Posts tagged ‘கண்ணதாசன்’

அற்றைத் திங்கள்

கண்ணா 2

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago”

கமல்ஹாசன் சில காலத்திற்கு முன்பு “அற்றை திங்கள்” என்ற காணொளி பக்கம் ஒன்றை தொடங்கினார்.

“அற்றை திங்கள் என்றால் என்ன?”

“Long Long  Ago” அல்லது “Once upon a time” என்பதை சங்கத் தமிழில் சொல்வதுதான் இந்த அற்றைத்திங்கள்.

“சிவாஜி”  படத்தில் வரும் அங்கவை, சங்கவை எனும் பாத்திரங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களின் பெயர்கள் இவை.. எங்கள் தமிழ்க்குலப் பெண்களை எப்படி கண்ணேங் கரேலென காட்டி கிண்டல் அடிக்கலாம் என சங்கருக்கு அப்போது எதிர்ப்பு வேறு தெரிவித்தார்கள்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

என்று புறநானூற்றில் காணப்படும் பாடல் இந்த பாரிவள்ளல் மகள்கள் பாடியதுதான். அதன் பொருள்:

“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்து வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார்.. எங்களுடைய மலைக்குன்றும் அப்போது எங்களிடம்தான் இருந்தது. இந்த நிலாக் காலத்தில் அதை வென்று முரசு ஒலிக்கும் இந்த வேந்தர்கள் எங்கள் மலைக்குன்றையும் அபகரித்து விட்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கின்றோம்”. என கையறு நிலையில் பாடிய பாடலிது.

கடந்தகாலம் பசுமையாக இருந்தால் “அது ஒரு நிலாக்காலம்” என்று நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்துடன் நாம் சொல்வதுண்டு.

“இருவர்” படத்தில் வைரமுத்து இந்த சங்ககால வார்த்தைகளைப் போட்டு

அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

என்று பாடல் எழுதினார்.

அதன் பின்னர் “சிவப்பதிகாரம்” படத்திற்கு கவிஞர் யுகபாரதி “உங்களுக்கு மட்டும்தான் வருமா? எங்களுக்கும் சங்கத்தமிழ் போட்டு பாடல் எழுத வரும்” என்று

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

என்று தன் கவித்திறமையைக் காட்டி அசத்தினார்.

பாரி மகளிர் அங்கவை, சங்கவை பாடிய அந்த பாடலைத்தான் கவிஞர் கண்ணதாசன் எளிமையான வரிகளில்

அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

என்று எளிமையான வார்த்தைகளில் எழுதி விட்டுப் போனார். படித்தவனுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் இருந்த கவிச்சுவையை பாமரனுக்கும் எட்டி வைத்ததால்தான் “கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு” என்று இப்போதும் பாடல் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

– அப்துல் கையூம்

சுயவலிமையால் முன்னுக்கு வந்தவன் கண்ணதாசன்

கண்ணதாசனும் கருணாநிதியும்

கண்ணதாசனைப் புகழ்ந்து கலைஞர் கருணாநிதி எழுதிய வார்த்தைகள்

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாம் இளைஞர்களும், மாணவர்களும் தங்களின் சுய வலிமையை உணர்ந்து, அதனைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்திட, வாகை சூடிட- இன்றைய சிந்தனையும் செயலும் சிறப்பாகப் பயன்படுமென்ற மன உறுதி மலைப்பாறை போல் எனக்கு உண்டு. எடுத்துக்காட்டாக என்னுயிர் நண்பர்களில் ஒருவரான கண்ணதாசனை உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்.

அவரது சுய வலிமைக்கும், சுய முயற்சிக்கும் இரண்டையும் பயன்படுத்தி அவர் பெற்ற வெற்றிக்கும் சான்றாக இதோ ஓர் ஆதாரபூர்வமான தகவல். இத் தகவல் 16-10-2005 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்துள்ளது. கவிஞரின் அண்ணன் ஏ.எல் சீனிவாசனின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பனிடமிருந்து கிடைத்த கண்ணதாசனின கடிதம் அது. அவர், தன் அண்ணனுக்கு எழுதிய கடிதம் அவர் விடுதியில் தங்கி, முத்தையா என்ற இயற்பெயருடன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, விடுதியில் தன் உபயோகத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்து அண்ணனுக்குப் பட்டியலிட்டு அக்கடிதம் எழுதியுள்ளார்.

