Posts from the ‘நினைவாஞ்சலி’ Category

5 ஆயிரம் பாடல்கள் எழுதிய கண்ணதாசன்

தமிழ்த்திரைப் படங்களுக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கருத்தாழம் மிக்கப் பாடல்கள் எழுதி சாதனை படைத்தவர், கவியரசர் கண்ணதாசன்.

சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தார். கண்ணதாசன் 1927-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் சாத்தப்ப செட்டியார். தாயார் விசாலாட்சி ஆச்சி.

இந்த தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழந்தைகள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. கண்ணம்மை, 2. ஞானாம்பாள், 3. முத்தாத்தாள், 4. காந்திமதி, 5. கண்ணப்பன், 6. ஏ.எல்.சீனிவாசன், 7. சொர்ணம்பாள், 8. முத்தையா (கண்ணதாசன்), 9. சிவகாமி.

9 குழந்தைகள் பிறந்த காரணத்தால், சாத்தப்ப செட்டியார் ஏழ்மையில் வாழ்ந்தார். முதல் இரண்டு மகள்களுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தார். செட்டி நாட்டில், அதிக பிள்ளைகள் உடையவர்கள், குழந்தை இல்லாத உறவினர்களுக்கு, குழந்தைகளை சுவீகாரம் செய்து கொடுப்பது வழக்கம். தனது ஐந்தாவது மகன் கண்ணப்பனையும், ஆறாவது மகன் ஏ.எல்.சீனிவாசனையும் பங்காளிகளுக்கு சுவீகாரம் செய்த கொடுப்பதற்கு சாத்தப்ப செட்டியார் ஏற்பாடு செய்தார்.

அப்போது ஏ.எல்.சீனிவாசன் நோஞ்சானாக இருந்தார். பெற்றோரைப் பிரிய மனமின்றி அழுதார். அதனால், முத்தையா (கண்ணதாசன்), ‘அண்ணனுக்கு பதில் நான் சுவீகாரமாகச் செல்கிறேன்’ என்று முன்வந்தார். அவர், முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார், சிகப்பி ஆச்சி தம்பதிகளுக்கு தத்துப்பிள்ளையாகச் சென்றார். இப்படி சுவீகாரம் சென்ற முறையில் காரைக்குடி ‘கம்பன் அடிப்பொடி’ சா.கணேசன், கண்ணதாசனுக்கு தாய்மாமன் ஆனார். (தத்து கொடுக்கப்பட்ட கண்ணதாசனின் அண்ணன் கண்ணப்பனின் மகன்தான் பஞ்சு அருணாசலம். இவர் பிற்காலத்தில் கண்ணதாசனுக்கு உதவியாளராக இருந்து, பல படங்களுக்கு கதை- வசன ஆசிரியராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.)

கண்ணதாசனுக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. பின்னர் கவிதைகள் எழுதத் தொடங்கும்போது, அவர் கண்ணதாசன் என்ற புனை பெயரை சூட்டிக்கொண்டார். அந்தப் பெயரே நிரந்தரமாக நிலைத்துவிட்டது. கண்ணதாசன் காரைக்குடி அருகில் உள்ள அமராவதிப் புதூரில் இருக்கும் குருகுலம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பிறகு படிக்க வசதி இன்றி தனது 17-வது வயதில் படிப்பை நிறுத்தினார். அவர் படிக்கும்போது பள்ளியின் ஆசிரியராக இருந்தவர், ‘நீ உருப்படமாட்டாய்’ என்று அடிக்கடி சொல்லி இருக்கிறார்.

‘அவர் சொன்னதின் பலனாகத்தானோ என்னவோ நான் உயர்ந்த நிலையில் இருக்கிறேன்’ என்று கண்ணதாசன் பிற்காலத்தில் கூட்டங்களில் பேசும்போது குறிப்பிடுவார். 1944-ம் ஆண்டில் புதுக்கோட்டையில் இயங்கி வந்த ‘திருமகள்’ பத்திரிகை ஆசிரியராக பொறுப்பு ஏற்றார். அவருக்கு வயது 17தான். கண்ணதாசன் எழுதிய கவிதைகள் அதில் பிரசுரமாயின. 1945-ல் ‘திரை ஒளி’ பத்திரிகையின் ஆசிரியரானார், கண்ணதாசன். பிறகு அங்கிருந்து விலகி, 1947-ல் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய ‘சண்ட மாருதம்’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார்.

