கவிஞர் நாஞ்சில் ஷா

கவிஞர் நாஞ்சில் ஷா

வாழ்க்கையெனும் இரயில் பயணத்தில் நம்மோடு பயணிப்பவர்கள் பற்பலர். அற்ப நபர்களின் நினைவுகளை, சற்று நேரத்தில், சந்திப்பு தாண்டியதும் சத்தமின்றி இறக்கி வைத்து விடுகிறோம். சொற்ப நபர்களின் நினைவுகளை மாத்திரம் கர்ப்பக்கிரகத்து சிலைகளென பத்திரமாய் நெஞ்சினில் பதுக்கி வைத்து நித்தம் நித்தம் போற்றுகிறோம்.

கன்னித்தமிழ் பெருமையினை; கணக்கின்றி எனக்கு; காலங்கடந்து நிற்கும் வகையில்; கனிவாய் எடுத்துரைத்து; கவிதைக்குரிய யாப்பிலக்கணத்தை கற்றுக் கொடுத்த – காப்பியங்கள் வடித்த – கண்ணியத்திற்குரிய மறைந்த என் தமிழாசிரியர் நாஞ்சில் ஷாவை கண்டிப்பாய் என் மனதிலிருந்து களைய இயலாது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன் “நாஞ்சில்” என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொள்வது அழகுசேர் மரபு. நாஞ்சில் கி.மனோகரன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் சம்பத் நல்லதோர் உதாரணம். நாஞ்சில் மண் பெருமைகளை நெஞ்சத்தின் மஞ்சத்தில் நிரந்தரமாய்ச் சுமந்து போற்றிய வாஞ்சைமிகு ஆசான் என்னாசான்.

அடர்த்தியான மீசை, அன்பொழுகும் பேச்சு அருந்தமிழாய் இருந்தது அவர் விடும் மூச்சு. கனிவான அவரது கன்னித்தமிழ் அரவணைப்பில் நாங்கள் கட்டுண்டுக் கிடந்தோம். வாழ்க்கைப் பயணத்தில் அவரது அறிவுரைகள் மாணவர்களாகிய எங்களுக்கு குதிரைச் சக்தியாய் இயங்கி “கமான்”… கமான்”.. என்றது. கவியரங்கம் நடத்தி என்னை நடுவராக்கி அழகு பார்த்தவர் அவர்.

நேர் நேர் தேமா ; நிரை நேர் புளிமா,
நிரை நிரை கருவிளம், நேர் நிரை கூவிளம்
நேர் நேர் நிரை தேமாங்கனி,
நிரை நேர் நிரை புளிமாங்கனி
நிரை நிரை நிரை கருவிளங்கனி
நேர் நிரை நிரை கூவிளங்கனி

என யாப்பிலக்கணத்தை வாய்ப்பாடு போல் தினமும் ஒப்பிக்கவைத்து எங்கள் மனதில் படிய வைத்தவர். தவறாக உரைத்தால் முறைப்பார்; முகத்துக்கு நேரே கடிந்தும் கொள்வார்.

நான் படித்த அதே வண்டலூர் கிரஸெண்ட் பள்ளியில்தான் கண்ணதாசனின் அருமை புதல்வன் மறைந்த என் நண்பன் கலைவாணனும் படித்து வந்தான். ஒருமுறை எங்கள் பள்ளிக்கு கண்ணதாசனை அழைத்து வந்து அவர் முன்னிலையில் என்னைக் கவிதை பாட வைத்தார் என் தமிழாசான் நாஞ்சில் ஷா..

மாணவப் பருவத்தில் கவியரங்கத்தில் நடுவராக கட்டுரையாளர்

கவியரங்கத்தில் மாணவப் பருவத்தில் மீசை வரைந்துக் கொண்டு நான் (நடுவில்)

வெண்பாவுடன் தொடங்கி ‘அழுகை’ என்ற தலைப்பில் பண்-பா படித்தேன். மண்டபத்தில் யாரும் எழுதித் தரவில்லை. சிறுவனாய் இருந்த நானே இயற்றி, நானே வாசித்தேன் அந்த நவரச நாயகன் முன்னே.

விண்ணழுதால் மழையாகும்
—வளங்கொழிக்க வழியாகும்
பெண்ணழுதால் நகையாகும்
—பணம்கரைய வழியாகும்
பொன்னழுதால் நகையாகும்
—பொற்கொல்லர் பணியாகும்
மனமழுதால் கவியாகும்
—மலையழுதால் நதியாகும்

எனத் தொடங்கி இறுதியில் //தாயழுத கண்ணீரின் தாலாட்டே நாமாகும்// என்ற வரிகளுடன் அந்த தமிழ்க்கவிதை முற்றுபெறும்..

வாசித்து முடித்ததும் வையம் புகழ் கவிஞனின் வளைக்கரம் என்னை அணைத்தது. வாயாரப் புகழ்ந்தது. ‘வசிட்டரின் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்’ பெற்றதை வருணிக்க வார்த்தைகளே இல்லை.

“கண்ணதாசன்” என்ற இதழுக்கு கவியரசர் ஆசிரியராக களம் கண்ட காலக்கட்டமது. அதில் “ஐயம் அகற்று” என்ற தலைப்பில் ஒரு பகுதி. மிகுதியாய் வாசிக்கப்படும் பகுதி அது. வாசகர்களின் சந்தேகத்திற்கான பதிலை வஞ்சனையின்றி வாரி வாரி வழங்குவார் கவியரசர்.

