவென்பதேன்? – நம்
உயிரோடு உயிர்சேர்ந்து பெறும் இன்பத்தேன்!

ஆண்: இருவேறு பொருள் கூறும் கண் பார்வை ஏன்?
ஒன்று நோய் தந்ததேன்? ஒன்று மருந்தானதேன்?”

என்று தொடரும் கருத்துமிக்க, சுவைமிக்க, வள்ளுவரின் குறள் கருத்தை வீரியிறைக்கும் கண்ணதாசன் பாடலை, இன்று கேட்டாலும் எல்லோர்க்கும் பொங்கும் இன்பமே.

ஆனந்தஜோதி
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடு, நடிகை தேவிகா இணைந்து நடித்த ஒரே படம் ஆனந்தஜோதி! கதாநாயகியின் தம்பியாக கமல்ஹாசன், எம்.ஜி.ரோடு நடித்த படமே ஆன்ந்தஜோதி. இப்படத்தில் எம்.ஜி.ஆரை, ‘மாஸ்டர்! மாஸ்டர்!’ என்று மழலை மொழியில் கமல்ஹாசன் அழைக்கும் குரல் நயம் அருமையோ அருமை.

ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரிப்பில், வி.என். ரெட்டி, ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில், விசுவநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில், கண்ணதாசன் பாடல்கள் நிறைந்த இப்படம் 5.7.1963 அன்று வெளியானது.

படத்தில் எம்.ஜி.ஆர் உடற்கல்வி ஆசிரியராக, ‘ஆனந்த்’ என்ற பெயரில் நடித்துள்ளார்.

ஆனந்தஜோதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவையே என்றால் உண்மையே.

இப்படத்தில்,

“காலமகள் கண்திறப்பாள் சின்னையா – நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?”

“நினைக்கத் தெரிந்த மனமே – உனக்கு
மறக்கத் தெரியாதா?”

இவ்வாறு பி. சுசீலாவின் குரலில் சோகமழை பொழியும் பாடல்களும், பலரது ஆதங்கங்களுக்கு ஆறுதல் தரும் பாடல்களே!

தர்மத்தின்சாவி!
“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”

கேட்டீர்களா …. பாட்டு?

பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!

இனி அவர் என்ன சொல்கிறார்?

“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”

சரிதானே!

வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….

இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.

அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!

“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”

என்னே அதிசயம்!

அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!

வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு

தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”

இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.

யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.

யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.

இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.

கடவுள் இருக்கின்றான்!
கவியரசர், புரட்சிநடிகர் மூலம் புகட்டும் தத்துவம் கேளீர்!….

“கடவுள் இருக்கின்றார் – அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
……………..
இசையை ரசிக்கின்றாய் – இசையின்
உருவம் வருகின்றதா?”

என்றெல்லாம் வினாக்களை எழுப்பி, எங்கும் இருக்கும் இறைவனை, இதயத்தால் உணரவைப்பதைக் கேட்டீர்கள்.

இன்னும்…..

“புத்தன் மறைந்தவிட்டான் – அவன் தன்
போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா? – உலகில்
தருமம் அழிந்ததுண்டா? – இதை

சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா? –
தேடியும் கிடைக்காது – நீதி
தெருவினில் இருக்காது!

சாட்டைக்கு அடங்காது – நீதி
சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!”

காலங்கள் உருண்டோடினாலும், கலங்கும் மனிதருக்கும், கண்ணீர் சிந்தும் மனிதருக்கும், தைரியம் ஊட்டி, சத்தியம் தோற்காது; தருமம் அழியாது; சஞ்சலம் கொள்ளாதீர் என்று கூறி, நீதி மயங்காது; காக்கவும் தயங்காது என்று பெரும் ஆறுதல்களைக் கூறும் இந்தத் தத்துவப் பாடலைத் தரணியில் உள்ளோர் உள்ளங்களால் மறக்க முடியுமா?… முடியவே முடியாது.

அடுத்து,

ஆனந்தஜோதியை கவியரசரும், புவியரசரும் ஏற்றிவைத்துப் புகழ்கொண்ட வித்த்தைப் போர்ப்போமே!

புரட்சித்தலைவராம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களில் நாட்டுப்பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டிப் புரட்சி கீதம் எழுப்பியவரே கவியரசர். அந்த வகையில்தான்,

“ஒருதாய் மக்கள் நாமென்போம்!
ஒன்றே எங்கள் குலமென்போம்!
தலைவன் ஒருவன் தான் என்போம்!
சமரசம் எங்கள் வாழ்வென்போம்!”

என்று தொடங்கும் பாடலைக் கவியரசர் எழுதினார்.

உடற்கல்வி ஆசிரியராய்த் தோன்றி, மக்கள்திலகம் மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றிவைக்கும் விதத்திலேயே இப்பாடல் காட்சியில் நடிப்பார்.

அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமாம், ‘ஒன்றேகுலம்! ஒருவனே தேவன்!’ என்ற திருமூலர் செப்பிய ஒப்புயர்வற்றவாக்கும்; ‘தலைவன் ஒருவனே!’ என்ற வாக்குறுதியும்; வள்ளலாரின் சமரச நோக்கும் இப்பாடல் வரிகளிலே நினைவுறுத்தப் பெற்றன.

பாடல் எழுதிய கண்ணதாசனுக்கும்; எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆருக்கும்; பாடிய டி.எம். சௌந்தர்ராஜனுக்கும் இன்றும் இப்பாடல் நற்புகழினையே நல்கி வருகிறது.

தொடர்ந்து வரும் பாடல் வரிகளில், தமிழன்னையின் தனித்ததோர் புகழ் கூறப்படுகிறது.

எங்ஙனம்…..?

“பொதிகை மலையில் பிறந்தவளாம்!
பூவைப் பருவம் அடைந்தவளாம்!
கருணை ந்தியில் குளித்தவளாம்!
காவிரிக் கரையில் களித்தவளாம்!”

இப்படித்தான்…!

இவற்றின் விளக்கங்களையெல்லாம், நான் ‘கண்ணதாசனின் புரட்சிப் பூக்கள்’ என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

எனவே, இப்பாடலின் பெருமையை அறிய விரும்புவோர் அந்நூலை நுகர்வீர்களாக!

ஆயிரம் இருந்தாலும்,

“தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்! – தமிழ்த்
தாயின் மலரடி வணங்கிடுவோம்!
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்!
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!”

என்ற அர்த்தமுள்ள கருத்துகளை, உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் செல்ல என்னால் எப்படி முடியும்?

‘தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்!’ என்ற கருத்தை எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆரே தர்மத்தின் தலைவனாக நின்றார்.

‘தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்!’ என்று, எடுத்துரைத்த அவர்தான், தஞ்சைத் தரணியிலே ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ அமைத்தார். உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மகத்தான முறையில் நடத்திக் காட்டினார்.

அளவிற்கு அடங்காத அக்கிரமங்கள், அடக்குமுறைகள் விளைந்தபோதும்; அமைதியை நெஞ்சினில் தேக்கி, ஆனந்த ஜோதியை ஏற்றிப் புகழ்கண்ட ஒளிவிளக்கே எம்.ஜி.ஆர். தானே!

‘கோட்டையை எட்ட முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தபோதும்; சூழ்ச்சியின் ஆட்சியின் தளபதிகளாக இருந்தவர்களையும், அதற்குத் துணைபுரிந்த துரியோதன வம்சத்துக் கும்பல்களையும்; மக்கள் சக்தியால் மண்டியிட வைத்து, மாமகுடம் தரித்த மாபெரும் தலைவராய் விளங்கியவரும் எம்.ஜி.ஆர். அல்லவா?

இங்கேதான், கண்ணதாசன் கவிதைகளைப் பற்றி எம்.ஜி.ஆர் ஏற்றமுடன் புகழ்ந்துரைந்தார். அந்தப் புகழுரைகளை நாமும் பூரிப்புடன் பார்ப்போமாக.

புரட்சித்தலைவரின் புகழுரைகள்!
கவிஞர் கண்ணதாசன் பற்றி உங்கள் கருத்தென்ன?

என்ற வினா, சென்னை வானொலி நிலைய ‘சினிமா நேரம்’ ஒலிபரப்புப் பேட்டியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு எம்.ஜி.ஆர் கூறிய பதில்:

“கவி அரசு என்றும், அரசு கவி என்றும் புகழோடு மக்கள் மனதிலே தனக்கென்று, தனியிடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள், உலக மக்களுக்கும், எல்லாத் தரப்பினருக்கும் தேவையான தத்துவங்களை மிக எளிமையாக, ஆனால் உறுதியாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்த நூற்றாண்டில் கவிஞர் கண்ணதாசனைப் போல், பல்லாயிரக்கணக்கான பாடல்களை, உரைநடை இலக்கியங்களை, கவிதைகளைப் படைத்த கவிஞர்கள் வேறு யாருமே இல்லை.

காப்பியங்களைப் படைத்த கம்பனாக, இளங்கோவாக, ஞானத்தையும், விஞ்ஞானதைத்தையும், இணைத்த வள்ளலாராக, புதுமைக்கவி, படைத்த பாரதியாக, புரட்சிக்கவி படைத்த பாரதிதாசனாக; தேவாரம், திருவாசகம், திருப்பாசுரம் என்ற ஆன்மீக நெறிகளைப் பாடிய அரும்பெரும் புலவர்களாக; இப்படிப் பல கோணங்களில் பலரும் வியக்கும் வண்ணம் தமிழ்க்கவிதைகளைப் படைத்தவர் என்ற பெருமை கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கே உண்டு.”

கவியரசரை இப்படி இதயத்துள் வைத்துக் கள்ளங்கபடமின்றி உண்மையாகப் புகழ்ந்துரைத்த புரட்சித்தலைவரை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?

நாமே பாராட்டவேண்டும் என்று தோன்றுகின்றபோது, கவியரசர் பாராட்டியிருக்க மாட்டாரா? பாராட்டியுள்ளார்! எப்படி?

“நீ தொட்டது துலங்கும்!
நின்கை கொடுத்தது விளங்கும்!
நின்கண் பட்டது தழைக்கும்!
நின்கால் படிந்தது செழிக்கும்!
நின்வாய் இட்டது சட்டம்!
அன்பிலும் குறைவிலாது
அறத்திலும் முடிவிலாது
பண்பிலும் இடைவிடாது
பழகிடும் புரட்சிசெல்வா!
வாழ்க! வாழ்க!”

என்று, பல்லாண்டுகளுக்கு முன்னரே கவியரசர், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிப் பெருமிதப்படுத்தியுள்ளார்.

Kanna 3

இவ்வளவுதானா கண்ணதாசன், எம்.ஜி.ஆரைப் பாராட்டிக் கூறியன என்று எவரும் நினைத்து விடாதீர்கள்! இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றைப் படப்பாடல்கள் சிலவற்றைத்தொட்டுவிட்டுத் தொடரலாம்.

அவனுக்கென்ன தூங்கிவிட்டான்!
1963 – ஆம் ஆண்டு படங்களில், நாம் பார்க்கவேண்டியன இன்னும் இரண்டே படங்கள்தான்.

ஒன்று…………………….’நீதிக்குப்பின் பாசம்!’
மற்றொன்று……………’பெரிய இடத்துப் பெண்!’

இரண்டும் நன்றாக ஓடிய நல்ல திரைப்படங்ளே! இதில் தேவர் பிலிம்ஸார் தயாரித்து 15.8.63 அன்று வெளிவந்த ‘நீதிக்குப்பின் பாசம்’ ஆரூர்தாஸின் அருமையான நீதிமன்றக் காட்சி வசனங்கள், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். சரோஜாதேவி, எஸ்.வி. ரங்கராவ், பி. கண்ணாம்பா, எம்.ஆர். ராதா, எஸ்.ஏ. அசோகன் போன்றோரின் பண்பட்ட நடிப்புத் திறன்களோடு கே.வி. மகாதேவன் இசையில் ஒலித்த, கவியரசரின் இனிமையான காதல் கீதங்களாலும் சிறப்புடன் வெற்றி கண்டது.

இப்படப் பாடல் ஒன்று,

ஆண்: “மானல்லவோ கண்கள் தந்தது!
மயிலல்லவோ சாயல் தந்தது!”

என்று தொடங்கும்………..

அடுத்து,
பெண்: “தேக்கு மரம் உடலைத் தந்தது!
சின்ன யானை நடையைத் தந்தது!
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது!
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது!”

என்று, கதையின் நாயகி, நாயகன் எம்.ஜி.ஆரைப் புகழ்வதுபோல், கவியரசர் படைத்த பாடல் பி. சுசீலாவின் குரலில் ஒலிக்கும்போது, திரையரங்குகளில் ஏற்பட்ட குதூகலங்களை நினைத்தால் இன்றும் நெஞ்சம் குதூகலிக்கிறது.

பொன்மனச் செம்மலை தனது பார்வையில் இப்படியெல்லாம் படம்பிடித்துக் காட்டி மகிழ்ந்தவரே கவியரசர் கண்ணதாசன்.

‘பெரிய இட்த்துப்பெண்’ படம் முழுவதும் கண்ணதாசனின் பாடல் முழக்கங்களே!

ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்து, டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் 10.11.63 அன்று வெளிவந்து அபார வெற்றிகண்ட இப்படத்தின் இசையமைப்பாளர்கள் மெல்லிசை மன்னர்களே!

இப்படத்தில் வரும்,

“பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளந்தான் சிறியதப்பா!”

“கட்டோடு குழலாட ஆட – ஆட
கண்ணென்ற மீனாட ஆட – ஆட!” –

“அன்று வந்ததும் இதே நிலா!
இன்று வந்ததும் அதே நிலா!
என்றும் உள்ளதும் ஒரே நிலா!” –

“பட்டணம் பாத்த மாப்பிள்ளையே
பாக்க வந்த கிளிப்பிள்ளே!”

இப்படியெல்லாம் தொடங்கும் எந்தப் பாடலை நாம் தொடுவது!… அல்லது விடுவது! எல்லாமே என்றும் இனிமை தரும் கீதங்களே!

இவற்றிற்கெல்லாம் மேலாக டி.எம்.எஸ். குரலில் ஓங்கி ஒலிக்கும் தத்துவப் பாடல் ஒன்றும் உண்டு. புரட்சி நடிகர் நாட்டிற்குக் கூறும் வகையில், கவிஞர் ஈந்த அப்பாடலை இங்கே காண்போம்.

“அவனுக்கென்ன தூங்கிவிட்டன்
அகப்பட்டவன் நானல்லவா!
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டுவிட்டான்!
கைகளிலே போட்டுவிட்டான்!

இவனுக்கென்று எதைக் கொடுத்தான்?
எலும்புடனே சதை கொடுத்தான்!
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும்வரை துடிக்கவிட்டான்!”

இந்தப் பாடலைக் கேட்காதோர் யாரும் அந்தக் காலத்தில் இருந்திருக்க முடியாது! இருப்பினும் நாற்பது ஆண்டுகள் கழித்தும், இந்த சோக ரசப் பாடலை இப்போதும் இரசிக்க முடிகிறதே! அதுதான் கண்ணதாசன் பாடலில் உள்ள மேலான மேதமைத்தன்மை எனலாம்.

கதையின் நாயகன் முருகப்பன். அவனோ ஏழ்மையானவன்; தனது முறைப்பெண்ணை (தில்லை) மணக்க விரும்புகிறான். பணக்காரப் பெண் புனிதத்தின் சூழ்ச்சியால், தில்லை புனிதத்தின் அண்ணன் சபாபதிக்கு மனைவியாகி விடுகிறாள்.

தனது முறைப்பெண்ணை, அடைய முடியாமல் செய்த பணக்காரி, படித்தவள் புனிதத்தையே தான் மணப்பேன் என்று முருகப்பன் சபதம் செய்கிறான். அவளோ ஏளனமாகச் சிரிக்கிறாள்.

சபதத்தை நிறைவேற்றப் பாடுபடும் முருகப்பன் பல்வேறு தொல்லைகளில் அகப்பட்டு, சிறையிலும் அடைக்கப்படுகிறான். அப்போதுதான் இந்த சோககீதம் அவனால் இசைக்கப்படுகிறது.

முருகப்பனாக வருபவரே மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.

“ஆண்டவனுக்கென்ன? அவன் தூங்கிவிட்டான்! அகப்பட்டவன் அப்பாவியல்லவா! பத்து மாதங்களுக்குள் கைகளிலே விலங்கை மாட்டிவிட்டான்.

அந்த ஆண்டவன் என்ன கொடுத்தான்? இந்த உடல் எனும் எலும்பையும் சதையையும் கொடுத்தான்! அத்தோடு நின்றானா? பாழாய்ப் போன இதயத்தைஉம் கொடுத்துவிட்டு, மனிதன் இறக்கும்வரை ‘துடியடா! துடி!’ என்றல்லவா துடிக்க வைத்துவிட்டான்!”

அவ்வளவு துடிப்பா? இன்னும் அந்த ஆண்டவன் செய்த கொடுமைகள்….இதோ!

“யானையிடம் நன்றி வைத்தான்
காக்கையிடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்?”

கேள்விகளில் நியாயம் உள்ளனவோ?

யானைகளுக்கோ – நன்றி!
காக்கையினத்திறகோ – உறவு!
மான்களுக்கோ – மானம்!

என்ற குணங்களைத் தந்த ஆண்டவன், மனிதயினத்திற்கு என்று என்ன குணத்தை வைத்தான்?

மனிதனின் கோபத்தில் மாட்டிக் கொள்ளும் இறைவனின் பாடும் சோகந்தானோ!

அந்த இறைவனாம் ஆண்டவன் என்ன நியாயவான்? பாருங்களேன்!

“வானிலுள்ள தேவர்களை
வாழவைக்க விஷம் குடித்தான்!
நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம்
நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்!”
இது அநியாயந்தானே!

‘வானகத்தில் உள்ள தேவர்களை வாழவைத்திட, அவர்களெல்லாம் தேவாமிர்தம் பருகிட, பாற்கடலில் பொங்கி வந்த விஷத்தை ஈசனாம் இறைவன் குடித்தான்.

ஆனால் அதே ஈசனாம் இறைவன், ஏழ்மைப்பட்ட என்னை மட்டும் நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் மொத்தமாகக் குடிக்குமாறு விட்டுவிட்டானே!’ –

என்று, ஏழை முருகப்பன் கேட்கும் கேள்வியில் நியாயந்தானே உள்ளது. நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் குடிக்கும் அளவுக்குத் துயரம் சூழ்ந்தது என்பதே பாடலின் பொருள்.

இப்படியோர் சோகச்சூழலில் எழும் பாடல், சோகம் சூழ்ந்தோர் நெஞ்சங்களுக்குத் தேறுதல் அளிக்கும் தேன்சுவைப் பாடலல்லவா?

அதுவும் எம்.ஜி.ஆர், தேறுதல் கூறுதல் மற்றவர்களுக்கு நிச்சயம் ஆறுதல் அளிக்கும் அல்லவா?

இத்தகு கீதங்களை இன்றைய படங்களில் யார் எழுத; எம்.ஜி.ஆர் போன்று யார் தோன்றி ஆறுதல் தர…..ஹூம்! எல்லாம் காலவோட்டத்தின் புலம்பல் என்பார்….யார்?

இன்றைய இளைய தலைமுறையினர் தான்!