‘சண்ட மாருதம்’ ஆசிரியராக இருந்தபோது மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசன் இடம் பெற்றார். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மந்திரிகுமாரி’ படத்துக்கு வசனம் எழுத மு.கருணாநிதி வந்தார். கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இந்தக் காலக்கட்டத்தில், திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருணாநிதி விளங்கினார். கண்ணதாசனுக்கும், திராவிட இயக்கத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதவேண்டும் என்று கண்ணதாசன் விரும்பினார்.

‘சண்டமாருதம்’ பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து வந்தால் பாடல் ஆசிரியர் ஆக முன்னேற முடியாது என்று கண்ணதாசன் கருதினார். எனவே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கோவை சென்றார். அங்கு ஜுபிடர் நிறுவனம், கேமரா மேதை கே.ராம்நாத் டைரக்ஷனில் ‘கன்னியின் காதலி’ என்ற படத்தைத் தயாரித்து வந்தது. ஜுபிடரின் மானேஜராக இருந்த வெங்கடசாமி (நடிகை யூ.ஆர்.ஜீவரத்தினத்தின் கணவர்) சிபாரிசின் பேரில், அந்தப் படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது.

‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே’ என்ற பாடலை எழுதிக்கொண்டு போய், டைரக்டர் ராம்நாத்திடம் கொடுத்தார், கண்ணதாசன். பாடல் டைரக்டருக்கு பிடித்து விட்டது. அந்தப் பாடலை, கதாநாயகி மாதுரிதேவிக்காக டி.வி.ரத்னம் பாடினார். கண்ணதாசனின் முதல் பாடலே ‘ஹிட்’ ஆகியது. கல்கத்தாவில் தேவகி போஸ் என்ற பிரபல டைரக்டர் இருந்தார். அவர் வங்க மொழியில் தயாரித்த ‘ரத்ன தீபம்’ என்ற படத்தை தமிழில் ‘டப்’ செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது. அவர் கல்கத்தாவுக்குச் சென்று, வசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பினார். 1953-ல் தி.மு.கழகம் நடத்திய டால்மியாபுரம் போராட்டத்தில் கண்ணதாசன் கலந்து கொண்டார். அவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் ‘தென்றல்’ என்ற வாரப் பத்திரிகையை தொடங்கினார். அதில் கண்ணதாசன் எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும் அவருக்கு புகழ் தேடித்தந்தன. 1954-ல் நேஷனல் புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனி, ஆங்கிலப்படம் ஒன்றின் கதையை தழுவி ‘அம்மையப்பன்’ என்ற படத்தை தயாரித்தது.

சரித்திரப் பின்னணியுடன் இதன் திரைக்கதை- வசனத்தை கருணாநிதி எழுதினார். இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா ஜோடியாக நடித்தனர். ஏ.பீம்சிங் டைரக்ட் செய்தார். இதே கதையை மாடர்ன் தியேட்டர்சார் ‘சுகம் எங்கே’ என்ற பெயரில் சமூகப் படமாகத் தயாரித்தார்கள். கே.ஆர். ராமசாமி, சாவித்திரி நடித்த இப்படத்தை கே.ராம்நாத் டைரக்ட் செய்தார். வசனத்தை கண்ணதாசனும், ஏ.கே. வேலனும் எழுதினார்கள்.

நன்றி மாலை மலர்

வெள்ளிக்கிழமை, ஜனவரி 20

நேருவை நினைவுறுத்தும் பாடல் – இளையராஜா

நேரு மறைந்தபோது எழுதிய கண்ணதாசனின் கண்ணீர் அஞ்சலி – இளையராஜாவின் குரலில்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்

சீரிய நெற்றி எங்கே
சிவந்தநல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை போன தெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே!

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரியவிட்டார்
தீயசொல் சொல்லா வாயைத்
தீயிலே கருகவிட்டார்!