என நண்பர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது தலையணை உறையை ‘தலகாணி உரை” என்று எழுதியிருப்பது தான் நாம் கவனிக்கத்தக்கது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது கண்ணதாசன், முத்தையாவாக இருந்து தலையணை உறை என்பதைத் தலகாணி உரை என்று தவறாக எழுதியதற்காகத் தமிழ்த்தாய் அவரைச் சபித்துச் சாபமிட்டுவிட்டாளா? இல்லை! இல்லவே இல்லை!

தமிழ்த்தாய் அவரைத் தாவி அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள்! முயற்சிப்படிகளில் ஏறுக என்று கூறி உயர்த்திவிட்டாள்.

அதன்படி கண்ணதாசன் சுய வலிமையைப் பயன்படுத்தினார். அந்த வலிமையைப் பெருக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டார்;பாடுபட்டார். தமிழாசிரியராகப் பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரை ஆக்கிக் கொண்டு முயற்சியால் முன்னேறினார். முறையாகத் தமிழ் கற்றார்.

சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கூடத்து ஒத்திகை அரங்கில் அவரை எனக்கு கவி.காமு.ஷெரீப், கவிஞர் மருதகாசி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தபோது அவருடன் இருந்த அந்தத் திரைக்கூடத்து மேலாளர் சுலைமான் என்பார் என்னிடம் கண்ணதாசனைக் காட்டி ‘சார்! இவர் இங்கே ‘சண்டமாருதம்” பத்திரிகை ஆசிரியர் ‘எழுந்தால் காள மேகந்தான்!” என்பதுபோல ‘இவர் எழுந்தால் சண்டமாருதம் தான்” என்று புகழ்ந்ததை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

தொடர்ந்து பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் ‘கவிஞர்” எனப் புகழ் மகுடம் சூட்டினேன். அதன் தொடர்ச்சியாகப் புவியில் தமிழர் வாழும் இடமெல்லாம் கவியரசராகக் கோலோச்சத் தொடங்கினார்.

காலத்தின் கோலம், மாற்று முகாமில் நின்று அவர் என்னைத் திட்டித் தீர்த்த போதும் ‘உன் தித்திக்கும் தமிழுக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேனய்யா!” என்றே சொல்லியிருக்கிறேன்.

திரைப்பாடல்களா? வார்த்தைகள் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்கு நோக்கித் தெண்டனிட்டன!

கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன!

‘தலையணை உறை” என்பதை ”தலகாணி உரை” என்று எழுதியவர் தமிழுலகின் உச்சாணியில் ஒளியுமிழ்பவரானதற்கு சுயவலிமையும், சுய முயற்சியும்தான் தலையாய காரணம் என்பதை உணர்ந்து கொண்டால் இன்றைய இளைஞர்கள், அந்தக் காரணத்தைக் கருத்தில் பதிய வைத்துப் பணியாற்றினால் கோபுரத்துக் கலசங்களாகலாமன்றோ! அத்துடன் கொள்கை உறுதியும் இணைந்தால் கலசங்கள கலங்கரை விளக்கங்களாகவும் மாறுவது உறுதியன்றோ?

– கலைஞர் மு.கருணாநிதி

பழைய நண்பர்களுடன் கவிஞர் கண்ணதாசன்

எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்


by ஜெகதீஸ்வரன்

 
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

 

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

 

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

 

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

 

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

 

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

 

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

 

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

 

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

 

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

 

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

 

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

 

“இருக்காதே” என்றேன்.

 

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

 

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

 

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

 

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

 

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

 

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

 

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

 

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

 

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

 

1971 பொதுத் தேர்தலே சான்று.

 

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

 

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

 

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

 

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

 

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

 

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

 

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

 

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

 

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

 

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

 

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

 

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

 

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

 

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

 

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

 

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

 

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

 

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

 

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

 

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

 

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

 

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

 

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

 

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

 

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

 

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

 

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

 

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

 

– என்றும் அவர் காட்டினார்.

 

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

 

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

 

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

 

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

 

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

 

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

 

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

 

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

 

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

 

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

 

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

 

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

 

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

 

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

 

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

 

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

 

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

 

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

 

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

 

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

 

ஆதாரம் –

 

கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

 

 

 

பாரதி பாடலை மாற்றி எழுதிய கண்ணதாசன்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே –எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே!
காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி – என
மேவிய ஆறு பலவினிலும் – உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!
நீலத்திரைக்கடல் ஓரத்திலே –நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!
கல்விசிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு!
சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி – அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!
விண்ணை இடிக்கும் தலைஇமயம் –எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னைப் பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!