1978-ஆம் ஆண்டு ஜனவரி மாத இதழில் கவிதைவரிகளால் ஒரு கேள்விக்கணையைத் தொடுத்திருந்தார் நாஞ்சில் ஷா. கண்ணதாசன் மாத்திரம் சளைத்தவரா என்ன..? பாட்டுக்கு எசப்பாட்டு அவருக்கு அதுபாட்டுக்கு வராதா..?

நாஞ்சில் ஷா கவிதையாக கேட்ட அக்கேள்விக்கு நறுக்கென்று கவிதையாகவே பதில் தந்தார் கவியரசர். அந்தக் கவிதை கவியரசரின் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு வாக்குமூலமாக அமைந்து விட்டது. சரித்திரச் சான்று பகரும் சரியான சுயவிளக்கம் அது.

மலை போன்ற தத்துவத்தை
—மலை வாழைப் பழமே யாக்கி
நிலையான தமிழ்த்தேன் பாகில்
—நியமமுடன் சேர்த்து நல்கும்
கலைஞானக் கவிதை வேந்தே!
—காப்பியங்கள் ஆர்த்து ஞாலத்
தலைமேலே அமரப் போகும்
—சாதனை தான் எப்போ தென்பீர்?

“கவிதைகள், பாடல்கள் புனைந்த நீங்கள் காப்பியங்கள் பல வடித்து புவித் தலைமை கொள்ளப் போவது எப்போது…?” என்ற கவிஞர் நாஞ்சில் ஷாவின் கேள்விக்கு கவியரசர் தந்த பதில் காலங்காலமாய் மனதில் நிற்கிறது.

நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்
—நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்
ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும்
—அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்
சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்
—தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?
வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்
—வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!

“காப்பியங்கள் புனைவது கம்ப சித்திரமல்ல. ஆனால் அதற்கு முதற்கண் அலைக்கழிக்காத மனம் வேண்டும்; போதிய கால அவகாசம் வேண்டும்; தகாத உறவுகளை நான் களைய வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக “துட்டு காசு மணி மணி” வேண்டும்” என்று பட்டென்று பயமின்றி கூறும் மனத்துணிச்சல் கவியரசர் ஒருவருக்குத்தான் இருந்தது.

இதே பாணியை பின்பற்றித்தான் பிறிதொருமுறை “தமிழ் திரைப்பட பாடல்கள் மெட்டுக்கு பாட்டா? , பாட்டுக்கு மெட்டா?” என்ற கேள்விக்கு “துட்டுக்கு பாட்டு ” என்று சட்டென்று விட்டடித்தார் கவிஞர் வாலி.

‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியவர் கவிஞர் நாஞ்சில் ஷா. 1977- ஆம் ஆண்டு “மில்லத் பிரிண்டர்ஸ்” இந்நூலை அச்சிட்டு வெளியிட்டது. இந்நூலுக்கு அணிந்துரை வேண்டும் என்று அவர் கேட்டபோது தயக்கமின்றி தமிழ்க்கவிதை யாத்துத் தந்தார் கவியரசர். இதோ அந்தக் கவிதை

நாஞ்சில் ஷா காட்டுகின்ற
—நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
—மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
—கால்வலிக்க நான் நடந்தேன்;
எத்தனையோ அற்புதங்கள்
—எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
—அளித்தமகன் வாழ்க்கையிலே!”

என்று பாடினார் கண்ணதாசன். “நபிகள் நாயகள் பிள்ளைத் தமிழ்” என்ற இக்கவிதை நூலை கண்ணுற்ற பின்னர் அவருக்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை மென்மேலும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

“சீனம் சென்றேனும் ஞானம் தேடுக” என்ற நபிகளாரின் பொன்மொழிக்கேற்ப மேலும் ஞானம் தேடுதற்கு நூல்களை நாடி கடைகடையாக கால்வலிக்க ஏறி இறங்குகிறார் கவிஞர். இதைத்தான் ‘அறிவுத்தாகம்’ என்கிறார்கள். “ஆமினா பெற்ர அண்ணலாரின் வாழ்க்கையில்தான் எத்தனை அதிசயங்கள்! எத்தனை அற்புதங்கள்!” என அறிந்து வியக்கிறார், மனதில் உதித்த எண்ணங்களை அப்படியே கவிதையாக வடித்து இன்புறுகிறார்.

ஒரு காலத்தில் நாத்திகம் பேசிய அதே கண்ணதாசன்தான் பின்வரும் காலத்தில் “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற நூலையும், “ஏசு காவியம்” என்ற நூலையும் எழுதினார். அதே கண்ணதாசன்தான் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் “அல் ஃபாத்திஹா” முதல் அத்தியாயத்துக்கு எளிய நடையில் இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் மொழிபெயர்த்தார்.

சமய பாகுபாடு பாராது உள்ளதை உள்ளபடி மனம் திறந்து பாராட்டுவது கவியரசரின் இயல்பு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத பிள்ளை உள்ளம் கொண்ட வெள்ளை மனது சொல் வைத்து விளையாடும் அந்த சூத்திரதாரியுடையது!!!

பள்ளி மாணவர்களுடன் நாஞ்சில் ஷா (வலது கோடியில் உட்கார்ந்திருப்பவர்)

வகுப்புத்தோழர்களுடன் நாஞ்சில் ஷாவுடன் நான் (கடைசி வரிசையில் வலதுகோடியில்)

அப்துல் கையூம்
பஹ்ரைன்