வேறு

பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்துவிட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்கிளியைக் கலங்கவிட்டுத்
தாய்க்கிளியைக் கொன்றுவிட்டான்

சாவே உனக்குகொருநாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ!
தீயே உனக்கொருநாள்
தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும் நாம்
தேம்பி அழ வையோமோ!
யாரிடத்துப் போயுரைப்போம்!
யார்மொழியில் அமைதிகொள்வோம்?
யார்துணையில் வாழ்ந்திருப்போம்?
யார்நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம்பறித்த
வேதனே எம்மையும் நீ
ஊரோடு கொண்டுசென்றால்
உயிர்வாதை எமகில்லையே…
நீரோடும் கண்களுக்கு

நிம்மதியை யார்தருவார்?
நேருஇல்லா பாரதத்தை
நினைவில் யார் வைத்திருப்பார்?
ஐயையோ! காலமே!
ஆண்டவனே! எங்கள்துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே!

கைகொடுத்த நாயகனைக்
கண்மூட வைத்தாயே
கண்கொடுத்த காவலனைக்
கண்மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா
கனவா கதையா
கற்பனையா அம்மம்மா…

நேருவா மறைந்தார்; இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணம் இல்லை!
இருக்கின்றார் நேரு
இங்கேதான் இங்கேதான்
எம்முயிரில், இரத்தத்தில்,
இதயத்தில், நரம்புகளில்,
கண்ணில், செவியில்,
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவர்
எமைவிட்டுச் செல்வதில்லை!
என்றும் அவர் பெயரை
எம்முடணே வைத்திருப்போம்

அம்மா…அம்மா….அம்மா…..!

இரங்கல் கவிதை

vaali

கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !

நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள்
உன்னால் –
திவ்வியப் பிரபந்தங்களாயின !

படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !

கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
 
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !

கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
 
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல –
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..

எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

– கவிஞர் வாலி
(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை}

நினைவாஞ்சலி

Karunanidhi

என் இனிய நண்பா !
இளவேனிற் கவிதைகளால்
இதயசுகம் தந்தவனே! உன்
இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ ! – என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ ! – உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரைமட்டம் ஆக்கிவிட்டதே !

கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ !
கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட !
இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ
தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை !
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்
சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;

தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
அடடா! இந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!

ஆயிரங்காலத்துப் பயிர் – நம்
தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார் !
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்

நிலையில்லா மனம் உனக்கு ! – ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு !

இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள் !

என் நண்பா !

இனிய தோழா !

எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள் !
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா ?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய் !

– கலைஞர் மு. கருணாநிதி

இரங்கற்பா

கண்ணதாசன்

எத்தனையோ பேர்களுக்கு இரங்கற்பா எழுதிய கவிஞன், மறைவதற்கு 12 ஆண்டுகட்கு முன்னர் தனக்குத்தானே எழுதிக் கொண்ட இரங்கற்பா.

தேனார் செந்தமிழமுதைத்
திகட்டாமல் செய்தவன்
மெய் தீயில் வேக
போனாற் போகட்டுமெனப்
பொழிந்த திரு
வாய் தீயிற் புகைந்து போக
மானார் தம் முத்தமொடும்
மதுக் கோப்பை
மாந்தியவன் மறைந்து போக
தானே எந் தமிழினிமேல்
தடம் பார்த்துப்
போகுமிடம் தனிமைதானே!
கூற்றுவன் தன் அழைப்பிதழைக்
கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
நீ எரிவதிலும்
அவன் பாட்டை
எழுந்து பாடு

– கண்ணதாசன்

இசைப்பாடல் அரியாசனம்

mumetha கவிஞர் மு. மேத்தா

துடி துடிக்கும்
இதயங்களோடு நீங்கள்
கூடியிருப்பது
நின்று விட்ட
அந்த இதயத்திற்கு
நினைவாஞ்சலி செலுத்தவோ?

வீதியெலாம்
வெடி வெடித்து
வருடந்தோறும் – தன்
வருகையைத்
தெரிவித்துக் கொள்கிற
தீபாவளி

இந்த வருடந்தான்
எங்கள்
இதயத்தில் வெடிவெடித்துத்
தன் வருகையை
எடுத்துரைத்தது!

கவிஞர் கண்ணதாசன் மறைந்த நான்கைந்து நாட்களில் ஏ.எல்.எஸ். நிறுவனத்தின் சார்பில் திரு.கண்ணப்பன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கவியரங்கத்தில் நான் படித்த வரிகள் இவை.

கவிஞர் கண்ணதாசனை முதன்முதலாகச் சந்தித்தபோது அவருடைய தலைமையில் நடந்த கவியரங்கில் கவிதை பாடிக் கொண்டிருந்தேன். நான் படித்த கவிதையின் தலைப்பு: “இளைஞர்களே விழித்தெழுவீர்!”