உன்னையறிந்தால்…?…..!
1964 – ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் படங்கள் ஏழு. அவற்றில் வேட்டைக்காரன் என் கடமை, பணக்காரக் குடும்பம், தாயின் மடியில் ஆகிய நான்கு படங்களுக்குக் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.

‘எம்.ஜி.ஆருக்குக் காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது!’ என்று, விளம்பரமிக்க சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் நாளிதழ் எழுதிவிட்ட செய்தியொன்று, எம்.ஜி.ஆருக்குப் பெரும் மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்த நேரம்.

தேவர் பிலிம்ஸ் சார்பில் ‘வேட்டைக்காரன்’ படம் தயாரித்துக் கொண்டிருந்த சமயமும் அதுவே. 1957 – ஆம் ஆண்டு ‘மகாதேவி’ படத்திற்குப் பின்னர், 1963 – ஆம் ஆண்டு ‘பரிசு’ படத்தில் நடித்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி எம்.ஜி.ஆரோடு இணைந்து நடிக்கும் படமும் அதுவே.

கவிஞருக்கு, சூழ்நிலையின் தன்மை புரிந்தது. எம்.ஜி.ஆரும் சற்று மாறுபட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணி உடையில் கம்பீரத்தோடு புலியை வேட்டையாடும் வேட்டைக்காரனாக நடித்தார்.

கவிஞருக்குச் சொல்லவா வேண்ண்டும்? படத்தில் காதல் ரசம் சொட்டும் பாடல்களையும், நீதி சொல்லும் பாடல்களையும், கே.வி. மகாதேவன் இசையில் கேட்போர் மயங்கும் வகையில் வாரி வாரித் தந்தார்.

“என்……
கண்ணனுக் கெத்தனை கோவிலோ?
காவலில் எத்தனை தெய்வமோ?
மன்னனுக் கெத்தனை உள்ளமோ?
மனதில் எத்தனை வெள்ளமோ?…”

எனத் தொடங்கி,

“என் கண்ணன் தொட்டது பொன்னாகும்! – அவன்
கனிந்த புன்னகை பெண்ணாகும்!
மங்கை எனக்குக் கண்ணாகும்!
மறந்து விட்டால் என்னாகும்?”

என்று, கதையின் நாயகன் எம்.ஜி.ஆர். புகழுபாடும் கீதமாக, பி. சுசீலாவின் குரலில், நாயகி பாடுவதாக முதல் பாடல் படத்தில் எழுந்தது.

இரண்டாவதாக,

ஆண்: மஞ்சள் முகமே வருக!
மங்கல விளக்கே வருக!

பெண்: கொஞ்சும் தமிழே வருக!
கோடான கோடி தருக!”

என, எம்.ஜி.ஆரின், பழுதுபடாத அன்றைய குரலைக் கொஞ்சும் தமிழாக்கிக் கோடான கோடி இன்பம் தரும் கோமானாக்கி’

“கேட்டாலும் காதல் கிடைக்கும் – மனம்
கேளாமல் அள்ளிக் கொடுக்கும்”

என்றே, அவரைக் காதல் தலைவனாக்கியே பாடல் ஒலிக்கும்.

மூன்றாவதாக,

பெண்: “கதாநாயகன் கதை சொன்னான்! – அந்தக்
கண்ணுக்குள்ளும் இந்தப்பெண்ணுக்குள்ளும் ஒரு
கதாநாயகன் கதை சொன்னான்!”

இப்படிக் கண்ணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் காதல் கதை பேசும் கதாநாயகன்;

பெண்: “காவிரிக் கரைக்கு வரச் சொன்னான் – இளங்
கன்னத்திலே ஒன்று தரச் சொன்னான்!
கையுடன் கைகளைச்
சேர்த்துக் கொண்டான் – எனைக்
கட்டிக் கொண்டான்! நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்!”

எனக் ‘காவிரிக்கரையில் இளமை தவழும் தன் கன்னத்தில் ஒன்று தரச் சொன்னான்!’ என்றே, நாயகனின் காதல் ரசனை பற்றிய பாடலைத் தொடர்ந்து,

காதல் மொழிகளைக் கவிதையில் கவிஞர் வாரி வாரி இறைத்து,

ஆண்: “மாமல்லபுரத்துக் கடல் அருகே – இந்த
மங்கை இருந்தாள் என்னருகே!
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு – நாங்கள்
படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு!”

என, இளைய நெஞ்சங்களில் இன்பக் கோயிலையே, கண்ணதாசன் கட்டி முடிப்பார்.

எம்.ஜி.ஆருக்கா, காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது! காதல் வேட்டையாடும் கட்டிளங்காளையாம் வேட்டைக்காரனைப் போய்ப் பாருங்கள்! என்ற வேகத்தையே இப்பாடல் காட்சிகள் எழுப்பியது.

இதன் விளைவு! அன்றைய நாளில் பி.ஆர். பந்துலுவின் இயக்கத்தில், பத்மினி பிக்சர்ஸ் தயாரித்து, சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், அசோகன், சாவித்திரி, தேவிகா, எம்.வி. ராஜம்மாள் போன்ற பிரபல நடிகர்கள் நடித்து பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட, கண்ணதாசனின் காவிய கீதங்கள் நிறைந்தே வெளியான ‘கர்ணன்’ திரைப்படம், வெற்றி பெற இயலாது திக்குமுக்காடிப் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

அந்த அளவிற்கு, அன்றைய இளைய சமுதாயத்தை, சாதாரண நிலையில் தயாரிக்கப்பட்ட ‘வேட்டைக்காரன்’ படம் ஈர்த்துப் பெரும் வெற்றியைப் படைத்தது.

இப்படத்தில், இன்னும்,

பெண்: “ஹூம்…ஹூம்….ஹூம்!
மெதுவா மெதுவா தொடலாமா?
மேனியிலே கை படலாமா?”

என்று தொடரும் பாடலில்,

பெண்: “வேட்டைக்கு வந்தது நினைவில்லையா?
நினைவில்லையா? – இங்கு
வேறொரு புள்ளிமான் கிடைக்கல்லையா?
கிடைக்கல்லையா?
காட்டுக்குள்ளே இந்த நாடகமா?
காதலென்றால் இந்த அவசரமா? அவசரமா?”

என்றே எழுந்து வரும் வரிகளும்:

ஆண்: “குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா? மாறட்டுமா – உன்
கூந்தலில் நடனம் ஆடட்டுமா? ஆடட்டுமா!
கொல்லும் கண்களை வெல்லட்டுமா?
கோடிக்கதைகள் சொல்லட்டுமா?”

இப்படித் தொடர்ந்து கவிஞர் தொடுத்த கவிதை வரிகளும், டி.எம்.எஸ். பி. சுசீலாவின் இனிய குரல்களில் இனிமையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடியையர் திலகம் சாவித்திரியின் பொருத்தமான நடிப்பில், காதல் பூகம்பத்தையே எழுப்பிப் புதிய வரலாற்றையே படைத்தது எனலாம்.

சரி வெறும் காதலை மட்டுமா சொல்லுவார் எம்.ஜி.ஆர்? சமுதாயத்திற்குச் சொல்லவேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லுவாரே! பின் என்ன சொல்லாமலா விடுவார்?

அதற்கும் கண்ணதாசனின், எண்ணக் கருத்துகள் எழுந்து வரும் விதம் காணீர்!

“வெள்ளிநிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ள மென்னும் தாமரையில்
உனையெடுத்துக் கொண்டு வந்தேன்!”

பாடலின் ஆரம்பத்தைப் பார்த்தீர்கள்!

வேட்டைக்காரன் பாபு, தன் காதல் தலைவியை, வாழ்க்கைத் துணைவியாக்கி, அதன் வரப்பிராதமாக வந்த மகன் ராஜாவை அன்புடன் அணைத்து வளர்க்கிறார்.

காரணம், வாழ்க்கைத் துணைவயான காதல் தலைவி, காசநோயின் தாக்குதலில் தத்தளிக்கிறாள். எனவேதான் பிள்ளைக்குத் தந்தையான பாபுவே, தாயின் அன்பையும் சேர்த்து ஊட்டும் கடமையின் சொந்தக்காரராகிறார்.

உள்ளமெனும் தாமரையில் கொண்டு வந்த மகனுக்கு உணவூட்டிக் கொண்டே, நல்லுணர்வுகளை ஊட்டிட, நன்னெறிகள் வளர்ந்திட வாழ்த்தியே பாபு பாடுகிறார்.

வாழ்த்துவதைப் பாருங்களேன்!

வேலெடுக்கும் மரபிலே
வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே
நடையைக் காட்டு! – வரும்
பகைவர்களை வென்றுவிடும்
படையைக் காட்டு!”

பார்த்தீர்களா?

பால் குடிக்க வந்தவன்… எங்கே இருந்து….? வீரம் செறிந்த மண்ணில் இருந்து! எந்த மரபில் இருந்து? வெற்றிவேல் எடுக்கும் மரபில் இருந்து!

அப்படியானால் அவன் எப்படி இருக்கவேண்டும்?

வெற்றி நடையைக் காட்டவேண்டும்! பகைவர்களை வென்றுவிடும் படைபலத்தையும் காட்டவேண்டும்!

சரிதானே! இவை போதுமா?

“முக்கனியின் சாறெடுத்து
முத்தமிழின் தேனெடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும்
சுவைத்திருப்பாய்!”

எப்படியாம்?

உடல் உரம் பெற்றிட முக்கனிச் சாறெடுத்து உண்ண வேண்டும்!

சிந்தையைத் தெளிவாக்க, செவிக்உக உணவான, முத்தமிழாம் தேனை, வள்ளுவர் தந்த முப்பாலிலே கலந்து, எப்போதுமே சுவைத்திருக்க வேண்டுமாம்!

அப்போதுதானே தமிழரின் பண்பாட்டோடு, தமிழரின் வீரமும் தழைத்து வளரும்.

இவையும் போதா? இன்னும்……

“நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வதுதான்
சுயமரியாதை! – நல்ல
மனமுடையோர் காண்பதுதான்
தனி மரியாதை!….”

ஆமாம்! நல்லோர், நான்கு திசையிலுள்ளோர் போற்ற வேண்டும்! நாடு உன்னை வாழ்த்தவேண்டும்! ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போல்’ மானத்தோடு வாழ்வதே சுய மரியாதையாகும்.

அத்தகு நல்மானம் கொண்டோர்தான், அவர்கள் காண்பதுதான் சுயமரியாதையாகும்.

இப்படியெல்லாம் மகனுக்கு வீர உணர்வூட்டித் தன்மானத்தோடு வாழ்ந்திட வழி சொல்லும் தந்தை பாபுவாக எம்.ஜி.ஆரும்; மகன் ராஜாவாக அன்றைய பெயர் பெற்ற குழந்தை நட்சத்திரம் பேபி ஷகிலாவும் தோன்றி நடிக்கும் காட்சியைக் கண்டு மகிழாமல் இருந்திட இயலுமா?

படத்தின் உசகட்டப் பாடலோ, சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலே;

“உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை ‘
வணங்காமல் நீ வாழலாம்!”

என்று ஆரம்பமாகும் பாடலமாகும்.

மற்றவரைப் பற்றி உனக்கென்ன மனக்கவலை! ‘உன்னையே நீ அறிவாய்!’ என்று கிரேக்கஞானி சாக்ரடீஸ் சொன்னாரே; அவர் சொன்ன மொழியை ஏற்று முதலில் நீ உன்னை அறியக் கற்றுக்கொள்! உன்னை நீ அறிந்துகொண்டால், நீ உலகத்தில் எழுந்து நின்று போராடலாம்.

அப்போதுதான் உன் வாழ்க்கையில் உயர்வு வந்தாலும், தாழ்வு வந்தாலும் பிறர்க்குத் தலை வணங்காமல் நீ வாழ்ந்திடலாம். என்கிறார். யார்? எம்.ஜி.ஆர்.

“மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?…தன்னைத்
தானும் அறிந்துகொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?…ஓ….ஓ…ஓ…”

‘இங்கும், மானமே பிரதானமாகச் சொல்லப்படுகிறது.

மானமே பெரியதென்று வாழும் மனிதர்களே, கவரிமான் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள்!

மானத்தொடு, நல்லது கெட்டதை அறிந்துகொண்டு, அறிந்ததை ஊருக்குள் சொல்பவர்களே தலைவர்களாவார்கள்!’

அரிய கருத்துக்களே! அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துகளே!

இன்னும் எம்.ஜி.ஆர். வாயிலாகச் சொல்லப்படுவன என்ன? இதோ!….

“பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?…பிறர்
தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?….ஓ….ஓ….ஓ…”

என்னே அருமை!

பூமியல் சாமிக்கு நிகரானவர் யாராம்? நேர்மையாக வாழ்கின்றவர் எல்லோருமே சாமிக்கு நிகரானவரேயாம்! அது மட்டுமா?

பிறரது தேவைகளை அறிந்துகொண்டு, தன்னிடம் உள்ள செல்வத்தை வாரி வாரிக் கொடுப்பவர்களே தெய்வத்தின் பிள்ளைகளாம்!

(அந்த வகையில் வாரி வாரிக் கொடுத்த வள்ளலாம் எம்.ஜி.ஆரும் தெய்வத்தின் பிள்ளைதானே! கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் அவ்வாறு தோன்றிய விதத்தால்தானே பாடலும் இவ்வாறு பிறந்தது.)

அடுத்து என்ன? அடுத்து வரும் பாடல் வரிகள்தான்….. எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கே இலக்கணமான இலக்கிய வரிகள்…..

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்! – ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!….ஓ….ஓ….ஓ….”

அடேயப்பா!

‘மாபெரும் சபைகளுக்குள் நீ நடந்து வந்தாலே, உன் மகிமையறிந்து மாலைகள் வந்து விழவேண்டும்! ஒரு குறையும் சொல்ல முடியாத, மாற்றுக் குறையாத பொன்னான மன்னவன் இவனென்றே, இந்த உலகம் உன்னைப் போற்றிப் புகழவேண்டுமாம்!’

இவையெல்லாம் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்தவையல்லவா? நாம் கண்டவையல்லவா? இவற்றைத் தானே கவியரசர் கண்ணதாசன் அன்றே சொன்னார்! அவர் சொன்ன வாக்கு இவ்வையகத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பலித்தவைதானே!

எத்தனையோ பாடல்கள்…. கவிஞரின் கருத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும்; எவர் எவர்க்கோ அவர் எழுதியிருந்தாலும், எம்.ஜி.ஆருக்குப் பொருந்திய விதங்களே வியத்தகு சிறப்புக்கு உரியன எனில் மிகையாகா.

இவற்றிற்கெல்லாம் ஏதேனும் அடிப்படைக் காரணங்கள் இருக்குமா? இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவற்றைக் கண்ணதாசனே சொல்லக் கேட்போமே! வாருங்கள்!

புரட்சி நடிகர் பற்றிக் கவியரசர்!
“மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் படங்களுக்கெல்லாம் நான் எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

மதுரைவீரன் படத்துக்கு எழுதியபோதுதான் என்து எடை அதிகரிக்கத் தொடங்கிற்று. காரணம் லேனா போட்ட சாப்பாடு!….

இன்று பாட்டெழுதப் போய் உட்கார்ந்தால், தமிழ் தெரியாதவர்கள், ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாரும் பாட்டிலே திருத்தம் சொல்லுகிறார்கள். ‘அந்த வரியை மாற்று, இந்த வரியை மாற்று’ என்று ஆணையிடுகிறார்கள்! காட்டுப்புறத்தில் கள்ளி பொறுக்கியவனெல்லாம் பாட்டுக்கு விளக்கம் கேட்கிறான்!

மதுரைவீரனில் லேனாவோ, யோகானந்தமோ, எம்.ஜி.ஆரோ என் எழுத்தில் ஒரு வரியைக்கூட மாற்றியதில்லை.

…. பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய திடமான நம்பிக்கை, அந்த தணிகாசலம் செட்டி ரோடில்தான் (மதுரைவீரன் படம் எடுத்த, லேனோ செட்டியார் கம்பெனி இருந்த ரோடு) எனக்கு ஏற்பட்டது.

நானும் கருணாநிதியும் சினிமாவின் மூலம் நண்பர்களானவர்கள். அரசியல் தொடர்பு பின்னால் வந்தது. நாங்கள் பழகியது மாதிரி யாரும் பழகி இருக்கவும் மாட்டார்கள்; எங்களுக்குள் பகை வந்த மாதிரி யாருக்கும் வந்திருக்காது……

டால்மியபுரம் போராட்டத்தில் பிடிபட்ட மறுநாளே, அவர் ஆறுமாதம் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போய்விட்டார். நான் கலவர வழக்கில் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் ‘இல்லறஜோதி’ சந்தர்ப்பம் கிடைத்தது. எழுதிய வசனங்களை ரகசியமாக சிறைச்சாலைக்குள் அனுப்பி வைத்தோன். அந்த ஃபைலைப் பார்க்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டார்.

அதுதான் எங்கள் பகைமையின் ஆரம்பம் என்று தோன்றுகிறது.

பழகிய மரியாதைக்காகத்தானே அவருடைய பார்வைக்கு அனுப்பினேன்! ‘நன்றாய் இருக்கிறது; இல்லை!’ என்று குறிப்பாவது எழுதியிருக்கலாம் அல்லவா?

பத்திரிக்கைத் துறையிலும் போட்டி வளர ஆரம்பித்தது. எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் மனவேறுபாடு இருந்ததால், எம்.ஜி.ஆர் எனக்கு வெகுவாக ஊக்கம் கொடுத்தார். சொல்லப் போனால் எனக்கு அதிகமான தொகை கிடைப்பதற்குக்கூட ஏற்பாடு செய்தார். ‘மதுரை வீரனைப்’ போட்டுப் பார்த்தபோதெல்லாம் மனம் திறந்து பாராட்டினார்.

‘மன்னாதி மன்ன’னுக்கு நான் எழுதிய காலம் பொன்னான காலம். அதைத் தயாரித்த திரு. எம். நடேசன்,…. ‘மன்னாதி மன்னன் கதையையே நான் சொல்லித்தான் அவர் தேர்ந்தேடுத்தார்.

‘மதுரைவீரன்’ அபார வெற்றியடைந்ததும், தனது ‘நாடோடி மன்னன்’ கதையையும் என்னிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர்.

…. முதன் முதலில் பாட்டெழுதும் பொறுப்பையும் சேர்த்துக் கொடுத்தவர் எம். நடேசன்.

அடுத்தாற்போல் கதை, வசனம், பாடல் மூன்றையும், ‘மகாதேவி’ படத்திற்காக திரு. சுந்தரராவ் நட்கர்னி.

(அப்படத்தில்)

கொடுமையைப் பற்றி ஒரு வசனம்.

“கொடுமையைக் கண்டு யார்தான் பயப்பட மாட்டார்கள்! உச்சி வெயிலின் கொடுமை தாங்காமல் மனிதனின் நிழல்கூட அவன் காலடிக்குள் ஒண்டிக் கொள்கிறது!”

இது காளிதாசன் உவமையைவிட அற்புதமாக இல்லையா?

ஒரு படத்தை எப்படிப் பொறுப்புணர்ச்சியோடு எடுக்கவேண்டும் என்பதற்கு உதாரண புருஷர் எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ படத்தை அவர் எடுக்கும்போது இராப்பகலாக அதைப் பற்றியே சிந்தித்தார். அவர் எவ்வளவு சிந்தித்திருப்பார் என்பது எனக்கும், ரவீந்தருக்கும் தான் தெரியும்.

