கவிஞரைச் சாடிய வாலி
எம்.ஜி.ஆரின் அன்பு கடாட்சத்திற்குத் தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்ட கவிஞர் வாலி, செப்டம்பர் 1963-ல் வந்த பேசும் படம் இதழில் “கவிதையில் ஒரு கலைஞர்” என்ற கவிதையை வடித்தார் வாலி.
“மின்னல் வேகத்தில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளங்கவிஞர் வாலி மக்கள் திலகத்தைப் பற்றி எழுதிய கவிதை” என்ற அறிவிப்புடன் வந்தது அது.
வங்கக் கடல் கடைந்த செங்கதிர் வண்ணம் போல்
சிங்கத் திருமுகம் செவ்விதழில் புன்சிரிப்பு!
வெள்ளம்போல் கருணை, வள்ளல் போல் வடிவம்
என்று எழுதுவதற்கு முன் ..
பாமலைப் பாடியிவன் பெருமைகளைப் பேசுகையில்
காமலைக் கண்கள் என்னை காக்காய் எனத் தூற்றும்!
நாய்க் குரைத்தால் நாய்க்குத்தான் வாய் வலிக்கும் தெரியாதா?
நேற்றுவரை போற்றுவதும், போற்றிப் பின் தூற்றுவதும்
காற்றடிக்கும் திசை மாறும் காற்றாடி குணம் கொண்டு
நாவிதன் கத்தியென நாவைப் புரட்டுவோர்
காவியக் கவிஞரென கொலுவிருக்கக் கண்டதுண்டு!
அதுபோல வரவில்லை, அவதூறும் பெறவில்லை! ..
எம்.ஜி.ஆருக்கு புகழ் மாலை மட்டுமல்ல, கண்ணதாசனுக்கு சாட்டையடி போல் ஒலிக்கும் வரிகள்.
(வாமனன் எழுதிய “டி.எம்.எஸ். – ஒரு பண்பாட்டு சரித்திரம்” என்ற நூலிலிருந்து)