அவரை நான் கடைசியாகச் சந்தித்ததும் அவருடைய தலைமையில் நடந்த ஒரு கவியரங்கத்தில் கலந்து கொண்ட போதுதான் . அப்போது நான் படித்த கவிதையின் தலைப்பு” “பிரிவு!”

கண்களைப் பிழிந்து கொள்ளும்படி கவிஞரின் பிரிவு நிகழப் போகிறதென்பது அப்போது எனக்குத் தெரியுமா?

1964-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்த் தேசிய கட்சி தொடங்கப்பட்டிருந்த சமயம். ‘தும்பைப் பூப் போன்ற ஆடை; தூய்மையே நிறைந்த நெஞ்சம்; வம்புசெய் கூட்டத்திற்கு வாள் இவன்; நமக்குத் தென்றல்; சம்பத்துத் தலைவன்’ என்று நான் அந்த வயதிலேயே பாடிப் பாராட்டிய சொல்லின் செல்வர் சம்பத் அவர்களும் கவிஞரும் மதுரை வந்திருந்தனர்.

என் அன்பிற்குரிய அண்ணன் ப. நெடுமாறன் அவர்கள் அப்போது கவிஞருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

பதினெட்டு வயதில் அந்தப் பாட்டுச் சிகரத்தின் பக்கத்தில் நின்று ‘இளைஞர்களே விழித்தெழுவீர்’ என்று முழங்கும் இனிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிஞருடைய காதுகளில் என் கவிதையும், கண்களில் நானும் புகுந்துக் கொண்ட பொன்னான பொழுது அது.

மதுரை வரும் போதெல்லாம் மிட்லண்ட் ஹோட்டலில் அவர் தங்குவார்.

தியாகராசர் கல்லூரியில் நான் படித்த நாட்களில் நந்தவன நாட்கள் அவை!

கவிஞரின் வருகையை அறிந்துக் கொண்டு நானும் என் நண்பர்களும் கூட்டமாகச் சென்று அந்தக் குயிலை முற்றுகையிடுவோம். அந்தச் சிவப்புக் குயில் எங்களுடன் சிநேகமாகப் பேசிக் கொண்டிருக்கும்.

வார்த்தைகள் வாயிலிருந்து வருவதில்லை. மனசிலிருந்து வந்துகொண்டிருக்கும்.

கவிஞருடைய கம்பீரமான அந்த அழகிய தோற்றத்தின்மீது எனக்கொரு மயக்கம் இருந்து கொண்டே இருந்தது. எத்தனை பெரிய சபையையும் ஈடு செய்கிற நிறைவான தோற்றம் அது. சின்ன உருவத்துடன் சிரமப்பட்டு – பெரிய பெரிய சபைகளை பிரகாசிக்க வைத்துக்  கொண்டிருப்பவர்களெல்லாம். கவிஞரைப் போன்ற ஆஜானுபாகுவான தோற்றம் தமக்கு அமையவில்லையே என்று வருந்துவது இயல்பானதுதான்!

கவிஞரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், மனநிலை சரியில்லாமல் இருந்தாலும், அண்ணன் இராம. கண்ணப்பன் அவர்கள், “மேத்தா வந்திருக்கிறார்” என்று அவரிடம் சொல்லும்போது, கவிஞருடைய முகத்தில் ஒரு முறுவல் மலரும், அவருடைய பேச்சில் ஒரு பிரகாசம் தெரியும்.

கோவையில் நான் இருந்தபோது சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்தேன். நண்பர் ஒருவருடன் கவிஞருடன் வீட்டுக்குச் சென்றேன். கவிஞர் அப்போது ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.

அற்புதமான காவியம் ஒன்றினை அவர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் – “உண்மைதான் மேத்தா! எனக்கும் அது உறுத்திக்கொண்டே இருக்கிறது. விரைவில் எழுத வேண்டும்” என்று கூறினார்.

ஆனால் – அவருடைய காலத்தின் பெரும்பகுதி அற்ப அரசியலிலும், மது, மாது, என்ற சொற்ப சுகங்களிலும் கரைந்து மறைந்தது.