அந்தப் படத்திற்கு நாங்கள் இருவர் எழுதி இருந்தோம்.

இருவரும் தனித்தனியாக இரண்டாயிரம் பக்கங்கள் எழுதியிருப்போம். ஏழாம்தேதி சில காட்சியமைப்புகளைச் சொல்லி இருப்பார். பதினைந்தாம் தேதி அவற்றை நாங்கள் எழுதிக் கொண்டு வரும்போது காட்சிகளை வேறுவிதமாக மாற்றியமைப்பார்.

சிந்தனை அதிலேயே லயித்தால்தானே புதிய புதிய அமைப்புகள் தோன்ற முடியும்?

‘நாடோடி மன்னன்’ மகத்தான வெற்றியடைந்தது. மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமையெல்லாம் எம்.ஜி.ஆருக்கு இருப்பதை அந்தப் படம் நிரூபித்தது.”

புரட்சி நடிகர் பற்றிக் கவியரசர் கூறிய கருத்துகளைக் கண்டோம். இவையெல்லாம். ‘சினிமாச் சந்தையில் 30 ஆண்டுகள் என்ற நூலிலும்; ஏற்கனவே ‘மனவாசம்’ போன்ற நூல்களிலும் கவியரசர் கூறிய கருத்துகளே.

ஆக, ஒருவரது சிந்தனையோட்டத்தை அறியும் திறன் என்பது, மற்றவரிடத்தில் அமையும்போதுதான், இருவரது கருத்துகளும் ஒன்றாகி, நன்றாக வெளிப்படும். இத்தகு அதிசயக் கூட்டமைப்பு ‘எம்.ஜி.ஆர் – கண்ணதாசன்’ இருவரிடையேயும் நிலவியது.

அதனால்தான், கவிஞரது பார்வையில் பார்த்த எம்.ஜி.ஆர் என்ற கற்பக மரம், பூத்துக் காய்த்துக் கனிந்து பலன்கள் தந்து, நிலைத்து நின்றதை நம்மால் நாளும் உணர முடிகிறது.

பணக்காரக் குடும்பம்! பாடல்கள்… பாரீர்!
ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில், டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில், மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் – ராமமூர்த்தி இருவரின் இசையமைப்பில், 23.4.1964 ஆம் நாளன்று வெளியான படமே. ‘பணக்காரக் குடும்பம்.’

இப்படத்தில் கண்ணதாசன் எண்ணத்தில் பிறந்த, சிறந்த பாடல்களைப் பார்ப்போம்.

“பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக – நான்
பாதியிலே திரும்பி வந்தேன்
தனிமரமாக! தனிமரமாக!…”

பாடல்….! உள்ளத்தைத் தொட்ட பாடல்தானே!

எளிமையான சொற்களுக்கு விளக்கங்கள் ஏன்?

தொடர்ந்து பாடலைப் பார்ப்போம்!

“மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்குச் சூட – அதை
மண்மீது போட்டு விட்டேன்
வெய்யிலில் வாட!
மணமேடை போடச் சொன்னேன்
மங்கலமில்லை!
மணமகளைக் காண வந்தேன்
குங்குமமில்லை!
காதலுக்கே வாழ்ந்திருந்தேன்
கற்பனை இல்லை!….”

எல்லை தாண்டிய நாயகன் சோகத்தை, எளிய சொற்களில் கவியரசர் வடித்துத் தந்த வார்த்தைகளில் பார்த்தீர்கள்!

நாயகன் நல்லவன்; குற்றமற்றவன் என்பதைத் தெளிவுபடுத்தவே,

“காதலுக்கே வாழ்ந்திருந்தேன்
கற்பனை இல்லை!”

என்ற கருத்தாழம் பொதிந்த பாடல் வரிகள் பதிவு செய்யப்பட்டன.

சரி! காதலுக்கே வாழ்ந்திருந்தவன் கண்டது என்ன? கேளுங்களேன்!

“கண்ணாலே பெண்ணை அன்று
கண்டது பாவம்!
கண்டவுடன் காதல் நெஞ்சில்
கொண்டது பாவம்!
கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி
வந்தது பாவம் – வெறும்
கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம்!….”

கேட்டீர்களா?

எத்தனை பாவங்களை, காதலுக்கே வாழ்ந்திருந்தவன் அடுக்கிக் காட்டுகிறான்.

காதல் தோல்விகளால் கண் கலங்கும் இன்றைய இளைய சமுதாயத்திற்கும் இப்பாடல் ஆறுதல் தரும் அருமருந்துதானே!

ஒன்று எங்கள் ஜாதியே!
“எல்லாரும் ஓர் குலம்! எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்!
எல்லாரும் ஓர் நிறை! எல்லாரும் ஓர் விலை!
எல்லாரும் இந்நாட்டு மன்னர்!….”

என்ற மகாகவி பாரதியாரின் மந்திரச் சொற்களுக்கு, மதிப்பளித்துப் போற்றியவரே நம் கவியரசர்.

‘பாரதி எந்தக் காலத்துக்கும் பிரிதிநிதி!’ என்று சொன்ன கண்ணதாசனே, தன் எண்ணத்தில், பாரதியின் கருத்துகளையே என்றும் சொல்லிடத் துடிக்கும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் மனநிலையை அறிந்து, மக்கள் என்றும் போற்றும் பாடலொன்றைப் ‘பணக்காரக் குடும்பம்’ படத்தில் படைத்தார்.

அந்த அமுதப்படையலை இப்போது நாம் செவிகளுக்கு உணவாக்கிக் கொள்வோமா?….

“ஒன்று எங்கள் ஜாதியே!
ஒன்று எங்கள் நீதியே!
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே!
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே!….”

சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கிட உறுதி கொண்டெழும் இத்தகு கருத்துகளை யார் சொன்னால் மக்கள் வரவேற்பார்கள்? இந்த வினாவிற்கான மூலத்தையே அறிந்தவர் அல்லவா கண்ணதாசன்!

அதனால்தான், புகழ்மிக்க பொன்மனச் செம்மல், சொல்லி நடிக்கும் காட்சிக்கென்றே இப்பாடலை, கவியரசர் உருவாக்கினார்.

உருவான பாடலின் மீதியையும் பார்ப்போம்!…..

“ஆதிமனிதன் கல்லையெடுத்து
வேட்டையாடினான்!
அடுத்த மனிதன் காட்டையழித்து
நாட்டைக் காட்டினான்!
மற்றும் ஒருவன் மண்ணிலிறங்கி
பொன்னைத் தோண்டினான்!
நேற்று மனிதன் வானில் தனது
தேரை ஓட்டினான்!
இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தைத் தேடினான்! – வரும்
நாளை மனிதன் ஏழு உலகை
ஆளப்போகிறான்!….”

உயர்வான பாடல் உணர்த்துவனவோ….! பல…!

ஆதிமனிதன் வேட்டையாட,

அடுத்த மனிதன் நாட்டை உரவாக்கிக் காட்ட,

மற்றொரு மனிதன் பொன்னையும தோண்ட…

கற்கால மனிதவர்க்கம்… நாகரிக நாற்றங்கால்களை நட்டு வளர்ந்து பயிராக்கி, விளைச்சல் கண்ட விவேகமுள்ள வர்க்கமாயிற்று.

அடுத்த நிலை….

நேற்றைய மனிதன், வானத்தில் பறந்து செல்லும்

விமானத்தேரை ஓட்ட,

இன்றைய மனிதன் வெண்ணிலாவில்

இறங்கி இடம் தேட,

நாளைய மனிதனோ, ஐந்து கண்டங்களாம்

உலகங்களையும், அவற்றின் மேலும், கீழும்

உள்ள உலகங்களையும் ஆளப்போகின்றான்!

இவையெல்லாம் உண்மையானே!

கைகளிலே செல்ஃபோனை வைத்துக்கொண்டு, உலகையே வீட்டிற்குள் வரவழைத்து, இணையதளத்தோடு இதயங்களையே பகிர்ந்து கொள்ளும் மானுடவர்க்கம் எவற்றையும் சாதிக்கலாந்தானே!

இன்னும் பாடல் சொல்லும் இனிய கருத்துகள் எவ்வளவோ….!

“மன்னராட்சி காத்து நின்ற
தெங்கள் கைகளே!
மக்களாட்சி காணச்செய்த
தெங்கள் நெஞ்சமே!
எங்களாட்சி என்றும் ஆளும்
இந்த மண்ணிலே!”

ஆமாம்!….

மன்னர்கள் ஆள, அவர்களது ஆட்சிகளைக் காப்பாற்ற்க கைகளில் வேலும், வாளும் தாங்கிப் போர்க்களங்களில் எதிரிநாட்டுப் படைகளை வென்று, காத்து நின்றன கைகளே!

காலமாற்றங்களில் மக்களாட்சியை மலரச் செய்து மகிழ்ந்ததும் மக்கள் நெஞ்சங்களே!

இந்த மக்களாட்சியாம் எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே!

எங்கள் ஆட்சி என்றும் ஆளும்

இந்த மண்ணிலே!’ – என்ற வரிகள்,

1967 – ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி அமைந்தபோதும், 1977 – ஆம் ஆண்டு, அண்ணா தி.மு.கழக ஆட்சி அமைந்த போதும், திரையரங்குகளில் பெற்ற வரவேற்பு அளப்பரியது எனலாம்.

அடுத்து,

“கல்லில் வீடுகட்டித் தந்த
தெங்கள் கைகளே!
கருணைத் தீபம் ஏற்றிவைத்த
தெங்கள் நெஞ்சமே!
இல்லையென்ப தில்லை நாங்கள்
வாழும் நாட்டிலே!….”

ஆமாம்!…

கற்களால் வீடு கட்டித் தந்தது உழைக்கும் மக்களின் கரங்களே! கருணை எனும் தீபத்தை ஏற்றி வைத்ததும் அவர்களின் உயர்ந்த உள்ளங்களே!

(இந்த எண்ணங்கள் இல்லாததால்தானே, இன்று இனச் சண்டை, மதச்சண்டைகள் பரவி, பாரத நாட்டின் ஒற்றுமைக்கே, புதிதாய் முளைத்துள்ள தீவிரவாதங்கள் அச்சுறுத்தல்களாய் அமைந்துள்ளன. அவற்றை வீழ்த்த மக்கள் மனங்களில் ஒற்றுமை உணர்வுகள் ஓங்கிட இதுபோன்ற நல்ல பாடல்கள் திரைப் படங்களில் காட்சிகளாய் இனியேனும் விரியட்டும்மே!)

இறுதியாக,

‘இல்லை என்பதே இல்லை நாங்கள் வாழும் நாட்டிலே!’ – என்று கூறி, தேச ஒற்றுமைக்கும், தேசத்தின் பெருமைக்கும் அல்லவா இப்பாடல் கட்டியம் கூறுகிறது.

திரையில், புரட்சி நடிகரும், அவரது தங்கையாக நடிகை மணிமாலாவும் மிதிவண்டிகளில் வலம் வந்து, இப்பாடல் காட்சியில் தோன்றும்போது, பார்க்கும் மக்களும் பரவசத்தில் அல்லவா மிதந்தார்கள்.

பாடலை, டி.எம். சௌந்தரராஜனோடு, தனது கவர்ச்சிக் குரலில் எல்.ஆர். ஈஸ்வரியும் சேர்ந்து பாடிப் புகழ்க்கொடியையே ஏற்றிக்கொண்டட பொன்னான காலமே அந்தக் காலம்.

புரட்சி நடிகரை இப்படித் தன் பார்வையால் அளந்து பார்த்து, அவர் தம் படங்களில் சிறந்த பாடல்களை எழுதிய கவியரசரை எந்த நாளும் இந்த பூமியின் மனித மனங்கள் மறந்திடுமோ!

ஆக, 1964 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேட்டைக்காரன்’ ‘பணக்காரக் குடும்பம்’ படப்பாடல்கள் இன்னும் வெற்றிகரமாய் ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

1967 – ஆம் ஆண்டுத் தேர்தலில், பெருந்தலைவர் காமராஜரே, “அந்த வேட்டைக்காரன் கிட்ட ஜாக்கிரதைய்யா இருக்கணும்ன்னேன்! ஜனங்க எல்லாம் அந்த வேட்டைக்காரன் மேலேதான் ரொம்பப் பாசமா இருக்காங்கண்னேன்!” என்று கூறும் அளவுக்கு, எம்.ஜி.ஆரின் புகழ் விசுபரூபம் எடுத்து, எங்கும் பரவியிருந்தது.

‘என் கடமை’, ‘தாயின் மடியில்’ படங்களில் கவிஞர் எழுதிய பாடல்களில், குறிப்பாக ‘என் கடமை’ படப்பாடல்கள் இன்னும் இளமை பொங்கும் காதல் கீதங்களாய், ஒலிப்பதைக் கேட்கலாம்.

எழுதாத நிலையில் எழுந்த
ஒரே கீதம்! உரிமை கீதம்!
1965 – ஆம் ஆண்டு புரட்சி நடிகர் நடித்து வெளிவந்த ஏழு படங்களில் இரண்டில் மட்டுமே கவியரசர் பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

அவை: ‘ஆயிரத்தில் ஒருவன்’
‘தாழம்பூ’

இவற்றிலும், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மூன்று பாடல்களையும், ‘தாழம்பூ’ படத்தில் மூன்று பாடல்களையும் மட்டுமே எழுதினார்.

இதற்கெல்லாம் என்ன காரணங்கள்?

1961 – ஆம் ஆண்டு, தி.மு.கழகத்தை விட்டு வெளியேறிய கவியரசர், ஈ.வி.கே. சம்பத் தலைமையிலான தமிழ்தேசியக் கட்சியைத் தொடங்கிய முக்கியத் தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார். அந்தத் தமிழ்தேசியக் கட்சி, பெருந்தலைவர் காமராஜர் முன்னிலையில், காங்கிரஸ் பேரியக்கத்தில் 1964 ஆம் ஆண்டு இணைந்தது.

இதன்பின்னர், காங்கிரஸ் மேடைகளில் கவிஞர் கண்ணதாசனின் முழக்கங்கள் தி.மு.கழகத்தை திக்குமுக்காட வைத்தது. அறிஞர் அண்ணாவும், ஏனைய தி.மு.கழக முன்னணி யினரும் அவரது முழக்கத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். திராவிட நாடு பிரிவினை முழக்கம் கவிஞரால் கடும் தாக்குதலுக்குள்ளானது.

இந்த நிலையில்தான் புரட்சி நடிகரின் படங்களில் பாடல்கள் எழுதும் பொறுப்பிலிருந்து கவிஞர மெல்ல மெல்ல தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார்.

சிவாஜிகணேசன் படங்களில் பாடல்கள் எழுதாத நிலையிலிருந்த கவிஞர், அவர் நடித்த அனைத்துப் படங்களுக்கும் எழுதும் நிலையில் இருந்தார்.

இத்தருணத்தில்தான் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் புரட்சிநடிகரை வைத்து பி.ஆர். பந்துலு இயக்கிய ‘ஆயிர்த்தில் ஒருவன், படம் தயாரிக்கப்பட்டது.

இப்படத்திற்காக மெல்லிசை மன்னர்கள் விசுவநாதம் – ராமமூர்த்தி இருவரும் இசையமைத்துக் கொண்டிருந்தனர். இப்படத்திற்குப் பின்னர் இவ்விருவரும் பல்லாண்டுகள் பிரிந்தே இசையமைத்தனர் என்பதும் பலரும் அறிந்ததே.

பாடல்கள் ஒன்றிரண்டு பதிவாயின. இப்படத்தில்தான் முதன்முதலாக இன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, எம்.ஜி.ஆரோடு இணைந்து கதாநாயகியாக நடித்தார்.

கதாநாயகனும், கதாநாயகியும், அடிமைப்பட்ட வீரர்களோடு சேர்ந்து, உரிமைகீதத்தைக் கப்பலில் பயணிக்கும்போது பாடுவதாக ஓர் பாடலை உருவமைக்க வேண்டும்.

படத்தின் இயக்குநர் பி.ஆர். பந்துலுவும், மெல்லிசை மன்னர்களும் பாடல் எழுதும் கவிஞர்களோடு பலநாள்கள் கலந்து பேசியும், காட்சியமைப்புகளைக் கூறியும், அவர்கள் விரும்பிய விதத்தில் பாடல் பிரசவமாகவில்லை.

பி.ஆர். பந்துலுவுகும், மெல்லிசை மன்னர்களுக்கும் கண்ணதாசனை அழைத்துப் பாடலை எழுத வைக்கலாம் என்ற ஆசைகள் இருந்தாலும், மனங்களுக்குள் எழுந்த அச்சம் தடுத்தது.

‘எம்.ஜி.ஆர். என்ன சொல்லிவிடுவாரோ?’ என்ற அச்சமே அது. சூழ்நிலையை மெல்ல மெல்ல எம்.ஜி.ஆர். அறியும் நிலை ஏற்பட்டது.

எம்.ஜி.ஆரோ, பி.ஆர். பந்துலுவிடம், ‘பாடலை ஆண்டவன் எழுதுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது!’ என்று சொன்னவுடன் பந்துலுவுக்கும், மெல்லிசை மன்னர்களுக்கும் பேரானந்தம் ஏற்பட்டது.

(எம்.ஜி.ஆர். எப்பொழுதுமே கண்ணதாசனை ‘ஆண்டவனே’ என்றுதான் அழைப்பார்.

உடனே கவியரசருக்கு அழைப்பு, பறந்தது. வந்தமர்ந்த கவிஞரிடம் பாடலின் காட்சியமைப்பு விவரிக்கப்பட்டது.

அவ்வளவுதான்!…..

கவியரசர் பாடலைப் பொங்கிவரும் குற்றால அருவியெனக் கொட்டினார். பி.ஆர். பந்துலுவும், மெல்லிசை மன்னர்களும் பலநாள்கள் முயற்சித்தும் கிட்டாத பலனை, எட்டிப்பிடித்த ஆனந்தத்தில் கவிஞரைக் கட்டிப்பிட்த்து முத்தமழை பொழிந்தனர்.

அப்படியோர் சூழ்நிலையில் பிறப்பெடுத்த பாடல்தான்,

“அதோ அந்தப் பறவைப்போல
வாழ வேண்டும்!
இதோ இந்த அலைகள்போல
ஆட வேண்டும்.!
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்!……”

என்ற பாடல்!…. பாடலைக் கண்டீர்களா?

‘பறவைகள் சிறகுகளை விரித்துப் பறப்பதற்கும், கடலலைகள் எழுந்து வந்து ஆர்ப்பரித்உத ஆடுவதற்கும் தடைகள் உண்டா? அவற்றிற்குத்தான் எவ்வளவு உரிமைகள்!….

அவற்றைப் போலவே, ஒரே வானத்தின் கீழ், ஒரே பூமியில் வாழ்கின்ற மக்களல்லவா நாம்! நாமும் ஒரே கீதமாம் உரிமை கீதத்தை, நாம் அடிமையில்லை என்றே உரிமையுடன் பாடுவோமாக! என்ற கருத்துகளைக் கவியரசர் பாடலில் மிதந்து வரச்செய்த பாங்கினைப் பார்த்தீர்கள்….!

