கவியரங்கமொன்றில் கண்னதாசன் பாடிய தமிழ் வாழ்த்து
கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!
நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ!
தனைப் புகழ் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே என் தாயே நின் பாதம் போற்றி
நினைப்பில் எழும் அத்தனையும் வடிவம் இன்றி
நிழலாகத் தோன்றிடினும் சிறிய நெஞ்சின்
நினைப்பினுக்கு மதிப்பீந்து வாழ்த்தாய் உன்
நிழல் கண்ட நானும் உன்னை வணங்குகின்றேன்!