அவன்
மதுக்குவளைகளில் தன்
முகம் பார்த்துக் கொண்டான்.
நல்ல தமிழ்க் கவிதைகளில் – தன்
நடை பார்த்துக் கொண்டான்.
இளைய மயில்களிடம்
எடை பார்த்துக் கொண்டான்.

என்று அவரைப்பற்றி நான் எண்ணிப் பார்க்குமாறு நேர்ந்தது.

கவிஞரின் பலம் எதுவோ அதைப் பின்பற்றாமல் அவருடைய பலவீனத்தை மட்டும் பின்பற்ற, ஈசல் இறகுகளாய் உதிர்ந்த, உதிர்கிற இளைஞர்களுக்காக நான் இப்போதும் அனுதாபப்படுகிறேன்.

நல்ல மனிதனாக இல்லாதவன் நிச்சயமாக ஒரு நல்ல கவிஞனாக இருக்க முடியாது.

நல்ல மனிதனாக இல்லாத ஒருவன் அருமையான கவிஞன் என்று புகழ் பெறுவானேயானால் – ஒன்று அவனைப் பற்றிய அபிப்பிராயம் பொய்யாக இருக்க வேண்டும்; அல்லது அவனுடைய கவிதை பொய்யாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய சித்தாந்தம்.

ஒரு நதியைப் போல
அடிக்கடி தன் பாதைகளை
மாற்றிக் கொண்டான் – ஆனாலும்
அவனுடைய இதயத்தின் அடித்தளதில்
ஈர நீரோட்டம்
இருந்துக் கொண்டே இருந்தது

என்று நான் எழுதியது கவிஞரைப் பற்றி உணர்ந்து புகழ்ந்த உண்மையாகும்.

கவிஞரின் அடக்கமும், எளிமையும், அகங்காரமற்ற தன்னம்பிக்கையும், யாரையும் நேசிக்கிற இயல்பும் என்னைப் போன்றவர்களைக் கவர்ந்த இனிய பண்புகளாகும்.

திரைத்திறையில் கவிஞருடைய சாதனை அபூர்வமானது. அவரைப் போலவே ஆணவமில்லாத எளிமையான அவருடைய பாடல்கள், தமிழ் மக்களின் மனசுகளில் சிறகடிக்கும் மாடப் புறாக்களாயின.

ஒவ்வொருவனும் தன் உள்ளத்து உணர்வுகளின் எதிரொலியைக் கவிஞருடைய எளிமையான பாட்டு வரிகளில் கேட்டுக் கொண்டான்.

வார்த்தைகளைச் சீவிச் சிங்காரிப்பதிலேயே காலம் கடத்திக் கொண்டிருந்தால், உணர்வுகள் அதுவரைக்கும் உட்கார்ந்திருக்குமா? ஓடிப் போய் விடாதா?

எனவே, கவிஞர், சொற்களுக்குள் மூழ்கி சுகம் காண்பது எக்காலம்? என்று சொக்கிப் போகாமல், மன உணர்வுகளை வார்த்தைகளில் வடித்தெடுத்தார். “எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது. எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது” என்று இதயத்தின் ஏக்கங்களையெல்லாம் மிக எளிமையான சொற்களில் படம் பிடித்தார்.

திரைப்படப் பாடல்களில் கவிஞருக்கு இருக்கும் இடத்தை எளிதாக அடைய எவராலும் இயலாது. கவிஞர் மறைந்த நான்கைந்து நாட்களில் ஏ.எல்.எஸ்.நிறுவனம் நடத்திய இரங்கல் கவியரங்கத்தில், கவிஞர் மறைவிற்குப் பின் என்ன நடக்கும் என்பதை இப்படிப் படம் பிடித்தேன்:

இன்னும்சில கவிவாணர்
இதுநல்ல வாய்ப்பென்று
இடம்பிடிக்க எழுந்துவரலாம்!

இதயத்தில் ஒட்டாமல்
இதழொட்டும் விதங்களிலே
கவிதைகளைக் கொண்டுதரலாம்!

பின்னணியும் விளம்பரமும்
பெருங்கைகள் தூக்கிவிடும்
பின்பலமும் வெற்றி பெறலாம்!

இனியொருவர் தனியாக
நிரப்பிவிட முடியாத
இசைப்பாடல் அரியாசனம்!”

பேதையரின் வீதிகளில்
போதைகளத் தோறுவித்துப்
பெயரோடு புகழும்பெறலாம்!