எவ்வளவு பெரிய செய்தியை, எத்தகு எளிமையான சொற்கள் மூலம், எல்லோரும் அறியுமாறு கவியரசர் செய்துவிட்டார்! இதனாலன்றோ இன்னும் அவர் நம் இயதயங்களில் வாழ்கின்றார்.

பாடலைத் தொடர்வோம்!…..

“காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே!
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே!”

இவையெல்லாம், இவ்வுலகில் என்றும் உலவும் உண்மைகள்தானே!

‘வீசுகின்ற காற்று, இவன் விடுதலை பெற்றவன், இவன் அடிமைப்பட்டவன் என்று பிரித்துப் பார்த்து, தகுதியறிந்தா வீசுகிறது! கடலின் நீரும் இவன் அடிமைப்பட்டவன் என்று, எவனையாவது சுடுகிறதா? ஓடுகின்ற ஒவ்வொரு நொடியும், ‘அடிமைகள் இவர்கள்’ என்று நம்மில் யாரையாவது விட்டுவிட்டா ஓடுகிறது. அப்படி ஓடும் காலத்தை நாம் யாராவது பார்த்துண்டா? உள்ளத்தில் பொங்கியெழும் காதல் உணர்வுகள், கட்டுக்கடங்காத பாசம், பெற்றெடுத்த தாய்மையின் நேசம் இவையெல்லாம் நம்மை மறந்து இட்டனவா? இல்லை! அவையெல்லாம் நமக்கின்றி நாம் வாழ்கின்றோமா?’ சிந்தியுங்கள் என்கிறார் கவிஞர்! யார் மூலம்….. எம்.ஜி.ஆர் மூலமாகவே!

சிந்தனைக்கு உரமாகும் பாடலின் தொடர்ச்சியைத் தொடர்வோமே!…….

“தோன்றும்போது தாயில்லாமல்
தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல்
பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே!”

சிந்தனைக்கு உரம்போடும் கருத்துகளைக் கவனித்தீர்களா?

ஒரு மனிதன் தோன்ற வேண்டுமெனில் தாயிடமிருந்துதானே தோன்ற வேண்டும்.

ஒரு மனிதன் சொற்கள் இல்லாமல், சொற்களால் உருவான மொழியில்லாமல் பேசமுடியுமா?

வாழ்கின்ற மனிதயினம், வாழ்கின்றபோது பசியில்லாமல் வாழ்ந்திட முடியுமா?

வாழ்ந்து முடிந்து, இறப்பெனும் இறுதிநிலையை எய்தி, பயணிக்கின்ற மனித உடல் கூட வேறு பாதையில் போக முடியுமா?

எல்லோர்க்கும் எந்த வழியோ, அத வழிப் பயணந்தானே ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திடக் கூடும்!

இவையெல்லாம் நிகழ்ந்த, நிகழ்கின்ற, நிகழப்போகும் நிரந்தர நிஊங்கள்தானே!

சரி! இவையெல்லாம் நிகழும்வரை மனிதர் வாழ்வு எப்படி இருக்கவேண்டும்?

“கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை!
கோயில்போல நாடு காண வேண்டும் விடுதலை!
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை!
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும்
விடுதலை!”

இவ்வாறுதான் இருக்கவேண்டும்!…

“அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!” என்று சொன்னார் ஔவைப் பெருமாட்டி.

அத்தகு மானிடப் பிறவி – தன் உடலில் இருந்து உயிர் விடுதலை பெற்றுச் செல்லும்வரை, ‘ வாழ்வதற்கு அடிமை தடையாக அமையலாமா? அமையக்கூடாது.

அதனை வலியுறுத்தியே,

கோடி மக்கள் சேர்ந்து வாழவேண்டும்….
அதற்கு வேண்டம் விடுதலை!
கோயில் போன்ற புனிதத்தை,
கோயில் போன்ற பெருமிதத்தை,
கோயில் போன்ற உயர்வினை….
நாடு காண வேண்டும்!….
அதற்கு வேண்டும் விடுதலை!
மனிதரெல்லாம் அச்சம் அகன்று
ஆடிப்பாடி மகிழ வேண்டும்!….
அதற்கு வேண்டும் விடுதலை!’

என்கிறார் எம்.ஜி.ஆர்.

இத்தகு விடுதலை…. எங்களுக்கோ, எங்கள் நாட்டிற்கோ மட்டுமா வேண்டும் என்கிறார் எம்.ஜி.ஆர்!

அதுதான் இல்லை!

‘அடிமைகள் வாழும் பூமியெங்கும்
வேண்டும் விடுதலை’!

என்கிறார் எம்.ஜி.ஆர்.

அவர், ‘உரிமைக்குரல்’ எழுப்பிய ‘உலகம் சுற்றிய வாலிபன்’ மட்டுமா? ‘புதிய பூமி’ கண்ட புரட்சித்தலைவர் அல்லவா?

ஒரே கீதம்!…. உரிமை கீதம்!!….

எம்.ஜி.ஆரால் முழங்கப்பட்ட விதங்கள் கண்டோம்! அதற்கென தேனில் ஊறிய முக்கனிச் சுவை போன்ற பதம் பதமான பக்குவப்பட்ட சுவையான சொற்கள் நிரம்பி வழிந்த கண்ணதாசனின் பாடல் வரிகளையும் கண்டோம். உள்ளம் மகிழ்ந்தோம்.

கலைச்செல்விக்காகக்
கவிஞர் தந்த பாடல்!
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்பதை நாம் அறிவோம். இப்படத்தில் ‘அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்!’ என்ற பாடலை அருமையாக எழுதிய கவிஞரையே, படத்திற்குத் தேவையான மீதி இரண்டு பாடல்களையும் எழுதுமாறு, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு வேண்டிக் கொண்டார்.

அவற்றுள் ஒன்றுக்கான காட்சியைப் பந்துலு விவரித்தார். ‘கதாநாயகி ஜெயலலிதாவோ சிறுவயதுப் பெண்; முதன்முதலாக மிகப்பெரும் புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆரோடு நடிக்கிறார். அதுவும் நெருக்கமான காதல் காட்சியில் நடிக்கிறார். அக்காட்சியே படப்பிடிப்பில் முதலாவதாக எடுக்கப்படவுள்ளது. எனவே பாடலும் அதற்கேற்ப அமைய வேண்டும்!’ என்றார்.

கவியரசருக்கா, காட்சியமைப்பிற்கான கானம் எப்படியிருக்க வேண்டும் என்று தெரியாது? ஏற்கனவே கலைச்செல்வியின் தமிழ்க் கலையுலகத்தின் தலைப்பிரசவமான முதல் படமான, ‘வெண்ணிற ஆடை’ படத்தின் வெற்றிக்கே மூலகாரணமான பாடல்களைப் பாங்குடன் எழுதியவராயிற்றே கவியரசர்!

ஸ்ரீதரின் இயக்கத்தில், அவரது தயாரிப்பில் உருவான சித்ராலயாவின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் கலைச்செல்வி ஜெயலலிதா நடித்த முதல் காட்சி ஓர் அற்புதமான பாடல் காட்சியாகும் அப்பாடல்,

“கண்ணன் என்னும் மன்னன் பேரைச்
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல!….”

என்று, கனிவாய் மலர்ந்து, கேட்போர் மனங்களை மகிழ்விக்கும் கண்ணதாசன் பாடலேயாகும்.

இப்பாடல் காட்சி பற்றி, வெற்றிச் செல்வி ஜெயலலிதா’ என்ற நூலில், பி.சி. கணேசன் குறிப்பிட்டுள்ளவற்றைப் பார்ப்போமா?

ஜெயலலிதா ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். தாயார் சந்தியா ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.

அந்தப் படத்தில் ஜெயலலிதா நடிக்கும் பாடல் காட்சி முதன் முதலாகப் படமாக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலின் பல்லவி இதுதான்.

“கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல’

ஜெயலலிதா தெய்வபக்தி மிக்கவர். அவருடைய வாழ்க்கைப் பாதையில் எதிர்ப்பட்ட கல்லையும், முள்ளையும் தெய்வ பக்தி சார்ந்த தனது மன உறுதியால் பூவாக மாற்றி வெற்றிநடை போட்டு வந்திருக்கிறார். அவர் நடித்த முதல் தமிழ்ப்படத்தில் அவர் ஏற்ற பாடல் வரிகளே அவருடைய எதிர்கால வாழ்க்கைக்குக் கட்டியம் கூறுவதுபோல் அமைந்துவிட்டன.”

– ‘வெண்ணிற ஆடை’ படப்பாடல் பற்றிய பி.சி. கணேசன் கண்ணோட்டத்தைப் பார்த்தோம்.

இங்கும் கண்ணதாசனின் வாக்கு வென்ற விதத்தைக் காணலாம். இவற்றைப் பற்றிக் ‘கண்ணதாசன் பார்வையில் காவியத் தலைவி’ என்ற நூலில் விரிவாக நான் எழுதியுள்ளேன்.

இதனால் கவிஞருக்குள் எழுந்து வரும் பாடல் வரிகள், பலரது வாழ்க்கைக்கும் அனுபவப் பாடமாகவே அமைந்துள்ளன என்பதனை அறியலாம்.

சரி…. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் காதல் காட்சிக்கான பாடல் எப்படிப் பிறந்து வருகிறது…?….!

ஆண்: “நாணமோ? இன்னும் நாணமோ? – இந்த
ஜாடை நாடகம் என்ன? – அந்தப்
பார்வை கூறுவதென்ன?
நாணமோ?…. நாணமோ?…..

பெண்: நாணுமோ? இன்னும் நாணுமோ? – தன்னை
நாடிடும் காதலன் முன்னே – திரு
நாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ? ….. நாணுமோ?”

பாடல் பிறந்து வந்த விதம் கண்டீர்! டி.எம்.எஸ். பி. சுசீலா இருவரின் இன்பக் குரல்களில் ஒலிக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இந்தப் பாடல் தரும் இனிமையை இன்றும் நம் இதயங்கள் குளிரக் கேட்கலாமே!

இப்பாடல் காட்சியில் முதன்முதலாகப் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும இணையந்து நடித்த பாங்கும், பார்த்தோர் உள்ளங்களைப் பரவசத்தில் மூழ்கச் செய்தன என்பதும் உண்மையே.

இப்பாடல் காட்சியில், ஜெயலலிதா நடிக்கும்போது, அவரையும் அறியாமல் ஒருவிதமான நடுக்கம் உண்டாகி விட்டது. அதனைப் பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர். ‘என்ன? ஏன் இப்படி நடுங்குறே? எதற்காக இப்படியெல்லாம் நடுங்க வேண்டும்? என்றார்.

எப்படியோ…. பாடல் காட்சியில் ஜெயலலிதா நடித்து முடித்தார். இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது, அங்கு வந்திருந்த சாண்டோ சின்னப்பா தேவரும், காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததும், ஜெயலலிதாவுக்குத் தைரியம் கூறி, ‘தைரியமா நடிக்கணும்மா… எம்.ஜி.ஆரோடு சரோஜாதேவி நடிச்சிருக்கிற மாதிரி நடிக்கணும்!’ என்றும் கூறிச் சென்றார்.

ஆனால், பாடல் காட்சி திரையில் வரும்போது, கவிஞரின் நாணமோ? இன்னும் நாணமோ?’ என்ற நளின வார்த்தைகளுக்கு ஏற்பவே புரட்சிச் செல்வியின் நடிப்பும் அமைந்திருந்தது கண்டு அனைவரும் பாராட்டினர்

இப்படிக் கலைச்செல்விக்காக, கவிஞர் தந்த முதல் பாடல்களை எல்லாம் முழுமையான வெற்றி பெற்ற பாடல்களே எனலாம்.

இதே படத்தில் காதல் ஏக்கத்தில் கதாநாயகன் பாடுவதாகக் கண்ணதாசன் எழுதிய, டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ஒப்பற்ற பாடல் ஒன்றும் உண்டு. அதுதான்…..

“ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ!
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ!”

என்று ஆரம்பமாகும் பாடல்.

“நாடாளும் வண்ண மயில்
காவியத்தில் நான் தலைவன்!
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்!
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையே என் கூடு!…..”

இப்படித் தொடரும் பாடலை நம் மனங்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா? இப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆரின் ஏக்கப் பார்வை கொண்ட நயமான நடிப்பைத்தான் நம் நினைவுகளில் இருந்து நீக்கி விடத்தான் முடியுமா?….முடியாதே!

‘தாழம்பூவில்’ கட்டழகன்!
ஸ்ரீ பாலகுமாரன் புரொடெக்சன்ஸ் தயாரிப்பில், எம்.எஸ். ராம்தாஸ் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், புரட்சி நடிகரும், ‘புன்னகை அரசி’ கே.ஆர். விஜயாவும் இணைந்து நடித்த ‘தாழம்பூ’ திரைப்படம் 28.8.1965 அன்று வெளியானது.

படத்தில் கண்ணதாசனின் முத்தான மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

அவற்றுள் பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

“பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால்போல் காய்ந்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு – அங்கு
தனியே தவித்தது பெண்ணழகு!….”

என்று தொடங்கும் பாடல் காட்சியில், தன் இளமைக்காலப் பருவ அழகைப் பக்குவமாய்க் காட்டி கே.ஆர். விஜயா, கவிஞரின் பாடலுக்கு உன்னத உயிரோட்டத்தைத் தந்திருப்பார்.

பேசும் பெண்ணழகி, கூறுவதைக் கேளுங்களேன்!

“காலடி ஒசை கேட்டுவிட்டாள் – அந்தக்
கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்!
நாலடி நடந்தாள் முன்னாலே – அங்கு
நடந்தது என்னவோ? பின்னாலே!….”

……கேட்டீர்களா? காலடிஓசை கேட்டுவிட்டாளாம்? யார் காலடி ஓசை? அது அவளுக்குத்தான் தெரியுமே! அந்தக் கட்டழகன்… ‘கட்டான கட்டழகுக் கண்ணா!’ என்றழைக்கப்படும் கட்டழகன் (எம்.ஜி.ஆரின்) முகத்தைப் பார்த்து விட்டாளாம்.

பார்த்தவுடன்,

நாலடி நடந்தாளாம் முன்னாலே!
அதன்பின்பு, அங்கு நடந்தது….
என்னவோ?… பின்னாலே!’

இதனைக் கூறுவது நாகரிகமில்லையே’….இத்தகு நயத்தக்க நாகரிகமான காதல் பாடலைக் கவிஞர் தந்தால், எம்.ஜி.ஆரின் கட்டழகு முகத்தைப் பற்றிய பாடலைப் பாராமல் நாமதான் பாய்ந்தோட முடியுமா?

அடுத்து….தூவானந்தான்!…ஆம்!

“தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்ட சொட்டா உதிருது உதிருது!….”

எனத் தொடங்கி,

“பூவாடும் இளங் கூந்தலுக்குள்
புகுந்து புகுந்து ஓடுது!…..”

என நீண்டு செல்லும் பாடலும், நம் செவிகளுக்கு இன்பம் சேர்க்கும் கவிஞரின் பாடலே.

இன்னும்….!

ஆண்: “ஏரிக்கரை ஓரத்திலே
எட்டுவேலி நிலமிருக்கு
எட்டுவேலி நிலத்திலேயும்
என்ன வைத்தால் தோப்பாகும்?”

என எழிலான வினாவுடன் தொடங்கி,

பெண்: “வாழை வைத்தால் தோப்பாகும்!
மஞ்சள் வைத்தால் பிஞ்சுவிடும்!
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்!….”

இவ்விதமாகப் பல விடைகளைப் பெற்றுத் தரும் சுவை மிகுந்த கவியரசர் பாடலில்,

கண்ட கனா பலிக்காதா?
கதவு இன்று திறக்காதோ?
நினைத்துவிட்டால் நடக்காதோ?
நெருங்கிவிட்டால் பிறக்காதோ?….”

என, அழகின் ஆராதனைகளாய்த் தொடரும், ஆசைமனங்கள் பேசும் பாடலைச் சுவைத்தால் சுவை கூடுந்தானே!

மீண்டும் அதிகமான படங்களில்
புரட்சித்தலைவர்!
1966 – ஆம் ஆண்டில் புரட்சித்தலைவர் நடித்த ஒன்பது படங்கள் வெளியாயின. 1963 – ஆம் ஆண்டிற்குப் பின் இந்த ஆண்டில்தான், ஒன்பது படங்கள் வெளியாயின.

இவற்றுள், அன்பே வா, நாடோடி, நான் ஆணையிட்டால், பறக்கும் பாவை, தாலி பாக்கியம், பெற்றால்தான் பிள்ளையா உள்ளிட்ட ஆறு படங்களில் சரோஜாதேவியும், முகராசி, சந்திரோதயம், தனிப்பிறவி முதலிய மூன்று படங்களில் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்திருந்தனர்.

இவற்றுள் நாடோடி, பறக்கும் பாவை, முகராசி, தனிப்பிறவி ஆகிய நான்கு படங்களில் கண்ணதாசனின் பாடல்கள் முழுமையாக இடம் பெற்றிருந்தன.

முகராசி – மகராசி – பொருத்தம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோடு, காதல்மன்னன் ஜெமினி கணேசன் சேர்ந்த ஒரே படம் ‘முகராசி’ தான். இப்படத்தில் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்தவர் கலைச்செல்வி ஜெயலலிதா.

‘முகராசி’ திரைப்படத்தை பதின்மூன்று நாட்களிலே தயாரித்து வெளியிட்ட பெருமை தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தையே சாரும். எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கண்ணதாசனின் கருத்துமிக்க பாடல்களும் நிறைந்த இப்படம் 18.2.1966 – ஆம் நாளில் வெளியானது. நூறு நாட்களுக்கும் மேலாக ஓடி மகத்தான வெற்றியையும் பெற்றது.

புரட்சி நடிகரோடு, கலைச்செல்வி ஜெயலலிதா நடித்து வெளிவந்த மூன்றாவது படமே ‘முகராசி’ இப்படம் வெளிவந்த இதே ஆண்டில் மட்டும் ஜெயலலிதா நடித்த பதினான்கு படங்கள் வெளிவந்தன. இவற்றுள் தமிழ்ப்படங்கள் மட்டும் ஒன்பது; தெலுங்குப்படங்கள் மூன்று; கன்னடப் படம் ஒன்று; ‘எபிசில்’ என்ற ஆங்கிலப்படம் ஒன்று.

இதில் பெரும் வியப்பு என்னவெனில் 1965 – ஆம் ஆண்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்து, சித்திரைத் திருநாளில் ‘வெண்ணிற ஆடை’ படமும், அதனையடுத்து மக்கள் திலகத்தோடு இணைந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும், ‘கன்னித்தாய்’ படமும்; இவற்றோடு வேறு நான்கு படங்களுமாக மொத்தம் ஏழு படங்கள் வெளியாயின. ஆக நடிக்க வந்த இரண்டே ஆண்டுகளில் ஜெயலலிதாவின் இருபத்தோரு படங்கள் வெளியானது சாதனையல்லவா!

எனவேதான் இந்த மகராசியையும், எம்.ஜி.ஆரின் முகராசியையும், தனது கருத்துப் பார்வையில் பார்த்த கவியரசர்,

“எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்! – இதில்
எத்தனை கண்களுக்கு வருத்தம்! – நம்
இருவருக்கும் உள்ள நெருக்கம் – இனி
யாருக்கு இங்கே கிடைக்கும்?….”

