வைரமுத்து

கவியரசு கண்ணதான் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்:
**********************************************************************************
கண்ணதாசன் காதலிக்கத் தெரிந்த ஒரு கவிஞர்.
காதல் என்றால் காதலிகளை மட்டுமல்ல,

சுற்றுவது தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பூமியை..
மயிர்க்கால்களை முத்தமிட்டுப் போகும் மந்தமாருதத்தை….

தேவதைகளின் வர்ணசாலைகளாய் விளங்கும் அந்தி வானத்தை…
சிரித்துக் கொண்டோடும் சிற்றோடைகளை…

சாலைகளை…. மாங்களை … மனிதர்களை …
ரத்தத்தை… கண்ணீரை.. இந்திரியத்தை … வியர்வையை…

சங்கீதத்தில் சந்தோஷத்தை… சந்தோசத்தில் சங்கீதத்தை…

வாழ்க்கையை வாரிக் குடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை…

மனிதர்களின் வஞ்சகத்தை.. மண்ணின் சௌந்தர்யங்களை….

கண்ணுறங்கும் வேளையிலும் காதலித்துத் திளைத்த கவிஞன், ” கண்ணதாசன்”

தான் மனிதர்களை நேசித்தது போலவே! தன்னையும் மனிதர்கள்
நேசிக்க வேண்டும் என்று நினைத்த கவிஞன்…

” எங்கே! எல்லோரும் ஒருமுறை எனக்காக அழுங்கள்! …
பாவிகளே! உங்களுக்கு அழக்கூடத் தெரியவில்லையே! …
உங்களை நம்பி எப்படி சாவது? ” என்று கிளர்ச்சியும்,
கித்தாப்புமாய்க் கேட்டவன் அந்தக் கவிஞன்…

ஆனால், அவனுக்காக ஒரு கோடி ஜோடிக் கண்கள் உண்மையாகவே அழுதன..

நானும் அழுதேன்..

அன்று, கண்ணீர்ப் பேட்டையாகிவிட்ட, கண்ணம்மா பேட்டையில்
எல்லோரும் போனப் பிறகும் நான் அழுதேன்..

எருக்களுக்குக் கீழே தங்கம் எரிந்து கொண்டிருந்தது..

” நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ”

இந்த வரிகளைக் கேட்டிருந்தால் அந்த நித்தியக் கவிஞனை மரணம் நெருங்கியிருக்காது ..

என்ன செய்வது? .. மரணத்திற்குக் காது கேட்காது..

நன்றி..
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்..
( என்ற நூலில் இருந்து சில வரிகள் மட்டும்)