என்னதான் கவிவாணர்
எழுந்தாலும் நடந்தாலும் – நீ
இருந்த உன்சிம்மாசனம்

– கவிஞர் மு. மேத்தா

எங்கள் தமிழ்ச் சங்கம் கலைந்து விட்டது

kannadasan-funeral1

(கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது கவிஞர் வைரமுத்து எழுதியது)

ஒரு
தேவகானம்
முடிந்து விட்டது

எங்கள்
தமிழ்ச்சங்கம்
கலைந்து விட்டது

சரஸ்வதியின்
வீணையில்
ஆனந்த நரம்பொன்று
அறுந்து விட்டது

அந்த விமானத்தில்
எங்கள் ராஜ குயிலின்
கூடுமட்டுமே
கொண்டு வரப்படுகிறது

வார்த்தைக்கு ருசிதந்த
வரகவியே

உன்னை
வரவேற்கக் காத்திருந்த
வர்ணமாலைகளை
உன்
சடலத்தின்மேல் சாத்தவா?

எழுத முடியவில்லை
என்னால்

கண்ணீரின்
கனம் தாங்காமல்
வார்த்தைகள்
நொண்டுகின்றன

காற்றுக்கு
நன்றியில்லையா?

கவிதை வரிகளால்
காற்று மண்டலத்தையே
இனிப்பாக்கினாயே

உனது சுவாசத்துக்கு
அந்தச்
சண்டாளக் காற்று ஏன்
சம்மதிக்க மறுத்தது?

அந்நிய மண் என்பதால்
மரணம் – உன் உயிரை
அடையாமல் தெரியாமல்
அள்ளிப் பருகியதா?

எத்தனை இலக்கியம்
எழுதிய விரல்
எத்தனை கவிதைகள்
முழங்கிய குரல்
எத்தனை கருத்தை
நினைத்த மனம்


மரணத்தின் கஜானாவே

நீ திருடிய பொக்கிஷத்தைத்
திருப்பிக் கொடுத்து விடு

என் தாய்க் கவிஞனே
உன்னை இனி தரிசிப்பதெப்படி?
சாவின் மாளிகைக்கு
ஜன்னல்களும் கிடையாதே

நீ காதலைப் பாடினாய்
அது
இளமையின் தேசிய கீதமானது

நீ சோகம் பாடினாய்
அது
ஆயிரங் கண்ணீருக்கு
ஆறுதல் ஆனது

நீ தத்துவம் பாடினாய்
வாழ்க்கை தனது
முகமூடியைக் கழற்றி
முகத்தைக் காட்டியது

அரசியல் – உன்னை
பொம்மையாக நினைத்தபோதும்
நீ
உண்மையாகத் தானிருந்தாய்

உன் எழுத்து
ஒரு
கால் நூற்றாண்டுக்
கலாசாரத்தில் கலந்திருக்கிறது

“மரணத்தின் பின் என்னை
விமர்சியுங்கள்” என்று
வேண்டிக் கொண்டவனே

இன்று மரணத்தையன்றி
வேறொன்றையும் எமக்கு
விமர்சிக்க வலிமையில்லை

எவரேனும் இறந்தால்
உன் இரங்கற்பாப் படித்து
இதயம் ஆறுவோம்
இன்று இரங்கற்பாவே
இறந்து விட்டதே

உன்னை சந்தித்துப் பேசும்
சர்க்கரைப் பொழுதுகளில்
உன்
கண்களில் வெளிச்சத்தைக்
காதலித்தேனே

இனி அந்த வெளிச்சம் –
உன்
இமைகளைப் பிரித்தாலும்
இருக்குமா?

முப்பது வருஷத் தென்றலே
நீ நின்றுவிட்டதால் –
மனசில் புழுக்கம்
விழிகளில் வியர்வை

உன்
பூத உடலில் விழும்
பூவிலுள்ள தேனெல்லாம்
கண்ணீராய் மாறிவிடும்
கவிஞனே ..

உன்னைச் சந்திப்பது இனிமேல்
சாத்தியமில்லையா?

உடைந்த இருதயம்
ஒட்டாதா?

சொர்க்கத்தில் சந்திக்கலாம்
என்று
சொல்லுகிறார்களே

இந்த மூட நம்பிக்கை
நிஜமாய் இருந்தால்
எனக்கு நிம்மதி கிடைக்கலாம்

வைரமுத்து (1981)