என்று, புரட்சித்தலைவரும், தலைவியும் அன்றே பாடல் காட்சியில் பாடித் தோன்றிடும் விதமாகப் பாடலொன்றை எழுதினார்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா எனும் ஜோடி மிகவும் பிரபலமாக இருந்த நேரத்தில், எழுந்த பலதரப்பு விமர்சனங்களுக்கும், கண்ணதாசனின் இப்பாடலே பதிலாக அமைந்தது என்று, அன்றே பலரும் கூறிய கூற்றுகள் இன்று வரை, பொய்க்கவில்லை.

‘அவர்களது பொருத்தம்!
இன்றுவரை பலருக்கும் ஏற்படும் வருத்தம்!
அரசியலில் அவர்களுக்குள் உருவான நெருக்கம்!
இப்புவியில், இனியும் யாருக்காவது
கிட்டுமா? யோசியுங்கள்!

எனவே காலக்கவிஞர் தந்திட்ட கவிதை வார்த்தைகள், வாக்குப் பலிதமாக, இன்றும் புரட்சித் தலைவரின் வாரிசு புரட்சித்தலைவியே என்று புவி போற்றிடும் அளவிற்கு உயர்ந்துள்ள உண்மையை யார்தான் மறுக்க முடியும்?’

நீதி சொல்லும் தேதி!
‘முகராசி’ படத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் எம்.ஜி.ஆர். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலை, போலீசாரோடு மாறுவேடத்தில் வந்து கைது செய்யும் காட்சியொன்று.

அக்காட்சியில் எம்.ஜி.ஆர், நீதி சொல்லிப்பாடும் பாடலொன்றைக் கண்ணதாசன் எழுதினார்.

இப்பாடல் காட்சி, கவியரசரின் உடல்தகனம் செய்யப்பட்ட நாளில் சென்னைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அன்றைய முதல்வராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். சோகத்தோடு கவியரசரின் உடல் அருகே நின்ற காட்சியும், உறையாற்றிய காட்சியும் காட்டப்பட்டது. அந்த நினைவலைகளை நினைவில் நிறுத்திப் பாடலைப் பார்க்கலாமா?

“உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! –
இங்கே
கொண்டுவந்து போட்டவர்கள் நாலுபேரு!
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு! – உயிர்
கூடுவிட்டுப் போன பின்னே கூட யாரு?…”
பாடலைப் பார்த்தோம்…..!

அரிய பெரும் தத்துவத்தை, அவருக்கே உரிய பாணியில், எவ்வளவு எளிமையாகக் கண்ணதசன் எழுதியுள்ளார் பார்த்தீர்களா?

பாமரர்க்கும் புரியும் இப்பாடலுக்கு விளக்கம் ஏன்?

“உயிர்!… ஒப்பற்ற ஒன்று! உடலெனும்
கூடுவிட்டு அது போன பின்னே….
கூட யாரு?’

இதனைப் புரிந்தவர், தெளிந்தால் ஆடாத ஆட்டங்கள் ஆடுவரோ?

எந்த மனிதர்க்கும் நிலை இதுதானா?….பார்ப்போம்!

“தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்! – இவன்
தேறாத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்! – பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் – தன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா! – உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா!…..”

பாருங்களேன்!

தீராத நோய்களைத்
தேறாத வைத்தியத்தை
தேர்ந்து படித்தவன்
தீர்த்து முடித்தான்!….
ஆனால்…. மற்றவர் நோய் தீர்த்த
மருத்துவன்!
தன் நோய் தீர்க்க முடியாமல்
பாய் போட்டுத் தூங்கிவிட்டான்!
அவன் உயிரும்….
பேயோடு சேர்ந்து விட்டது’.

என்கிறார் எம்.ஜி.ஆர்!

உலகியல் உண்மை இதுதானே!

இன்னும் நீதி சொல்வதென்ன?

“கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்! –
எந்தக்
காரியத்தைச் செய்வதற்கும் தேதி குறிப்பார்! – நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து வட்டதடியோ? – கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ!”

‘நல்ல சேதி சொல்லும் ஜோசியர்!…
அவர்க்கும் நீதி சொல்லும்
சாவு வந்து…
தேதி வைத்து விட்டதாம்!
அவரும் தப்ப முடியாமல்,
கணக்கில் மீதி வைக்காமல்,
நீதி அவர் கதையையும்
முடித்து விட்டதாம்!’

நீதி சொல்வதில் யார்தான் தப்ப முடியும்? கவிஞரின் கணிப்பை, காட்சியாக்கிக் காட்டும் எம்.ஜி.ஆர் இன்னும் சொல்வதுதான் என்ன?

“பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்! – அந்தப்
பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்! – அதில்
எட்டடுக்கு மாடி வைத்துக்
கட்டிடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்! – மண்ணைக்
கொட்டியவன் வேலி எடுத்தான்!”

‘பெரும் பட்டணத்தில் பாதியை வாங்கி, பட்டயத்தில் கண்டது போல், மண்ணைக் கொட்டி வேலி எடுத்தவன்!… அவ்வளவுதானா?

எட்டடுக்கு மாடிகளை அளந்து, கட்டடத்தை அழகாகக் கட்டி முடித்தவன்….! கடைசியில் எட்டடி மண்ணுக்குள் வந்து படுத்தான்…. தன் கதையை முடித்தான்!’

வாழ்க்கை என்பதே இவ்வளவுதான்….! இதற்கேன் வாழும்போதெல்லாம் போராட்டம்? தேவையில்லைதான்!

யார் சொல்லி யார் கேட்கிறார்கள்?

இப்படி மக்களுக்கு உகந்த தத்துவக் கருத்துகளை, மக்கள்திலகம் கூறும் விதத்தில் பாடலை இயற்றித் தந்த தத்துவக் கவிஞர் கண்ணதாசன் திறனை வியந்து எம்.ஜி.ஆர் பாராட்டியது நியாயந்தானே!

ஒரே மாதத்தில் மூன்று படங்கள்!
1966 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் மட்டும் புரட்சி நடிகர் நடித்த மூன்று படங்கள் வெளியாயின. 4.2.1966 ஆம் நாளில், பத்மினி பிக்சர்ஸாரின், பி.ஆர். பந்துலு இயக்கிய, எம்.எஸ். விசுவநாதன் இசையமைத்த, கண்ணதாசன் பாடல்கள் நிறைந்த ‘நாடோடி’ படம் வெளியாயிற்று.

இதே நாளில் சத்யா மூவீஸ் தயாரிப்பில், சாணக்யா இயக்கத்தில், உருவான ‘நான் ஆணையிட்டால்’ படமும் வெளியாயிற்று.

18.2.1966 ஆம் நாளில் ‘முகராசி’ படம் வெளியானது. மூன்று படங்களில் ‘முகராசி’ நல்ல வெற்றியைப் பெற்றது. ‘நாடோடி’ சுமாரான வெற்றியைப் பெற்றது. ‘நான் ஆணையிட்டால்’ போதுமான வெற்றியைப் பெறவில்லை.

இதனை இங்கே குறிப்பிடக் காரணம், ஒரே நடிகரின் மூன்று படங்கள் ஒரு மாதத்தில் வெளியாவதென்பதும், இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதென்தும், இன்றைய நாளில் நினைத்துப் பார்க்க இயலுமா? எண்ணிப் பாருங்கள்! இத்தகு வியத்தகு சாதனைகளை நிகழ்த்திட மக்கள்திலகம் போன்ற மகத்தான மாமனிதரால்தான் முடியும்!

இனி, ‘நாடோடி’ படத்தில் வரும் நல்ல பாடல்களை நாம் காண்போம்!

சங்க இலக்கியத்தின் சாரல்!
தங்கத்தமிழ் ஈந்த சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தானே சுவைத்துச் சுவைத்துப் படித்து, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையாரிடம் அவற்றிற்குரிய இலக்கணங்களை ஐயம் திரிபறக்கற்றுத் தெளிந்தவரே கவியரசர் கண்ணதாசன்.

அதனால்தான் சங்க இலக்கியங்களின் சாரங்களை, இலக்கிய நயத்தோடு, ‘சங்க இலக்கியத்தில் காதல்’ என்ற தலைப்பில் அவரால் நூலாய் எழுதி வெளியிட முடிந்தது.

விளம்பரம் தேட விரும்பாத கவியரசரது அந்த நூல் பல பதிப்புகளைக் கண்டு, பைந்தமிழர் மனங்களில் பாடங்களாய்ப் பதிந்தன.

இத்தகு, வியத்தகு சாதனைகள் புரிந்த கண்ணதாசன், கடையெழு வள்ளல்களில் சிறந்த பாரியின் நண்பரான கபிலர் எழுதிய ‘அற்றைத் திங்கள்? எனத் தொடங்கும் பாடலில் தன் மனதைப் பறிகொடுத்தார்.

அப்பாடலின் சாரத்தை மனதில் தேக்கி, ‘அன்று வந்ததும் இதே நிலா’ என்ற பாடலை, ‘பெரிய இடத்துப்பெண்’ எனும் படத்தில் எழுதினார்.

அதே சங்க இலக்கியப் பாடலின் சாரத்தை மையமாகக் கொண்டு, ‘நாடோடி’ படத்தில்,

பெண்: “அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே – நான்
அடைக்கலம் தந்தேன் என் அழகை – நீ
அறியாயே வெண்ணிலவே!”

என்று, ஆரம்பமாகும் அழகு தமிழ்ப் பாடலைக் கண்ணதாசன் ஈந்தார்.

சொற்சுவையும், பொருட்சுவையும் போட்டி போட்டு விஞ்சிடும் இப்பாடலை, இன்றும் கேட்போர் சுவைக்க முடியும் என்பதனை நாமறிவோம்.

இதே பாடலை, இன்பமயமாய்ப் பாடிய பி. சுசீலா, டி.எம்.எஸ். சோகமயமாய் இசைக்கும்போதும் கேட்போர் உள்ளங்கள் கிறுகிறுத்துத் தானே நிற்கின்றன.

அந்த அளவுக்குப் பாடலின் தரமும், பாடல் காட்சிகளில் நடித்த எம்.ஜி.ஆர், சரோஜாதேவியின் நடிப்புத் திறமும் அமைந்திருந்ததை இன்றும் ‘நாடோடி’ படத்தைப் பார்ப்போர் பாராட்டிடக் காணலாம்.

உலகமெங்கும் ஒரே மொழி!
தம் தாய்மொழியைத் தாழ்த்தியும் பேசுவோர் உலகில் எங்கும் இருக்கின்றனர்.

ஆனால் காதல் வயப்பட்டு உள்ளங்கள் உறவாடுகின்ற வேளையி, மொழிப் போராட்டம் எழும்புமா? அது எப்படி எழும்பும்?

“உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல்மொழி
ஓசையின்றிப் பேசும்மொழி
உருவமில்லா தேவன்மொழி!”

கேட்டீர்களா?

உலகமெங்குமே ஒரே மொழிதான்! அதுதான் உள்ளங்கள் பேசும் காதல் மொழி! ஓயாத போராட்டங்கள் இல்லாமல் ஓசையின்றிப் பேசும் மொழியே; உருவமே இல்லாத உயர்வான தேவன்மொழி!

இத்தகு மொழியை இளைஞர் உலகம் பேசக் கற்றுக்கொண்டால், சாதி, மத, இன, பேதமில்லா உலகினை உருவாக்கிட முடியும் அல்லவா?

பெண்ணும், ஆணும் இணைந்து பாடும் இப்பாடலில் இடம்பெற்றுள்ள,

“கோடி மனிதர் பேசிய பின்னும்
குறைவில்லாமல் வளர்வது காதல்!
நாடுவிட்டு நாடு சென்றாலும்
தேடிச்சென்று சேர்வது காதல்!”
என்ற முத்தாய்ப்பான வரிகள் வாரி வழங்கும் கருத்துகள் என்ன?

‘எத்தனைக் கோடி மானுடர் மனங்கள் புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசினாலும், குறைவில்லாமல் வளர்வதே காதல்! நாடு விட்டு நாடு சென்றாலும் தேடிச சென்று சேர்வதே காதல்! இந்தக் காதல் பேசும் மொழியே உலகமெங்கும் உயர்ந்து நிற்கும் ஒரே மொழி!’

இவ்வாறு, புரட்சி நடிகர் நடித்த படத்தில், காதல் காட்சியிலும் புரட்சி கீதங்களை எழுதி, அப்பாடல்கள் மக்கள் மனமேடைகளில் என்றும் நிலைக்குமாறு செய்தவரே கவியரசர்.

மேல் ஜாதி! கீழ் ஜாதி!
புரட்சி நடிகர், புரட்சித்தலைவராக உயர்ந்தார் எனில், திடீரென்று வந்த உயர்வல்ல… அவரது வாழ்க்கை நிகழ்வுகளும, படங்களில் அவர் நடித்த காட்சிகளும், மக்கள் மனங்களில் ஒன்றாகவே ஒன்றி இணைந்தன என்ற உண்மையே காரணம் எனலாம்.

சொல்வதையே செய்வதிலும் கடைப்பிடித்தவரே எம்.ஜி.ஆர். இதனை நுட்பமாக உணர்ந்து, அவரது கொள்கை வழிப்பாடல்களை எழுதுவதில் வல்லவரே கண்ணதாசம்.

அத்தகு பாடல்கள் பலவற்றில் ஒன்றே ‘நாடோடி’ படத்தில் வரும்….

“கடவுள் செய்த பாவம் – இங்கு
காணும் துன்பம் யாவும்! – என்ன
மனமோ என்ன குணமோ – இந்த
மனிதன் கொண்ட கோலம்?”

என்று தொடங்கும் பாடல்,

‘உலகில் உலவும் துன்பம் யாவும் கடவுள் செய்த பாவமாம்! மனிதர்கள் கொண்ட கோலங்களுக்கெல்லாம் அடித்தளங்கள் அவர்களது மனங்களும், குணங்களுமேயாம்!’

இவற்றை மறுப்பது எங்ஙனம்?

“பொருளேதுமின்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டு விட்டான்!
அறிவென்ற ஒன்றை மரியாதையின்றி
இடம் மற்றி வைத்துவிட்டான்!”

கருவிலே உருவாக்கி பொருளேதும் தராமல்தான், இறைவன் இவ்வுலகில் அனைவரையும் படைத்தான். உண்மைதான்!

ஆனால் ஒவ்வொருவரும் பிறப்பெடுத்த இடம்? ஓருயிர் மாட மாளிகையில்? ஓருயிர் குந்தயிடமில்லாக்குடிசையில்! இவை நிகழ்ந்திடக் காரணம்?

ஊழ்வினை என்பர் பலர்! உலகியல் முறை என்பர் சிலர்!

அறிவை அனைவர்க்குமே ஈந்தான் இறைவன்! ஆனால் மரியாதையின்றி அந்த அறிவை, இடம் மாற்றி வைத்துவிட்டானாம் இறைவன்! பாவம் இறைவன்! பழிகள் எல்லாம் அவன்தான் சுமக்க வேண்டுமா?

இன்னும் என்ன?

“நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும்போதும் தெரிவதில்லை
பாழாப்போன இந்த பூமியிலே!”

இங்கே மனிதர்கள் இடிபடுகிறார்கள்! எப்படி?

நண்பர்கள், பகைவர்கள்!
நல்லவர், கெட்டவர்!
யார் யார் என்று,
பழகும்போது தெரிவதில்லை…
காரணம்…?

அவர்கள் வாழும் பூமியே பாழாய்ப் போன பூமி! பின்னர் எப்படிக்கண்டு தெளிய முடியும்?

அடுத்து…எவ்வளவோ….! கண்ணதாசன், எம்.ஜி.ஆர்..மூலம் எடுத்து வழங்குகிறார்!

நாமோ, கூறிட விரியும் என்ற எண்ணத்தால்… சுருங்கப் பார்க்கவே விரும்புகிறோம்.

இங்கு மனித ஜாதியில்…மகுடம் சூடும் ஜாதி! மண்டியிடும் ஜாதி என்ற தொல்லைகள் பற்பல….! இவற்றைப் பார்த்த கவியரசர், பின்னால் புவியாளும் புகழ்படைத்த புரட்சித்தலைவர் மூலம் புவிக்கு அள்ளித்தரும் அனல் பறக்கும் அற்புதப் பாடல் வரிகளை வாசித்துத்தான் பாருங்களேன்!

“கொடுப்பவன்தானே மேல்ஜாதி!
கொடுக்காதவனே கீழ்ஜாதி!
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்!
பாழாய்ப் போன இந்தப் பூமியிலே!”

வாசித்தீர்களா!

இங்கே பரமசிவனோ? பாற்கடல் பரந்தாமனோ? அருள் வழங்கும் அல்லாவோ! இரக்கமுள்ள இயேசுவோ? புனிதமுள்ள புத்தனோ? மகிமையான மகாவீரரோ? யாருமே ஜாதி என்னும் சதி வலையை விரித்து, மக்களைப் பிரித்துப் பார்க்கவில்லை!

ஆனால்…! படைத்தவன்… ஆம் மானுட ஜாதியைப் படைத்தவன்!… அந்தப் பரம்பொருள்! அவன் பெயரால்… ஒவ்வொரு வரும் ஜாதியைப் பகுத்து வைத்தனர்….! இது நியாயமா? நீதியா? இல்லவே இல்லை!

அதனால்தான்… இந்தப் பூமி…! பாழாய்ப் போன பூமியென்று கவியரசர் மீண்டும் தம் கவிதைமூலம், புவியாளப் பிறந்த புரட்சித்தலைவர் மூலம் சொல்லவைத்தார்.

அப்படியானால்… உண்மையான ஜாதி?

இல்லாத இதயங்களுக்காக இரக்கமோடு கொடுப்பவனே மேல்ஜாதி! இருப்பதை இருட்டறையில் வைத்துக்கொண்டு ஈயாதவனே கீழ்ஜாதி!

சரி! ஜாதியை இரு பிரிவாக வகுத்துக் கொண்டோம்! பாழாய்ப் போன பூமியைப் பண்படுத்த வழி…! இதோ….! புரட்சி நடிகர் செப்பும் புரட்சி கீதம்… கவியரசர் வழி வருவதைப் பார்ப்போமே….!

“நடப்பது யாவும் விதிப்படி என்றால்,
வேதனை எப்படித் தீரும்?
உடைப்பதை உடைத்து, வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படி யாகும்!”

பார்த்தீர்களா?

‘பாரில் நடப்பதெல்லாம் பகவான் விதித்த விதிப்படி என்றால், இப்பாரிலுள்ள பலகோடி ஏழை மக்களின் வேதனைகள் எப்போது, எப்படித்தான் தீரும்? பொறுமை கொண்டோரே! பொறுத்தது போதும்! இனி உடைத்தெறிய வேண்டிய பத்தாம்பசலித்தனமான பழைமைகளை உடைத்தெறிந்து விட்டு, வளர்க்க வேண்டிய புதுமைகளையும், பழைமைகளையும் பாதுகாத்து வளர்த்தால் உலகமே உருப்படியான புத்துலகமாக மாறும்!’

சரிதானா? டி.எம். சௌந்தரராஜன் உணர்ச்சிப் பெருக்கோடு பாடி, புரட்சி மனத்துள்ளலோடு புரட்சி நடிகராம் எம்.ஜி.ஆர் பாடல் காட்சியில் தோன்றி நடித்த, கண்ணதாசனின் இப்பாடல் கருத்துகளை இன்றும் காண்போர், கேட்போர் மெய்சிலிர்த்து, தம்மை மறந்து உணர்ச்சிப் பெருக்கோடு நிற்பர் என்பது உண்மையன்றோ!

நாடு! அதை நாடு!
‘நாடோடி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு மிகச்சிறந்த தேசியவாதி.

போர்மேகங்கள் பெரிதும் சூழ்ந்து நின்ற 1965 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பெற்ற படமே ‘நாடோடி’.

எனவே இப்படத்தில் தேசிய உணர்வு பெருக்கெடுத்து ஓடும் கவியரசர் பாடல் இடம்பெற்றதில் வியப்பேதுமில்லை. புரட்சி நடிகரும் தேசிய உணர்வும், தேசப்பற்றும் மிகுந்தவர் என்பதை யாரும் மறுத்திட இயலாது.

1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பின் போது, இந்தியாவிலேயே யுத்த நிவாரண நிதியாக அதிகத்தொகையாம் ஒரு இலட்ச ரூபாயையும்; 110 சவரன் தங்க வாளினையும், எம்.எல்.சி. பதவிக்குக் கிட்டிய சம்பளத்தையும் தந்த தங்கமனம் படைத்த தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.

இவை தவிர தாம் நடித்த சொந்தப் படங்களை ‘எம்.ஜி.ஆர். வாரம்’ எனத் திரையிட்டு ரூபாய் 17500-ஐயும் 1962-ஆம் ஆண்டு பாதுகாப்பு நிதிக்கு ஈந்த தேசபக்தச் செம்மலே எம்.ஜி.ஆர்.

இதுவுமின்றி முதலிலே கூறிய நன்கொடைப் பட்டியல்படி பண்டிதல் ஜவகர்லால் நேரு நினைவு நிதிக்கு 1964 – ஆம் ஆண்டு ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை வாரித் தந்த வள்ளலே எம்.ஜி.ஆர்.

பட்டியல் நீளும் வண்ணம் பல மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, வறட்சி நிவாரண நிதியெனத் தேசபக்தியுடன், கருணையுள்ளத்தோடு பல இலட்சங்களைப் பாங்குடன் ஈந்த பாரிவள்ளலே எம்.ஜி.ஆர்.

எனவேதான், அத்தகு எம்.ஜி.ஆர் மூலம் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் நாட்டுப்பற்று மிக்க பாடலைத் தர விரும்பியே, நமது தேசிய தெய்வீகக் கவிஞராம் பாரதியாரின் வாரிசாய்ப் பரிமளித்த கவியரசர் கண்ணதாசன்.

“நாடு அதை நாடு – அதை
நாடாவிட்டால் ஏது வீடு?”

எனத் தொடங்கும் எழுச்சிமிக்க பாடலை எழுதினார்.

பாடலின் தொடர்ச்சியைப் பாடித்தான் பாருங்களேன்!

“பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு!
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு!
பாலைவனம் என்றபோதும் நம்நாடு!
பாறை மலைகூட நம் எல்லைக்கோடு!
ஆறுநிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்!
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்!”

பாடிப் பார்த்தீர்களா?

பாரத நாட்டின் பெருமை; அது பெற்றுள்ள மக்களின் அருமை; எக்காளமிட்டே, எம்.ஜி.ஆர் என்ற புரட்சித்தலைவரால் புகழப்படும் போது நமது உடலெல்லாம் புல்லரிக்கின்றதல்லவா!

இப்பாடலுக்கான முழுமையான விளக்கம் ‘கண்ணதாசனின் புரட்சிப் பூக்கள்’ என்ற நூலில் எழுதியுள்ளேன்.

கூறியது கூறலை நான் தவிர்க்கிறேன். அறிந்துகொள்ள விரும்புவோர் அந்நூலைப் பாருங்கள்!

பாரத நாட்டு மக்கள் எத்தகைய உயர்வுடையோர் என்பதை, கவிஞர் கவி வழி, எம்.ஜி.ஆர் எடுத்தியம்பி நடித்திட்ட பாடல் வரிகளை மட்டும் மீதியின்றிப் பார்க்கலாமே!

“வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை!
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை!
வெற்றித் திருமாது நடைபோடும் எல்லை!
பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்!
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்!
நிலத்தில் உயிர்வைத்து உரிமை கொண்டாடும்!
எதிர்த்து வருவோரை உரமாப் போடும்!”

பார்த்தீர்களா?

‘பாரதத்தாய் பெற்றெடுத்த வீரதீரச் செல்வங்களை… இவர்கள் விருந்தாகவும் மாறுவார்கள்! புலியாகவும் சீறுவார்கள்! பாரத மண்மீது உயிர்வைத்து உரிமை முழக்கமிடுவார்கள்! எதிர்த்து வருவோரை, பாரத மண்ணுக்கே உரமாக்கிப் போடுவார்கள்!’

இவற்றைப் புரட்சித்தலைவரின் வீரம் கொப்பளிக்கும் நடிப்புத்திறனோடு காட்சியாகப் பார்த்தோர், இப்பாடலை இன்னும், ஏன்? என்றும் மறப்பாரோ!

தனிப்பிறவி!
‘தமிழ்த் திரையுலகில் கவியரசர் வாக்கே வேதவாக்கு! அதனால்தான் அவர் பெற்றார் செல்வாக்கு! அவர் வாக்கோ என்றும் உலாவரும் நல்வாக்கு! நாமெல்லாம் நாளும் போற்றும் தனிவாக்கு!’

என்றெல்லாம் கூறுவதைத் ‘தனிப்பிறவி’ படப் பாடல்கள் மூலம் முழுவதுமாக நிரூபித்துக் காட்டியுள்ளார் கண்ணதாசன்.

16.9.1966 ஆம் நாளில் வெளிவந்த ‘தனிப்பிறவி’ படத்தில்; திரையிசைத திலகம் கே.வி. மகாதேவனின் இனிய இசையில்,

“எதிர்பாராமல் நடந்ததடி? – முகம்
கண்ணுக்குள் விழுந்ததடி!
புதிய சுகம் ஒன்று புகுந்ததடி! – அது
பொழுதுக்குப் பொழுது வளருதடி!”

என்று தொடங்கும் கவியரசர் பாடல்; பி. சுசீலாவின் இனிய குரலில் ஒலிக்கும்.

இப்பாடலில்,

“யாருக்கு யாரென எழுதியவன் – என்னை
அவனுக்குத் தானென எழுதிவிட்டான்!
நேருக்கு நேரே பார்க்க வைத்தான்! – மனம்
நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தான்!…”

என்ற கவிஞரின் கவிதை வரிகளில், புரட்சித் தலைவரின் வாரிசாய்ப் புகழ் படைக்கும் புரட்சித் தலைவியை, முன்னமே படம் பிடித்துக் காட்டிய பாங்கு புலப்படும் விதத்தைப் பாருங்களேன்! மேலும்….

“குன்றத்து முருகன் போல வந்தான்! – தன்
குலத்தினில் என்னைச் சேர்த்துக் கொண்டான்!”

என்ற கவி வாக்கு, புவிக்குள் நிகழ்த்திய அதியத்தை நாம் இன்னும் காண்கிறோம் அல்லவா?

புரட்சித்தலைவரின் அரசியல் இயக்கத்திற்கே, அவரது இரத்தத்தின் ரத்தமான பெருங்குலத்திற்கே தலைவியாகும் பேறு, கலைச் செல்வியாய்த் திகழ்ந்த ஜெயலலிதாவிற்கே கிட்டியதை எண்ணிப் பாருங்கள்! அப்போதுதான் கவியரசரின் வாக்குப் பலிதம் காதல் கவிதையிலும் பலித்த விதம் நமக்கு நன்கு புரியும்!

புரட்சிப் பெண்! புரட்சித் தலைவி!
கண்ணதாசன் ஏதோ, புரட்சி நடிகர் படத்தில் மட்டும், அன்றைய காவிரி தந்த கலைச்செல்வியாகத் திகழ்ந்த ஜெயலலிதாவைப் புகழ்ந்து பாடல்களை எழுதினார் என்பதில்லை.

கண்ணதாசன் எண்ணத்தில், கலைச் செல்வி ஜெயலலிதா நடித்த பல படங்களில் பாடல்களிலும் வாக்குப் பலித்த விதங்களைப் பார்க்கலாம்.

ஏ.வி.எம். நிறுவனத்தாரின் ‘அனாதை ஆனந்தன்’, என்ற திரைப்படத்தில், கதாநாயகி ஜெயலலிதா. இப்படத்தில் கவிஞரின் அருமையான பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

“அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்!”

என்ற பக்திப் பரவசமூட்டும் பாடல் இடம் பெற்றிருந்த அப்படத்தில்தான்,

கதாநாயகி ஜெயலலிதா பாடுவதாக,

“உலகம் பொல்லாத உலகம்!”

என்று தொடங்கும் பாடலைக் கவிஞர் எழுதினார்.

இப்பாடலில்,

“இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்!
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன்!
புரட்சிப் பெண்ணாக உயர்ந்தேன்!”

என்றும் எழுதினர்.

கவியரசர் பார்வையில் புதுமைப் பெண்ணாக, புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்த கலைச்செல்வியே, இன்று மாண்புமிகு தமிழக முதல்வராய், புரட்சித் தலைவியாய், காவியத் தலைவியாய்த் திகழ்கிறார் என்றால், அவரது வாக்குப் பலிதத்தின் உயர்வை நம் உள்ளங்கள் உணர்ந்தே உயர்வாய்ப் பாராட்டலாம்.

இவ்வாறெல்லாம் எழுதிய நம் கவிஞர்தான், ‘தனிப்பிறவி’ படத்தில் இன்னும் சில அதிசயத்தக்க பாடல் வரிகளைத் தந்துள்ளார். அவற்றையும் காண்போமாக.

தனிப்பிறவிகளே!
‘தனிப்பிறவி’ படத்தில் நாயகியாய் நடிக்கும் ஜெயலலிதா பாடிடும் பாடலாகக் கவியரசர்,

“ஒரே முறைதான் உன்னோடு
பேசிப் பார்த்தேன்!
நீயொரு தனிப்பிறவி!”

என்று தொடங்கும் பாடலை எழுதினார்.

கதாநாயகனாக நடிக்கும் எம்.ஜி.ஆரைப் பாராட்டுவதாக இப்பாடல் வரிகள் இதமாய் ஒலிக்கும்.

இதே வரிகளை மீண்டும் நாயகனாக நடிக்கும் எம்.ஜி.ஆர். நாயகியாம் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பாடுவதாகவும் கவியரசர் எழுதியிருக்கிறார்.

பல பிறவிகளில் அடைய வேண்டிய புகழை ஒரே பிறவியில், சத்யா எனும் தாய் பெற்றெடுத்த புரட்சித் தலைவரும்! சந்தியா எனும் தாய் பெற்றெடுத்த புரட்சித் தலைவியும் அடைந்துள்ளார்கள் என்பது உலகறிந்த உண்மையே.

இதனை உய்த்துணர்ந்து 1966 ஆம் ஆண்டிலேயே, தம் எண்ணத்தில் எழுந்த கருத்தாக இப்புவிக்குச் சொன்ன ஜோதிடக் கவிஞரே கண்ணதாசன் எனலாம்.

கண்ணதாசன் எண்ணத்தில் தனிப்பிறவிகளாய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும், தமிழக வரலாற்றிலும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, அரிய சாதனைகள் புரிந்தவர்கள் வரிசையில் வலம்வரும் தலைசிறந்த தலைவர்கள்தானே!

தர்மநீதி மக்களாட்சி வாழ்க!
புரட்சித்தலைவர் படமென்றால் சமூக நீதியைச் சொல்லும் பாடல் இல்லாமலா இருக்கும். அந்தப் பாடலையும் கவியரசர் எழுதினால் அப்பாடல் நம் இதயங்களில் இடம் பெறாமலா இருக்கும்!….

உழைக்கும் வர்க்கத்தை உயர்த்தி, உல்லாசக் கோட்டைகளில் வாழும் உள்ளங்களிலும் உழைப்பின் உன்னதத்தை உயர்த்திட, தனிப்பிறவியாம் எம்.ஜி.ஆர். மூல்ம கண்ணதாசன் எடுத்துரைத்த என்றும் வாழும் சமூகநீதிப் பாடலைச் சந்திப்போமா?

“உழைக்கும் கைகளே!
உருவாக்கும் கைகளே!
உலகைப் புதுமுறையில்
உண்டாக்கும் கைகளே!”

பாடலின் தொடக்கத்தைச் சந்தித்தோம்!

“உழைக்கும் கைகள்!
உலகையே புதுமுறையில்
உருவாக்க நினைத்து, அப்படியே
உண்டாக்கும் கைகள்!’

உண்மையானே!

இந்தக் கைகள் இவ்வுலகில் செய்யும் அதிசயங்கள்…. என்னவாம்? ஒன்றா? இரண்டா? கேளுங்களேன்!

“ஆற்றுநீரைத் தேக்கி வைத்து
அணைகள் கட்டும் கைகளே!
ஆண்கள் பெண்கள் மானம்காக்க
ஆடை தந்த கைகளே!
சேற்றில் ஓடி நாற்றுநட்டு,
களை எடுக்கும் கைகளே!
செக்கர்வானம் போல என்றும் சிவந்து நிற்கும்
கைகள் எங்கள் கைகளே!”

கேட்டீர்களா? இப்படி உழைக்கும் மக்களின் உயர்வை, படிக்காத பாமரமும் அறியும் வண்ணம் எளிய சொற்களில், புரட்சித் தலைவர் மூலம் பூமிக்கு உணர்த்தும் கவியரசரின் கவித்துவத்தின் மகத்துவமே மகத்துவம்.

இப்பாடலின் விரிவான விளக்கங்களும், ஏற்கனவே முன்னர் வந்த நூல்களில் முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளன.

இருப்பினும் நம் இதயங்களைத் தொடும் இரண்டொரு வரிகளை வாசிப்போமே!

‘உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்
மக்கள் ஒன்றாய்க் கூடுவோம்!
ஒன்று எங்கள் ஜாதியென்று
ஓங்கி நின்று பாடுவோம்!
தர்மநீதி மக்களாட்சி வாழ்கவென்றே
ஆடுவோம்! – நாம்
வாழ்கவென்றே ஆடுவோம்!”

வாசித்தோம்!….

யோசிப்போமா?

‘உலகமெங்கும் உள்ள தொழில் வளர்க்கும், தொழிலாளர் வர்க்கம் ஒன்றாய்க்கூட வேண்டும்! ஒன்று எங்கள் ஜாதியென்றே, ஓங்கி நின்று உரத்த குரலில் பாட வேண்டும்!’ என்கிறார் கவிஞர்.

இங்கே, பாரதிதாசனாரின்,

“புதியதோர் உலகம் செய்வோம்! – கெட்டப்
போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம்!”

என்ற ஒரே பாடலை, 1966 ஆம் ஆண்டில் வெளியான ‘சந்திரோதயம்’ படத்திலும், 1975 ஆம் ஆண்டில் வெளியான ‘பல்லாண்டு வாழ்க!’ படதிதலும் இடம்பெறச் செய்த எம்.ஜி.ஆரின் உள்ளத்தைக் கண்ணதாசன் படம் பிடித்துப் பார்த்த பார்வையாலே உருவான பாடலே இந்த உன்னதப் பாடல் எனலாம்.

இன்னும்,

‘தர்மம்! நீதி! மக்களாட்சி! இம்மூன்றும் வாழ்கவென்றே ஆட வேட்டுமாம்!’

இதனைத் தானே ‘நாடோடி மன்னன்!’ படத்தின் தாரக மந்திரங்களாக்கிப் புரட்சி நடிகர் முழங்கினார்! அப்படத்திற்கு, என்றும் வாழும் வரலாற்று வசனங்களை எழுதியவரே கவியரசர் கண்ணதாசன்தானே!

உழைக்கும் மக்களின் உரிமை கீதத்தை உலகமெங்கும் பரவ்விட்ட புரட்சித் தலைவர், கவியரசர் புகழை, உழைக்கும் மக்கள் என்றும் பாடுவார்கள் என்பதில் ஐயமில்லையே!

பறக்கும் பாவை
ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்து, டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில் கண்ணதாசனின் கருத்துமிக்க பாடல்களோடு, 11.11.1966 அன்று வெளியான படமே ‘பறக்கும் பாவை’.

“பட்டுப் பாவாடை எங்கே?
கட்டிவைத்த கூந்தல் எங்கே?
பொட்டெங்கே? பூவும் எங்கே?
சொல்லம்மா! சொல்லம்மா!”

“முத்தமோ மோகமோ
தத்தி வந்த வேகமோ?”

“நிலவென்னும் ஆடை கொண்டாளோ – அவள்
தன்
நிழலுடன் நின்றாளோ!”

“கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? – நாம்
கையோடு கைசேர்த்துக் கொள்ளலாமா?”

“சுகம் எதிலே இதயத்திலா?
பொன்னான கன்னமா?”

“உன்னைத்தானே – ஏய்!
உன்னைத்தானே!
உறவென்று நான் நினைத்தது
உன்னைத் தானே!”

இவ்வாறெல்லாம் காதல் தேனாறு, பெருக்கெடுத்து ஓடும் அருமையான ஆறு பாடல்களையும்;

“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!
உறவெல்லாம் முள்ளாகும்!
உயிரெல்லாம் கல்லாகும்!…”

எனத் தொடங்கும், கேட்போர் நெஞ்சங்களை நெக்குருகச் செய்து…

“கண்ணைத் தந்த தெய்வங்களே!
கருணை தந்தால் ஆகாதோ!

“வாழ்த்தும் கையில் வாளுண்டு!
போற்றும் பொழியில் விஷமுண்டு!

என்ற சொல்லச் சொல்ல் சோகத்தைக் கூறி, சுகமாக சுமைகள் குறைய ஆறுதல் கூறும் அமுதவரிகள் நிறைந்த பி. சுசீலா பாடிய பாடலையும் யார்தான் மறக்க முடியும்!

தாய்க்குத் தலைமகன்!
1967 ஆம் ஆண்டு பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் நான்குதான் வெளியாயின.

காரணம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.

மறுபிறவி பெற்ற மக்கள் திலகம் பேசும் திறனைப் பெறுவதற்கே பலநாள்கள் ஆயின.

எம்.ஜி.ஆர். துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்கு முன் ஜெயலலிதாவோடு இணைந்து நடித்த தேவர் பிலிம்சாரின் ‘தாய்க்குத் தலைமகன்’ படம் 13.1.1967 அன்று, திரையிடப்பட்டது. இப்படம் வெளியாவதற்கு முதல்நாள்தான்; ஆம் 12.1.1967 அன்று இரவுதான் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட, சோகச் செய்தி தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல் பரவியது.

கவலைப்பட்ட ஏழை உள்ளங்கள், எம்.ஜி.ஆர் துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சிக்குக் காங்கிரஸ் இயக்கமே காரணம் என்று கருதியது. அதற்கு ஏற்றாற்போல், காங்கிரஸ் இயக்கத்தை ஆதரித்த தந்தை பெரியாரின், திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளராய்த் திகழ்ந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் அக்காலகட்ட மேடைப் பேச்சுகளும் அமைந்திருந்தன.

இவற்றின் எதிரொலியாக 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் இயக்கம் தமிழக ஆட்சியையே பலி கொடுக்க வேண்டிய பரிதாபத்திற்கு உள்ளானது.

இச்சூழலில் வெளிவந்த ‘தாய்க்குத் தலைமகன்’ படத்தில், எம்.ஜி.ஆர் படங்களுக்கே உரித்தான சமுதாயச் சீர்திருத்தப் பாடலோ, நீதி நெறிகளை உணர்த்தும் பாடலோ ஏனோ இடம் பெறவில்லை.

மகிழ்வு தந்த பாடல்கள்!
‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தில்,

“பர்த்துக் கொண்டது கண்ணுக்குக் கண்ணு!
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு!….”

என்று தொடங்கும் டி.எம்.எஸ். பி. சுசீலா இணைந்து பாடிய பாடல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த பாடல் காட்சிக்குப் பெரும் சுவையைத் சேர்த்த பாடலே எனலாம்.

“கட்டழகன் கண்ண்டி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சட்டு!”

“கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்!
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்!
நானுங்கள் சொந்தமல்லவா!…..”

என்று பி. சுசீலாவின் குரலில் ஒலித்த கவியரசரின் பாடல் வரிகள், அன்றைய கலைச்செல்வி ஜெயலலிதாவே பாடி, எம்.ஜி.ஆரைப் புகழ்வதுபோல் அமைந்திருந்த தன்மை, இரசிகர்களைப் பெரிதும் மகிழவைத்தன என்பது உண்மையே.

ஆராரோ பாட வந்தார்! யார்?
புரட்சித் தலைவர் தமிழகத்தின் தலைமகன். அதனாலதான், தேவர், ‘தாய்க்குத் தலைமகன்’ என்ற பெயரில் புரட்சித் தலைவரை வைத்துப் படமெடுத்தார். அப்படத்தில் புரட்சித்தலைவி பாடுவதாக;

“அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்!
என்னவென்று பாடுவென் கண்ணே! கண்ணே!
எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே!”

என்று தொடங்கும் பாடலைக் கவியரசர் எழுதினார்.

கவியரசரின் வாக்குப் பலிதம் பாருங்கள்! தொட்டிலைத் தாலாட்டும் அன்னையாக ஆகாமலே, தமிழகத்தில் ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ கொண்டு வந்த அன்னையாக ஜெயலலிதா மாறிய விந்தையை….!

இன்னும் தொடரும் இப்பாடலில்,

“தொள்ளு தமிழ்ச் சோலையிலே
தெள்ளித் தெள்ளி அள்ளி வந்த
பிள்ளைத்தமிழ் பாடவா? – கண்ணா! கண்ணா!
பேசும் தமிழ் பேசவா கண்ணா!….”

என்றே துள்ளிவரும் வரிகள், கேட்போர் மனங்களில் இன்பத் தமிழ்ச் சுவையை அள்ளி அள்ளிச் சேர்க்கிறதல்லவா?

இன்று, தமிழகத்தின் தலைமகளாய்த் திகழும் ஜெயலலிதாவை, அன்றே ‘ஆராரோ!’ பாடவைத்து, அன்னையாக்கி, அமுதமாய்த் தமிழ்ச்சுவையை நுகர வைத்த கவியரசரைப் புவியாள்வோர் போற்றத்தானே செய்வர்.

பால்! தமிழ்ப்பால்!
1968 ஆம் ஆண்டில், புரட்சி நடிகர் நடித்த எட்டுப் படங்கள் வெளியாயின. இவற்றுள் கவியரசர் எழுதிய பாடல்கள் ‘ரகசிய போலீஸ் 115, புதிய பூமி ஆகிய இரண்டு படங்களில் இடம் பெற்றன.

ரகசிய போலீஸ் 115 திரைப்படம், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், கண்ணதாசனின் இனிமையான பாடல்களோடு, 11.1.1968 ஆன்று வெளியானது.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.என். நம்பியார், நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.

இப்படத்தில் கவிஞர் எழுதிய ஆறு பாடல்களும் தேனாற்று வெள்ளத்தைப் பெருகச் செய்த பாடல்களே!

“கண்ணே! கனியே! முத்தே! மணியே!
அருகே வா!..”

என்று தொடங்கி, பி.சுசீலா, டி.எம்.எஸ். குரலில் மாறி மாறி ஒலிக்கும் கவிஞரின் பாடலில்;

“கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா!
கனிதரும் வாழையின் கால்கள் பின்ன வா!
செம்மா துளையோ பனியோ மழையோ உன்
சிரித்த முகமென்ன?
சிறு தென்னம்பாளை மின்னல் காற்று வடித்த
சுகமென்ன?
ஒருகோடி முல்லைப்பூ விளையாடும் கலை
என்ன?”

என்றே தொடரும் வரிகளில் வந்து நிற்கும் வளமான சொற்கள் கூடி எழுப்பும் சுவையை என்னவென்று நாம் புகழ்வது….?

இனி…..!

“உன்னை எண்ணி
என்னை மறந்தேன்!….”

என்றே பி. சுசீலாவின் குரலில் எழுந்து வந்த பாடலும் சுவையானதே!

“பால் தமிழ்ப்பால் எனும்
நினைப்பால் இதழ் துடிப்பால்
அதன் தித்திப்பால்
சுவை அறிந்தேன்!”

என்று, டி.எம்.எஸ். பி. சுசீலாவின் குரல்களில் வலம் வரும் பாடல், நம்பால் வந்து, நம் இதயத்தின்பால் இடம் பெறவில்லையா?

இப்படி, மக்கள் திலகத்தின் மனமறிந்து பாடல் வரிகளை வாரி வாரி, வழங்கி, இன்றும் அப்பாடல்களை நம் மனதின்பால் நிற்க வைத்த, தமிழ்ப்பாற்கடலன்றோ கண்ணதாசன்.

இதே படத்தில் புரட்சி நடிகரும், வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்திட்ட பாடல் காட்சிக்காகக் கவிஞர். எழுதி, டி.எம்.எஸ். ஈஸ்வரி இருவரும் இணைந்து பாடிய இணையற்ற பாடலொன்றைப் பாருங்களேன்!

பெண்: “கண்ணில் தெரிகின்ற வானம்
கைகளில் வாராதோ?
துள்ளித் திரிகின்ற மேகம்
தொட்டுத் தழுவாதோ?
கட்டியணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ?

ஆண்: பொன்னழகுப் பெண்முகத்தில்
கண் விழுந்தால் என்னாகும்?
பொன்னாகும்! பூவாகும்! தள்ளாடும்!
செங்கனி மங்கையின் மீது
செவ்வரி வண்டாடும்!….”

பார்தீர்களா?

இப்பாடலை முழுவதும் பாடிப் பாருங்களேன்! பாட முடியாவிட்டால், பாடலைக் கேட்டாவது பாருங்களேன்! இதயங்களை மகிழ்விக்கும் இனிய மெல்லிசையில் மலர்ந்த இதுபோன்ற மேன்மையான பாடல்களை, இன்றைய திரையுலகம் மறந்ததை எண்ணி நம் மனங்களே வேதனை கொள்ளும்.

காவிய வள்ளல்
“சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது…..”

என்று தொடங்கும் பி. சுசீலாவின் குரலில் ஒலித்த பாடல்….பாடல் காட்சியில் நடித்தவரோ கலைச்செல்வி ஜெயலலிதா.

தொடரும் பாடலில், தவழ்ந்து வரும் கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளைப் பாருங்களேன்!

“பட்டுக் கன்னம் தத்தித் தத்தி தவிக்கின்றது!
பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது!”

சரிதானா?

எதிர்பார்த்த உள்ளம்…..

காவிய வள்ளலாம் எம்.ஜி.ஆரைக் கண்டுவிட்டதாம்! உள்ளம் மகிழ்ச்சியில் மகிழ்ந்தாடுதாம்.

இப்படி ஆடும் மங்கைக்கும் காவிய வள்ளலுக்கும் உள்ள பொருத்தம் எப்படியாம்?

கவியரசர் பாடலே சொல்லட்டுமே?

“என்ன பொருத்தம் நமக்குள்
இந்தப் பொருத்தம்!”

சரியான பொருத்தமா?

“என்ன பொருத்தம்?
ஆகா! என்ன பொருத்தம்!
ஆகா! என்ன பொருத்தம்!”

இவ்வாறு, திரும்பத் திரும்பக் கவியரஞர் சொன்ன பொருத்தமே….! புரட்சித்தலைவருக்கும், புரட்சித்தலைவிக்கும் அரசியல் பொருத்தத்தை ஏற்படுத்தி, உறுதிப்படுத்தியது எனலாம்.

சும்மாவா சொல்கிறார்கள்?

‘நல்லவர் நாவில் எழும் வார்த்தை!
நாட்டு நடப்பினில் நடக்கும் வார்த்தை!’

என்றே.

அதுவும் கவியரசர் வாக்கு, புவிமீது பொய்க்குமா? பொய்க்காது!….

இவற்றைச் சொல்லும்போது, சிலர் பத்தாம்சலித்தனம் என்பர்; இன்னும் சிலர் வலிந்து சொல்வது என்பர். எது எப்படியோ? கவியரசர் வாக்கு… புவிமீது பலிக்கும்… பலித்தது என்பது என் போன்றோர் நம்பிக்கை.

எனவே வாதங்களுக்கு வரவேண்டிய கட்டாயம் நம்க்கு வேண்டாம்.

எம்.ஜி.ஆரைக் கேலி செய்த
கண்ணதாசன்!
1975 – ஆம் ஆண்டு, துக்ளக் சோவின் கதை வசனத்தில், இயக்கத்தில் வெளிவந்த படமே, ‘யாருக்கும் வெட்கமில்லை!’ என்ற படம்.

எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த காலம். துக்ளக் சோவோ தி.மு.க, எம்.ஜி.ஆர். தொடங்கிய அண்ணா தி.மு.க, இரண்டும் தமிழகத்தில் வளர்ந்து விடாது, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு மேடைகளில் பேசியும், எழுதியும் வந்தவர். இதே வேகத்தில் நின்றவரே கண்ணதாசன்.

அதனால், ‘யாருக்கும் வெட்கமில்லை’, படத்தில் எம்.ஜி.ஆரைக் கேலி செய்து ஒரு பாடல் காட்சி.

அப்பாடல் காட்சிக்கான பாடலைப் பார்ப்போமே!

“சினிமாவில் வருவது போலே – நீ
சிரித்துக் கொண்டு டூயட் பாடடி!….”

என்று தொடங்கும் பாடலில்,

ஆண்: “அழகிய தமிழ் மகளே!

பெண்: என் அன்பே! கொடை வள்ளலே!

ஆண்: புரட்சித் தலைவி நீயே!

பெண்: என் புதுமைக் கலைஞன் நீயே!
நீ இல்லை என்றால் நான் இல்லை!

ஆண்: அடி நீ அல்லை என்றால் நான் இல்லை!”

என்றெல்லாம் வரிகள் வளர்ந்து வரும்.

எம்.ஜி.ஆரைக் கேலி செய்து கவிஞர் எழுதிய பாடல் வரிகளில் கூட,

‘கொடை வள்ளல்!’ ‘புதுமைக் கலைஞன்!’ என்ற சொற்கள் வந்துதானே நிற்கின்றன.

1990 – ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவை, 1975 – ஆம் ஆண்டே கவிஞரின் பாடல் வரி,

‘புரட்சித்தலைவி நீயே!’

என்று சுட்டுவதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! அப்போது புரியும் அவரது வாக்கின் வலிமை.

ஜெயலலிதா அரசியலுக்கு வராத அக்காலகட்டத்தில், கவியரசரின் எண்ணத்தில் எழுந்து வந்த வார்த்தை, இன்று தமிழகமெங்கும் ஒலிக்கப் பெறுவதை எண்ணிப் பாருங்கள்!

பின்னர், ‘நீ இல்லை என்றால் நான் இல்லை!’ என்ற தொடருக்கு, நீங்களே பதில் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்!

எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவராய்’ அவர் நின்று காத்த இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவியாய்’ ஜெயலலிதா இன்று இருந்து காக்கும் அதிசயம், உங்கள் இதயங்களுக்குள் கவி வாக்கின் பெருமைதனைப் பேசிட வைக்கும் என்பதும் உண்மைதானே!

புதிய பூமியில் தோன்றிய புதுமை!
ஜேயார் மூவிஸ் தயாரிப்பில், ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘ஒளிவிளக்கு’, ஆகிய அருமையான படங்களை இயக்கிய ‘சாணக்யா’ இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், 27.6.1968 அன்று வெளிவந்த படமே ‘புதியபூமி’

இப்படம் தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு விரைந்து வெளியிடப்பட்ட படமாகும்.

இப்படத்தில் எம்.ஜி.ஆர். மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவராக நடித்தார். தென்காசித் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.கழக வேட்பாளர் பெயர் சம்சுதீன் என்ற கதிரவன். எனவே எம்.ஜி.ஆரும் கதிரவன் என்ற பெயரிலேயே படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

படத்தின் வசனத்தை தென்பாண்டிச் சிங்கம், அன்றைய இராமநாதபுரம் மாவட்டத் தி.மு.கழகச் செயலாளர் எஸ்.எஸ். தென்னரசு எழுதினார்.

படத்தின் பாடல்களை எழுதியவரோ கவியரசர் கண்ணதாசன். தேர்தலை மையமாக வைத்துப் பிரச்சாரப் பாடல் ஒன்று தேவை. அதனைக் கவியரசர் எழுதாமல், பூவை செங்குட்டுவனை எழுதுமாறு செய்தார்.

அப்பாடல்தான்,

“நான் உங்கள் வீட்டுப்பிள்ளை!
இது ஊரறிந்த உண்மை!
நான் செல்லுகின்ற பாதை!
பேரறிஞர் காட்டும் பாதை!”

என்ற பிரபலமான பாடலாகும்.

இக்கருத்தமைந்த பாடலை கவியரசர் எழுதாமைக்குக் காரணம்; அவர் பெருந்தலைவர் காமராஜரின் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரும் பற்றுக் கொண்டிருந்தமேயே எனலாம்.

இங்கேதான் கவியரசருக்கும், புரட்சி நடிகருக்கும் இருந்த ஆழமான நட்பு; பரஸ்பரமாக விட்டுக்கொடுக்கும் பாங்கு; கவியரசரின் கவிதைகளுக்குப் புரட்சிநடிகர் தந்த மதிப்பு ஆகிய பெருந்தன்மைகள் வெளிப்படுகின்ற விதங்கள் தெளிவாகின்றன.

கவிசருக்கும், புரட்சிநடிகருக்கும் அவரவர் இயக்கங்கள் தேவை. கலையுலகப் பயணத்திலோ மாறுபடாத மனங்கள் தேவை. எனவே அறிந்து, தெரிந்து செயல்பட வேண்டிய விதங்களில் முடிந்தவரை இருவர் மனங்களும் செயலாற்றிய மேன்மை இங்கே புலப்பட்டன எனலாம்.

இதனைப் ‘புதியபூமி தோன்றுவித்த புதுமை’, என்றுகூடக் கூறலாம்.

படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போமே!

“நெத்தியிலே பொட்டு வச்சேன்!
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்!”

எனத் தொடங்கும் இனிமையான பாடலொன்று, கதாநாயகி கலைச்செல்வி நடித்த பாடல் காட்சிக்காக எழுதப்பெற்றதாகும்.

அடுத்து;

“விழியே! விழியே! உனக்கென்ன வேலை!
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை!…”

எனத் தொடங்கி;

“விருந்து என்றாலும் வரலாம்! வரலாம்!
மருந்து தந்தாலும் தரலாம்! – அதில்
நாளையென்ன நல்ல வேளையென்ன! – இங்கு
நான்கு கண்களும் உறவாட!….”

என்றே, தொடரும் நாயகன் எம்.ஜி.ஆர்; நாயகி ஜெயலலிதா நடிக்கும் காதல் காட்சிக்காகக் கனிந்து வந்த பாடலொன்றாகும்.

இனிவரும் பாடலொன்றைப் பாருங்களேன்!

ஆண்: “சின்னவளை முகம் சிவந்தவளை – நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு!
என்னவளை காதல் சொன்னவளை – நான்
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு!

பெண்: வந்தவளைக் கரம் தந்தவளை – நீ
வளைத்துக் கொள்வாய் வளையிட்டு!
பூங்குவளைக் கண்கள் கொண்டவளைப் – பது
பூப்போல் பூப்போல் தொட்டு!…..”

பாடலைப் பார்த்தீர்களா?

ஏற்கனவே,

“சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் – இந்தச்
சின்னவரைப் போய்க் கேளும்!”

என்று, ‘தனிப்பிறவி’ படத்தில், எம்.ஜி.ஆரைப் பார்த்து ஜெயலலிதா, ‘சின்னவர்’ என்று, கூறுமாறு பாட்டமைத்தார் கண்ணதாசன்.

அதேபோல் சின்னவருக்கு ஏற்ற சின்னவளாக ஜெயலலிதாவை, எம்.ஜி.ரே குறிப்பிட்டுப் பாடுமாறு செய்தவரும் கண்ணதாசனே!

இது எதற்காகக் கவிஞர் எண்ணத்தில் எழுந்ததோ? ஒருவேளை… அந்தச் சின்னவருக்குப்பின், இந்தச் சின்னவளே எம்.ஜி.ஆரின் வாரிசாய் வலம் வருவார் என்ற எண்ணமோ? இதைச் சொன்னால் கூட வலிந்து கூறுவதாக வாதம் செய்வார்கள்! சரி விட்டுவிடுவோம்!

பாடலின் நயத்தைப் பாருங்களேன்!

சின்னவளை – முகம்
சிவந்தவளை
என்னவளை – காதல்
சொன்னவளை!
வந்தவளை – கரம்
தந்தவளை
பூங்குவளை – கண்கள்
கொண்டவளை…..

எத்தனை ‘வளை’ என்னும் சொல்லாடல் மீண்டும் மீண்டும் புதிது புதிதாய்ப் பூத்து வரும் ‘வளை’ கொண்ட பாடல் நம் மனங்களை வசம் செய்து, வாசமும் செய்யுமல்லவா!

இன்னும் பாருங்களேன்!

தூயவளை – நெஞ்சைத்
தொடர்ந்தவளை!
– பால் மழலை மொழி
படித்தவளை!
– வான்மழைபோல்
ஆனவளை! –
நீயவளை –

எனத் தொடரும் ‘வளை’ எனும் சொல் கொண்டு, கவியரசர் நம்மையும் ஏன்? எம்.ஜி.ஆரையும் கவித்திறத்தால் வளைத்து வசியம் செய்திட்ட பாங்கை எப்படித்தான் புகழ்வது!

அதனால்தானோ, சினிமா உலகச் சின்னவர், இந்தச் சிறுகூடற்பட்டிக் கண்ணதாசன் கவிதைகளில் தன் எண்ணத்தைப் பறிகொடுத்து, தமிழக அரசவைக் கவிஞராக ஏற்றி வைத்தாரோ?

எழுபதில் எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா
பெற்ற ஏற்றங்கள்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படமான ‘ஒளிவிளக்கு’, 20.9.1968 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்திலும் கதாநாயகி கலைச்செல்வி ஜெயலலிதாவே.

1969 – ஆம் ஆண்டில் புரட்சிநடிகரின் இரண்டு படங்களே வெளியாயின.

வெளியான அடிமைப்பெண், நம்நாடு ஆகிய இரண்டு படங்களும் திரையுலகில் வெள்ளிவிழாக்களைக் கண்டு பெரும் சரித்திரங்களையே படைத்தன. இவ்விரு படங்களிலும் இன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவே கதாநாயகியாக நடித்துப் பெரும் புகழ் கண்டார்.

அறிஞர் அண்ணாவின் மறைவும், அரசியல் மாற்றங்களும், தி.மு.கழகப் பொருளாளர் என்ற பொறுப்பும், புரட்சி நடிகருக்கு 1969 – ஆம் ஆண்டில், அதிகப் படங்களை வெளியிட இயலாத நிலையை ஏற்படுத்தியது எனலாம்.

1970 – ஆம் ஆண்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஐந்து படங்கள் வெளியாயின. இவற்றுள் எம்.ஜி.ஆருடன் வாணி ஸ்ரீ இணைந்து நடித்த ‘தலைவன்’ என்ற படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.

ஏனைய நான்கு படங்களாம் ‘மாட்டுக்கார வேலன்’, ‘என் அண்ணன்’, ‘தேடிவந்த மாப்பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’, ஆகியவை பெரும் வெற்றிகளைப் பெற்றவையே.

இந்நான்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் கலைச்செல்வி ஜெயலலிதாவே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நான்கில் மேகலா பிக்சர்ஸ் வெளியீடான ‘எங்கள் தங்கம்’ தவிர ஏனைய மூன்று படங்களிலும் பாடல்களை கண்ணதாசன் எழுதினார்.

ஜெயந்தி பிலிம்ஸ் தயாரித்து, ப. நீலகண்டன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையில், கண்ணதாசன் பாடல்களோடு, எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில், ஜெயலலிதா, லட்சுமி ஆகிய இருவரோடு நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ 14.1.1970 அன்று, தமிழர் திருநாளில் வெளியானது.

சென்னையில் ‘மாட்டுக்கார வேலன்’ திரையிடப்பட்ட பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி ஆகிய நான்கு திரையரங்குகளிலும், தொடர்ந்து தினமும் மூன்று காட்சிகளுக்குக் குறையாமல் நூறு நாள்கள் ஓடி சாதனைச் சரித்திரம் படைத்தது.

இத்தகு சாதனைக்குரிய படத்தில், நம் சாதனைக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன.

டி.எம்.எஸ். குரல் கொடுத்து, எம்.ஜி.ஆர் நடித்த பாடல் காட்சிக்காகக் கவிஞர் தந்த பாடல்… ஒன்று… இதோ!….

“ஒரு பக்கம் பாக்குறா!
ஒரு கண்ணெ சாய்க்குறா! – அவ
உதட்டை கடிச்சுக்கிட்டு – மெதுவா
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா!….”

பாடலின் தொடக்கம் கண்டீர்!

நாற்பது வயதை எட்டி நிற்கும் பலருக்கும் பாடல் முழுமையும் நினைவுக்கு வரலாம்… இல்லையெனில் பாடல் காட்சியாவது நினைவுக்கு நிச்சயம் வரலாம்?

அடுத்து…
“தொட்டுக் கொள்ளவா… நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா!
பட்டுக் கொள்ளவா…மெல்லப்
பழகிக் கொள்ளவா!”

என்று தொடங்கி…..

“தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும்போது குலுங்கும் இசை ஆயிரம்”

என்றே வளரும் இனிய பாடலையும் கவியரசர் படைத்திட்டார்.

சத்தியம் நீயே! தர்மத்தாயே!
‘கோமாதா எங்கள் குலமாதா’, எனப் பால் கொடுக்கும் பசுவின் பெருமையைப் பாடிப் புகழ்ந்தவரே கண்ணதாசன்.

அவர்தான் மாட்டுக்கார வேலன் மகிழந்து, பசுவைப் புகழ்ந்து பாடுவதற்காக அருமையான பாடலொன்றை ஆக்கித் தந்தார்.
அப்பாடல்தான்,

“சத்தியம் நீயே! தர்மத்தாயே!
குழந்தை வடிவே! தெய்வ மகளே!
குங்குமக் கலையோடு குலங்காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே!
காலையில் உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள் எங்கள் தமிழ்நாட்டுப்
பெண்ணே!”

இப்படித் தொடங்கும் பாடல்.

இப்பாடல் காட்சியில் ஆரவாரத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தோன்றிடும்போது, திரையரங்குகளில் எழுந்த கரவொலி ஒசைகள், ஆர்ப்பாட்ட ஆனந்தக் காட்சிகள் அப்பப்பா….! அந்தக் காலகட்டங்கள்…. இனி திரையுலகில் திரும்புமா?

இப்பாடல் முழுவதுமே கருத்துகளை அள்ளி அள்ளித் தரும் அழகோ, தனி அழகுதான்! கேளுங்களேன்!

“பால் கொடுப்பாய்! அது தாயாரைக் காட்டும்!
பாசம் வைப்பாய்! அது சேயாகத் தோன்றும்!
அம்மாவை அம்மா என்றழைக்கின்ற சொல்லும்
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ!…..”

கேட்டீர்களா?

என்னே விநோதம்!
‘அன்பான தமிழாம்….

அதற்கு ‘அம்மா!’ என்றழைக்கின்ற சொல்லைத் தந்ததே பால் கொடுக்கும் பாசமுள்ள பசுவாம்!’

இன்னும் பெருக்கெடுத்து வரும் இனிய வரிகளைத்தான் வாசிப்போமே….!

“வளர்த்தவரே உன்னை மறந்துவிட்டாலும்,
அடுத்தவரிடத்தில் கொடுத்துவிட்டாலும்,
வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம்!
வாய் மட்டும் இருந்தால் மொழிபேசும் தெய்வம்”

வாசித்தோம்….!

யோசிப்போம்!

‘நன்றி மறவாத, பேசும் வாய் இல்லாத செல்வம்… அந்தப் பசுவிற்குப் பேசும் வாய் இருந்தால்… அதுவே மொழிபேசும் தெய்வமாம்!’

‘கண்ணதாசா! கருத்துக் கவிக்கடலே! உன்னை எப்படியப்பா தன் எண்ணத்திலிருந்து எம்.ஜி.ஆரால் அகற்ற முடியும்?’ என்றல்லவா இக்கவிஞர், இன்றிருந்தால் நாமும் கேள்விதனைக் கேட்போம்! அப்படித்தானே!

பாடலின் முடிந்த முடிவு!….

“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துன்னைக் காப்பதென் பாடு!”

சரிதானே!

‘நார், இலை, பூ, தண்டு, பழம் என அனைத்தையும் கொடுக்கும் வாழைக்கு ஈடே பசு…. குடும்ப வாழ்க்கை நடத்தும் சம்சாரிக்கு ஒரு பசுவே போதும். பொன்னையே கொட்டிக் கொடுத்தாலும் அந்தப் பசுவுக்கு ஈடாகாது. எனவே அப்பசுவைப் பூப்போல வைத்துக் காப்பதே எனது பாடாகிய உழைப்பின் உயர்வாகும் என்று மாட்டுக்கார வேலனாய் நின்று எம்.ஜி.ஆர். சொல்லும் தத்துவம், என்றைக்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தத்துவந்தானே’.

இந்தத் தத்துவத்தைப் படத்தில் கூறி நின்ற எம்.ஜி.ஆரும்; பாடலில் தந்த கண்ணதாசனும் என்றும் தமிழகத்தின் தத்துவ நாயகர்களே எனில் தவறாகா.

இப்படத்தின் பாடல்களைப் பாடிய டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும், ஒலித்த அவர்களின் குரல்க்ள மூலம் நம் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்பதும் நிஜமே.

நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு!
‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 12.5.1970 அன்று,, ‘என் அண்ணன்’ படம் வெளியாயிற்று.

வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ப. நீலகண்டன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கண்ணதாசனின் கருத்துமிக்கப் பாடல்களோடு, புரட்சி நடிகரும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த இப்படமும் பெரிய வெற்றிப் படமாகவே அமைந்தது.

இப்படத்தின் முதல் பாடலே, கேட்போர் நாடி நரம்புகளையெல்லாம் முறுக்கேற்றி வீரத்தை விளைவிக்கும் பாடலாக அமைந்தது.

அண்ணாசாலை… அங்கே இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போதே தனது செலவில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அண்ணாசிலை.

1969 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாளில் அமரராகிவிட்ட அந்த அண்ணாவை நினைத்து, சிலையைப் பார்த்து, குதிரைவண்டியை ஓட்டிக்கொண்டே வணக்கம் செய்து, எம்.ஜி.ஆர். பாடிவரும் பாடல் காட்சிக்கான பாடலாக அப்பாடல் திகழ்ந்தது.

காலமாற்றத்தில் காங்கிரஸ் இயக்கம் பிளவு கண்டது. கவிஞரோ இந்திராகாந்தியின் தலைமையிலான இந்திரா காங்கிரசில் சேர்ந்தார். அப்போது தி.மு.கழகமும் இந்திரா காங்கிரசோடு உறவு கொண்டிருந்தது. அறிஞர் அண்ணாவின் மீதும் மனதின் அடித்தளத்தில் மாறாத பாசங்கொண்டிருந்த கவியரசர் இச்சூழ்நிலையில், தி.மு.கழகத்தின் பொருளாளராய் வீற்றிருந்த எம்.ஜி.ஆருக்காக, வீரநடை போட்டு எழுதிய விவேகம் செறிந்த வேகப்பாடலே அது…! எது என்பீர்! கேளுங்களேன்!

“நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு! ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா! – நீ
ஆற்றுவெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!”

எப்படி இருக்கிறது. தொடக்கமே? கேட்டீர்களா?

‘நெஞ்சம் இருக்கிறது! அதிலே நேர்மையும் இருக்கிறது! வெற்றிக்கு உரிய நேரமோ காத்திருக்கிறது! அப்புறம் ஏன் பிறர் பால் அஞ்சி அஞ்சி, கெஞ்சி கெஞ்சி வாழ வேண்டும்? அஞ்சி வாழ்ந்ததும் போதும்! ராஜா! நீ காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுபோல் எழுந்து ஓடு!’ என்றல்லவா எம்.ஜி.ஆர். வீர முழக்கமிடுகிறார்.

அற்புதமான புரட்சிப் பாடலின் அடுத்த வரிகள்!….இதோ!

“அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? – தினம்
அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டுகண்டு பயம் எதற்கு? – நீ
கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு….

எப்படிப்பட்ட வினாக்கள்? எம்.ஜி.ஆர்.. எழுப்புவன? நியாயந்தானே!

‘அடிமைப்பட்டு உயிர் சுமக்கும் உடம்பிற்கு இரத்தமும்; நாளும் அச்சப்பட்டு வாழும் கோழைக்குக் குடும்ப வாழ்க்கையும் எதற்காம்? கொடுஞ்செயல்களைக் கண்டு கண்டு பயப்படுதலும் எதற்காம்?

மனிதா! நீ பிறக்கும்போது கொண்டு வந்ததுதான் என்ன? தொலைந்து போவதற்கு என்ன இருக்கிறது? நீ தைரியமாக மீசையை முறுக்கு!’ இத்தகு புரட்சி வினாக்களை எழுப்பி, வீரம் விளைவிக்கும் விதைகளை யாரால் தூவ முடியும்? எம்.ஜி.ஆரால் தான் முடியும்! அதைப் பார்வையிட்டுப் பக்குவமாய்ப் பாடல் எழுதித்தரக் கண்ணதாசனால்தான் முடியும்! அப்படித்தானே!

இன்னும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேளீர்!

“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி – அதன்
அருகினில் ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகென்று பெயருமிட்டால் – இந்த
பூமி சிரிக்கும்! அந்த சாமி சிரிக்கும்!”

அதிரும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேட்டீர்களா?

‘உயர்ந்து நிற்கும் வானளாவிய மாகளிகைகள்! அதன் ஓரங்களில் ஓசை குடிசைகள்! இப்படி இருப்பதுதானா பொன்னான உலகம்? இப்படிப் பெயரிட்டு அழைத்தால் இந்த பூமி மக்கள் சிரிக்க மாட்டார்களா? பூமியைப் படைத்த அந்த ஆண்டவனாம் சாமி சிரிக்கமாட்டானா?’

இவற்றிற்கெல்லாம் விடைகள்! யார் தருவது?

விடைகள் தரப் புறப்பட்டு வரும் கவியரசர் வரிகள் இதோ! எம்.ஜி.ஆர். என்ற புரட்சித் தலைவர் மூலம் புவிவாழ் மக்களுக்குப் புலப்படுத்தப்படுவதைக் காணீர்!

“உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு! – இங்கு
உன்னைவிட்டால் பூமி ஏது? கவலை விடு!
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து! – அதில்
நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து!”

விடைகளைக் கண்டீர்களா?

‘உறுதிகொண்ட நெஞ்சம் உள்ள இளைஞனே! உன் நாட்டில் எல்லாம் உண்டு என்ற நம்பிக்கையில் உன் காலை முன்வைத்து முன்னேறு! நீதானே இந்த பூமியின் ராஜா! உன்னைப் போன்ற இளைஞர்களை விட்டுவிட்டு இந்த பூமி இயங்க முடியுமா? எனவே கவலையை விட்டுவிடு!

வெற்றியா? தோல்வியா? இந்த இரண்டில் ஒன்றைப் பார்ப்பதற்கு நீ தோளை நிமிர்த்து! நீதியே உன்னைத் தேடி வந்து வெற்றி மாலையைச்சூட்டும்!’

எல்லாம் சரிதான்! கவிஞர், புரட்சித் தலைவர் இருவரும் கூடி, இறுதியில் சொல்லும் விடை எங்கோ இடிப்பதுபோல் உள்ளதே? என்பீர்கள்!

ஆமாம்! கவிஞர் ஆவேசமுடன் தீட்டிய வரி, சென்சாரில் மாட்டி, படத்தில் எம்.ஜி.ஆரால் எடுத்துச் சொல்ல முடியாமல் மாற்றம் பெற்றுவிட்டதுதான் உண்மை.

அந்த ஈற்றடி இதுதான்….!

“நீதி வரவில்லை எனில் வாளை உயர்த்து!” என்பதே.

இப்போது சரிதானே! உண்மை உழைப்பு! உயர் தியாகம்! இவற்றிற்கெல்லாம் நீதி கிட்டாவிடில் வாளை உயர்த்த வேண்டியது தானே! வெட்ட வேண்டிய தீமைகளை வேரறுக்க வேண்டியது தானே! இப்போது விடை சரிதானே!

மனசாட்சி! அரசாட்சி!
மக்கள் திலகம் மந்திரச் சொற்களுக்குக் கட்டுப்பட்ட மக்கள்தானே, பலரது மனக்கோட்டைகளுயும் தகர்த்தெறிறிந்துவிட்டு அவரை செயின்ட்ஜார்ஜ் கோட்டையிலே முதல்வர் ஆசனத்தில் அமர வைத்தனர்.

அத்தகு மாமனிதர் சொல்லக்கூடிய சொல் நயங்களை, கவியரசர் கவிநயத்தில் கேட்போமா!

“கடவுள் ஏன் கல்லானான்? – மனம்
கல்லாய்ப் போன மனதர்களாலே!”

கல்லாய்ப் போன மனித மனதைப் பார்த்துத்தான் கடவுளே கல்லாகி விட்டானா? இதுவென்ன நியாயம்? பொறுத்துப் பார்ப்போம்!

“கொடுமையைக் கண்டவன் கண்ணை இழ்ந்தான்! – அதைக்
கோபித்துத் தடுத்தவன் சொல்லை இழந்தான்!
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்! – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!”

நியாயங்களை மீறிய அநியாயப் பட்டியல் பாரீர்!

கொடுமையைக் கண்டவனுக்கோ
கண்கள் போயின!
கொடுமைகளைக் கோபித்துத் தடுத்தவனுக்கோ
பேசும் சக்தி போயின!
இரக்கத்தை இதயத்தால் நினைத்தவனுக்கோ
பொன்பொருள் போயின!

இவை கூடப் பரவாயில்லை! இந்தப் பூமியில் எல்லோர்க்கும் நல்லவனாய் இருந்தவனோ தன்னையே இழந்து போனான்!’

இத்தனைக்கும் காரணங்கள்!…..

“நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி – அது
நீதிதேவனின் அரசாட்சி!
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி – மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி!”

காரணங்கள் புரியாத புதிரானதோ?

‘நெஞ்சுக்குத் தேவை மனசாட்சிதான்! அந்த மனசாட்சியே நீதிதேவனின் அரசாட்சியாம்! உலகில் நடக்கும் அனைத்து உண்மைகளுக்கும் அவனே, ஆம்! அந்த நீதிதேவனே சாட்சி!

ஆனால் மக்கள் அரங்கத்திற்கு வராதாம் அந்த நீதிதேவனின் சாட்சி!

அப்புறம் மனசாட்சி ஏன்? நீதிதேவனின் அரசாட்சி ஏன்? அந்த நீதி தேவனின் சாட்சிதான் ஏன்? ஏன்?

இனியென்ன பாக்கியோ?

“சதிச்செயல் புரிந்தவன் புத்திசாலி – அதைச்
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்!….”

அடப் பாவமே!

‘உலகில் சதிச்செயல்களைப் புரிந்தவன் புத்திசாலி! அந்தச் சதிச் செயல்களைச் சகித்துக் கொண்டிருந்தவனோ குற்றவாளி! உண்மையைச் சொல்பவனோ சதிகாரன்!’

இதுவெல்லாம் யார்வகுத்த அதிகாரமாம்! உலகத்தில் ஆண்டவன் வகுத்த அதிகாரமாம்!

அப்படியானால் அந்த ஆண்டவனாம் கடவுள், கல்லானது சரியோ? கல்மனத்தவர் செய்த செயலுக்காக அவனை நோவதில் என்ன இலாபம்?

இத்தகு உலகநீதியைச் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்காட்சியைக் கண்டு உள்ளம் உருகியோர் ஏராளம்! ஏராளம்!!

புரட்சித்தலைவர் நடித்த ‘என் அண்ணன்’ படத்திற்காகக் கவியரசர் எழுதிய எல்லாப் பாடல்களும் மக்களின் இரசனையைப் பெற்ற பாடல்களே.

இந்தப் படத்திற்குத்தான் முதன்முதலாக நூற்றுயெட்டடி கட்டவுட் சென்னை மாநகரில் வைக்கப்பெற்றதென்பதும் திரைப்பட வரலாற்றில் ஓர் சாதனையே எனலாம்.

இப்படத்திற்காகக் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் மிக நீளமான பாடல் ஒன்று உண்டு. அப்பாடல் எம்.ஜி.ஆர். என்ற மனிதசக்தியை, அவர் பார்த்த பார்வையில் உருவான பாடல் என்றே சொல்லலாம்!

பாடலைப் பார்க்க நாம் புறப்படலாமே!

“நொந்தி கணபதிக்கும் சுப்பிரமணியனுக்கும்
அந்தப் பரமனுக்கும் ஜோடி….ஜோடி!….”

என்று தொடங்கும் பாடல்,

எம்.ஜி.ஆரைக் கண்ணதாசன் படம்பிடித்துப் பார்த்த பார்வைக்குச் சிறந்த மேற்கோளே இப்பாடல் எனலாம்.

இப்பாடலை முழுமையாகப் படித்துப் பாருங்கள். கருத்துச் செறிவான இப்பாடலுக்கு முழு விளக்கங்கள் கண்டால் இங்கு பக்கங்கள் நீளும்.

நன்றி: Puratchi Thalaival DR.MGR http://www.noolulagam.com